Wednesday, May 16, 2018

பாலகுமாரனுக்கு அஞ்சலி

போய்வாருங்கள்...

எல்லோருக்கும் போலவே எனக்கும் பாலகுமாரன். என் மனதோடு உரையாடியவர். என் குணஇயல்புகளில் கொஞ்சம் மாற்றத்தைக் கொண்டுவந்தவர். எனக்குள் இருந்த காதலை உணரச் செய்தவர். என் காமத்தை மலரச் செய்தவர். தறிகெட்டுத் திரிந்த என்னை கொஞ்சம் ஆற்றுப்படுத்தியவர்.

என் பதின்பருவத்திலிருந்து நான் படித்துச் சேர்த்த அவர் புத்தகங்களை மெல்ல என் கைகளால் வருடினேன். பழைய ஞாபகங்களில் மனம் கரைந்தது. கண்கள் பனித்தன. கொஞ்சம் அழுதுவிட்டு துாங்கிப்போனேன்.

உங்கள் எளிய வாசகனாக உங்களை வழியனுப்புகிறேன்.
போய் வாருங்கள் பாலகுமாரன் சார்.

_வீரா

Tuesday, February 27, 2018

சந்தியாராகம் - திரைப்படம் பற்றி..
முதுமையின் தனிமை

நாம் எல்லோரும் முதுமையை அவசியம் எதிர்கொண்டே ஆகவேண்டியிருக்கிறது. வறுமையுடனும் நோயுடனும் பயத்துடனும் கவலையுடனும் விரக்தியுடனும் தான் முதுமை பெரும்பாலோருக்கு வாய்க்கிறது. அதிலும் முதுமையில் தனிமை என்பது இன்னும் கூடுதல் பதட்டத்தை ஏற்படுத்தக் கூடியது.

கூட்டுக் குடும்ப அமைப்பு சிதைவைச் சந்திக்க ஆரம்பித்த எண்பதுகளில் அதனுடைய தாக்கம் முதியவர்களின் வாழ்க்கையில் தான் முதன் முதலில் உணரப்பட்டது. பன்னாட்டு நிறுவனங்களின் வேலைவாய்ப்புத் திட்டங்கள் மத்தியதர வர்க்கத்தை எட்டாத நிலையில் அவர்களது குடும்பங்கள் கடும் பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பராமரிக்க வேண்டிய குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொருத்தே அவர்களுடைய அன்றாட வாழ்வின் சந்தோஷங்கள் தீர்மானிக்கப்பட்டன. இந்தச் சூழலின் பின்னனியில்தான் பாலுமகேந்திரா தன் ‘சத்தியாராகத்தை’ மீட்டினார்.

ஒரு நாடகக் கலைஞன் தன் முதுமையை எப்படி எதிர்கொள்கிறான் என்பதைப் பற்றி அதில் கதையாடினார். முதுமை வாழ்வின் தனிமைத்துயரைத் தாங்கியபடி, தன் இருத்தலியலுக்கான தவிப்பை ஒரு முதிய கலைஞன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதை அவனுடைய சில நெருக்கடியான வாழ்வுத் தருணங்களின் வழியாகத் தொகுத்துக் காட்டினார்.

கிராமத்தில் வெள்ளந்தியாகத் தன் முதுமையைக் கழிக்கும் சொக்கலிங்கபாகவதர் தன் மனைவியின் இறப்புக்குப் பின்னால் தனக்கிருக்கும் ஒரே ஆதரவான தன் தம்பி மகன் வாசுவைக் காண சென்னை வருகிறார். பெரியம்மாவின் இறப்புக்கு சூழ்நிலை காரணமாகச் செல்ல முடியாத வாசுவும் அவன் மனைவி துளசியும் அவரை அன்புடன் வரவேற்று உபசரிக்கிறார்கள். சாவுக்கு வரமுடியாததன் காரணத்தை விளக்கி வருத்தம் தெரிவிக்கிறார்கள். தன் எதிர்காலம் பற்றிய எந்தத் திட்டமும் இல்லாமல் வந்திருக்கும் பெரியவரின் இருப்பு தம்பதியர்களைக் கவலை கொள்ள வைக்கிறது.  காரணம், அவர்களோ எல்.கே.ஜி படிக்கும் தன் ஒற்றை மகளை வைத்துக் கொண்டு, நிறைவற்ற பொருளாதார நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வாசு ஒரு சிறிய வேலையில் இருந்து கொண்டு சொற்ப வருமானம் ஈட்டி தன் அளவான குடும்பத்தை சிரமப்பட்டு நடத்தும் ஒரு கீழ் மத்தியதர வர்க்க மனிதன். மட்டுமல்லாமல் வாசுவின் மனைவியும் வயிற்றில் தங்கள் இரண்டாவது குழந்தையைச் சுமந்து கொண்டு நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறாள்.

வேறெந்த உற்றார் உறவுமற்ற அந்த முதிய மனிதன் இருத்தலில் சார்ந்த நெருக்கடியான இந்தச் சூழலலை உணர்ந்து தன் வாழ்வை முறையாக அமைத்துக் கொள்வதை மேலான நேர்த்தியோடு பதிவு செய்துள்ள படம் தான் ‘சந்தியாராகம்’

நகரவாழ்வின் நெருக்கடிகளையும்  மத்தியதரக் குடும்பங்களின் நிர்பந்தங்களையும் உறவுமுறைகளின் வீழ்ச்சியையும் பரஸ்பரப் புரிதல்களின் சிக்கல்களையும் அரசின் நிர்வாக அவலங்களையும் முதியோர் இல்லங்களின் நியாயமான தேவைகளையும் துல்லியமாக ஆய்ந்து அனுபவமாக்குகிறது இந்தத் திரைக்கதை.

இதில் பேசப்படும் முதுமைவாழ்வு ஒரு கலைஞனுடையதாக இருப்பது இந்தப் படைப்பை மேலும் உயிர்ப்பு மிக்கதாக ஆக்குகிறது. இதில் கதையின் நாