Monday, July 29, 2013

மரணத்தின் வண்ணம்

மீண்ட கனவுகளை
கலைத்துவிட எண்ணி
உரசிச் செல்கிறது
மஞ்சள் காற்று

வெளியெறும் உதிரத்தால்
நிறைந்து தளும்பும்
நாகத்தின் தலைமிதக்கும்
சிகப்புமீன் தொட்டி

புகை தவிர்த்த பெருநெருப்பு 
உடல் முழுதும் பற்றி எரிவதை
விழி சுறுக்கிப் பார்க்கிறது
மூன்றாவது பச்சைக் கண்

காலம் கரைத்துண்ட
இத்தனையும் எளிதில்
அரைத்துச் செரிக்கிறது
என் கருப்பு மரணம்Sunday, July 28, 2013

சுஜாதாவின் 'சுக துக்கம்' - சிறுகதை பற்றி....

சுஜாதா எழுதிய ‘சுக துக்கம்’ என்ற சிறுகதையை நேற்று அவரின் தொகுப்பிலிருந்து எடுத்துப்படித்தேன். 1997 ல் எழுதியிருக்கிறார். மில் தொழிலாளி ஒருவரின் மரணம் நிகழ்ந்துவிட்டதைச் சொல்லி ஆரம்பிக்கிறது கதை. அது ஒரு தொழிற்சாலை விபத்து. இங்கு கதை சொல்லியாக இருப்பவர் இறந்தவரின் நண்பரான  சக மில் தொழிலாளி ஒருவர். விபத்து நடப்பதற்குச் சற்று முன்பாகத்தான் இறந்தவருடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு வருகிறார்.
 
கதை வேறு ஒற்றும் இல்லை. அந்த மரணச் செய்தியை இறந்தவருடைய மனைவியிடம் முதலில் தெரிவிக்க வேண்டி நண்பர் என்ற முறையில் இவரை அனுப்ப நிர்வாகம் முடிவுசெய்கிறது. இவர் தயங்குகிறார். அவ்வளவு தைரியம் தனக்கு இல்லை என்று கருதுகிறார். கெட்ட செய்தியை எடுத்துக்கொண்டு சொல்ல இவருக்கு மனம் ஒப்பவில்லை. ‘அவருடைய வீட்டுக்குப் போய் அவர் மரணச் செய்தியைச் சொல்லுமாறு செய்துவிட்டாயே’ என்று கடவுளிடம் குறைபட்டுக் கொள்கிறார். இருந்தாலும் மேலதிகாரிகளின் நிர்பந்தத்தால் நடந்த விபரீதத்தைத் தெரிவிக்க அனுப்பிவைக்கப்படுகிறார். மிகுந்த மனஉலைச்சலுடன் இறந்த தன் நண்பரின் விட்டுக்குச் செல்கிறார். கதவைத்தட்டுகிறார்.

இதுவரைக்குமான இப்படிப்பட்ட கதையை யார் வேண்டுமானாலும் எழுதிவிடலாம். ஆனால் இதற்குப் பிறகு கதை ஒரே ஒரு வாக்கியத்தோடு முடிவு பெறும். அந்த இறுதி வாக்கியம் தான் இந்தச் சராசரிக் கதையை மிக அபாரமான சிறுகதையாக உருமாற்றம் செய்யும். சுஜாதாவின் இந்த ‘சுக துக்கம்’ கதை ஒரு எளிமையான சிறுகதை ஆக்கத்துக்கு மிகச்சிறந்த உதாரணம்.

மறுப்பு

நீ எப்போதும் போல்
இப்போதும் மறுத்துவிட்டாய்
நான் எப்போதும் போல்
இப்போதும் காத்திருப்பேன்

நீ இப்போது போல்
இனி எப்போதும் மறுத்துவிட்டால்
நான் எப்போதும் போல்
அப்போது இருக்க மாட்டேன்.

Monday, July 22, 2013

வா.மு.கோமுவின் எழுத்தை முன் வைத்து......

வா.மு.கோமுவின் எழுத்தை நான் சந்திக்க நேர்ந்தது சிறுபத்திரிக்கையின் மூலமான வாசிப்பின் போதுதான். எங்கள் கொங்குப்பகுதியின் விளிம்பு நிலை மனிதர்கள் பற்றிய பதிவாகத்தான் அது என் அகத்தில் செயல்புரியத்துவங்கியது. ஆரம்பம் முதலே அவருடைய எழுத்துகள் என்னை எவ்விதத்திலும் அசூசை கொள்ளச்செய்யவில்லை.
காரணம், எங்கள் பகுதியின் வட்டார வழக்கிலும் வாழ்க்கை நடைமுறையிலும் மிகச் சாதாரணமாகப் புழக்கத்தில் உள்ள கதைகளையும் சொல்லாடல்களையும் வாழ்க்கையின் மறுபக்கத்தையும் தான் வா.மு.கோமு வின் எழுத்தில் நான் கண்டடைந்தேன். அவ்வகையான வாழ்க்கைமுறை எனக்கு வாய்க்கவில்லையென்றாலும்கூட அதை அருகிருந்து விழிவிரித்து ஆச்சர்யமாகப் பார்த்து வளர்ந்தவன் என்ற முறையில் அந்த வெள்ளந்தியான குசும்பு கொப்பளிக்கும் வாழ்க்கையின் சாரம் வா.மு.கோமுவின் எழுத்தில் மிகத் துல்லியமாகப் பதிவாகிவந்ததை உணர்ந்தேன்.

வா.மு.கோமுவுடைய எழுத்தின் வீரியம் மிகத் தீவிரமாக வெளிப்பட்டது அவரின் சிறுபத்திரிக்கை தொடர்பான காலகட்டத்தில் தான். அங்கு புரையோடிக்கிடக்கும் புறக்கணிப்பு அரசியல்காரணமாகவும் தன்னுடைய லௌகீக நெருக்கடிகள் காரணமாகவும் மெல்ல வெகுஜன எழுத்துக்குத் தன்னைத் தானே மனவிருப்பமின்றி நகர்த்திக்கொண்டு வந்தவர். சிறுபத்திரிக்கை உலகில் அவர் செரிவுகூட்டி எழுதிய அப்பட்டமான பாலியல் எழுத்துக்கள் பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகப் போகவே அவர்கள் வா.மு.கோமு மீது பலவகை அவதுாறுகளை மிக நாசூக்காக சந்தியில் உலவவிட்டார்கள். அவர் மீது அவர்கள் சுமத்தும் குற்றம் என்னவென்றால் பாலியலை மட்டுமே தன் எழுத்தில் முன்வைக்கிறார் என்பதே.

அவர் மீதான குற்றச்சாட்டை நான் இரண்டு விதமாகப் பார்க்கிறேன் ஒன்று, 'அவர் பாலியலை எழுதுகிறார்.' இன்னொன்று, 'அவர் பாலியலை மட்டுமே எழுதுகிறார்.'

முதல் விஷயம் சிக்கல் இல்லாதது. பெரிய விளக்கம் தேவையில்லாதது. காரணம், இலக்கியத்தில் பாலியல் சார்ந்த எழுத்தும் ஓர் அங்கம் என்பது இலக்கியம் உணர்ந்த அனைவருக்கும் தெரியும். பாலியல் சார்ந்தும் தவிர்த்தும் எழுதுவதென்பது அவரவர் தேர்வு மற்றும் திறன் சார்ந்தது.

இரண்டாவது விஷயம்தான் முக்கியமானது. இலக்கியம் என்பதே அனுபவங்களின் கடத்தல் தானே. தத்தமது திறனுக்குத் தக்கவாறு கைகூடும் வடிவவகைகளில் அனுபவங்கள் பதிவுசெய்யப்படுகின்றன. மனிதமனம் மிகுந்த நுட்பம் கொண்டது. சிடுக்குகள் நிறைந்தது. பாலியல் அனுபவம் என்பது மனித மனத்தின் பல்வேறு அடுக்குகளில் மிக சூக்குமமாக நிகழக்கூடியவை மட்டுமல்லாது ஒப்புமைப்படுத்த முடியாதவையும் கூட. எல்லோருக்குள்ளும் நிகழும் அந்த அனுபவங்கள் ஒரு கலைஞனுக்குள்ளும் நிகழ்ந்து அவன் மூலம் அது கலையாக வெளிப்படும் போது அதன் துாலவடிவம் எளிதில் புரிபடாத புதிர்த் தன்மை கொண்டதாகவே இருக்கும்.

வா.மு.கோமு வின் பாலியல் தொடர்பான கலை வடிவங்களைப் பற்றிய புரிதலோ அவரை எதிர்கொள்ளத் தேவையான மனவார்ப்போ இல்லாமல் அவரை அணுகுவது அவருக்கும் சரி நமக்கும் சரி இரண்டு தரப்புக்குமான மன அடுக்கைச் சீர்குலைக்கவே செய்யும்..

வா.மு.கோமு என் நெருங்கிய நண்பர்கள் வட்டத்தில் இருப்பவர் அல்ல. ஆனாலும் பல சந்தர்ப்பங்களில் அவருடன் இருந்திருக்கிறேன். அவரை அவதானித்திருக்கிறேன். அவரின் எழுத்து வேலையை அருகிருந்து பார்த்து வியந்திருக்கிறேன். ஒரு பித்து நிலையில் தன் கதைகளை எழுதக்கூடியவர். படைப்புகளை எழுதிவிட்டுச் செப்பனிட்டுத்திருத்தும் அவசியமில்லாது கற்பனையின் பிரவாகத்துக்கு ஒத்திசைந்து தன் எழுத்தை நேரடியாக இயங்க விடுபவர். அவரை அவர் போக்கில் இயங்க விடுவோம். தமிழ் இலக்கியம் அவருடைய எழுத்து வகைக்கும் இடம் கொடுக்கும் என்று அதன் வரலாறு நெடுகிலும் உதாரணம் வைத்திருக்கிறது. அவருடைய எழுத்தில் உடன்பாடில்லாதவர்கள் சற்று ஒதுங்கிக் கொள்வோம். தயவுசெய்து வா.மு.கோமுவுக்கு நாம் ஆடைகளை அணிய முயற்சிக்க வேண்டாம். அவர் நிர்வாணத்தை விரும்புகிறவர்.

Friday, July 5, 2013

சாரி டாடி - குறும்படம் பற்றி….


திரைமொழி நேர்த்தியாகக் கையாளப்பட்டிருக்கிறது. வாய் மொழியின் தேவையின்றி காட்சிகளால் அடுக்கப்பட்ட அற்புதமான திரைக்கதை. பின்னணியில் டிவியின் சப்தம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுக் கொண்டு வந்து, அந்தப் பெண் சட்டைப் பையில் கையை விட்டு எடுத்த உடனே இசையை ஆரம்பிக்கும் நுட்பம் வியக்க வைக்கிறது. பொருத்தமான ஷாட்கள், லைட்டிங், கலரிங் என்று ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் மிக அருமை. குப்பைத் தொட்டியில் தந்தையின் பாய்ண்ட் ஆஃப் வியூவில் சிகரெட் பாக்கட் காட்டப் படுவது பார்வையாளருக்கு கவனப்படாமல் விடுபட்டுவிடுமோ என்ற மிக அவசியமான தேவை கருதி மீண்டும் ஒரு கட் ஷாட் மூலம் அந்தப் பெண் எடுப்பது சிகரெட் பாக்கட் தான் என்று முழுமைபெருகிறது. ”சாரி டாடி” குறுப்படத்தின் இயக்குநர் அரவிந்த்.ஜி.வி க்கு வாழ்த்துகள்.


படக்காட்சி இணைப்பு  : http://www.youtube.com/watch?v=J7WOOwhAlHA
 

நந்தினியின் அப்பா - சிறுகதை பற்றி...

இப்போதெல்லாம் நான் சிறுகதைகள் படிப்பதே இல்லை. வேளைப் பளுவின் அழுத்தம் காரணமாக நீண்ட நாட்களாகப் படிப்பைச் சற்று தள்ளியே நிறுத்தியிருந்தேன். இன்று சுஜாதா செல்வராஜின் கதை ஒன்றை “கல்கி“யில் (07.07.2013-இதழ்) படிக்க முடிவானது. என்னைப் படிக்கத்துாண்டியது “நந்தினியின் அப்பா” என்ற கதையின் தலைப்பு.. இந்தத் தலைப்பு எனக்குள் ஏற்படுத்திய ஆர்வத்துக்குக் காரணம் நானும் கூட ஒரு நந்தினியின் அப்பாதான். ஆம் என் மகள் பெயர் நந்தினி.

 
ஆறாம் வகுப்புப் படிக்கும் நந்தினியின் வயதுக்கே உரிய பால்யகால நினைவுகளோடும் தன் தந்தையைப் பற்றிய துயரம் கவியும் நினைவுகளோடும் பயணிக்  கும் இந்த சிறுகதை கிராமக்களத்தில் நிகழும் ஒரு தவிர்க்க முடியா நிதர்சனத்தின் பதிவு.

 
கிராமப்புறங்களில் உள்ள எத்தனையோ மனிதர்கள் தங்களின் நடுநிலை தவறா நேர்மை மனத்தாலும் வாக்குமாறா நாக்கு சுத்தத்தாலும்  தங்களைச் சற்றியுள்ள சக மனிதர்களின் மனதில் மிகப்பெரிய அன்பையும் மரியாதையையும் பெற்றிருந்த போதிலும் சிலபல தீயபழக்கங்களால் தங்களையும் தங்கள் குடும்பத்தையும் தீராத் துயரில் ஆழ்த்திக் கொண்டிருந்துவிட்டு வடுக்களோடு மறைந்து போயிருக்கிறார்கள். . கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. “சைனம் சொல்லும் பல்லி சோற்றுப் பானையில் விழுந்தது” என்று. அப்படிச் சோற்றுப் பானையில் விழுந்த ஒரு பல்லிதான் சுஜாதா செல்வராஜ் தன் எழுத்தின் மூலம் நம் கண்முன்னே உலவவிடும் “நந்தினியின் அப்பா”.

 
நடப்பு நிகழ்வுகளுக்கும் நடந்த நினைவுகளுக்குமான காட்சிமாறுதல்களில் லாவகமாகத் தடம் மாறும் எழுத்து நடை, சிறுகதைகளுக்கே உரிய துல்லியமான காட்சிச் சித்திரம், சிதறாத மையம், கதையை முடிக்கும் இடத்தில் இருந்து வாசகரின் கற்பனைக்கு இடம் கொடுத்து மீண்டும் அவர்கள் மனதில் கதையைத் தொடரச் செய்யவல்ல நுட்பம் என்று சுஜா வின் எழுத்துத் திறன் போற்றுதலுக்குரியது. அவர் கதைகளை நான் முன்னம் படித்ததில்லை. அவர் நிறைய எழுத வாழ்த்துகள்.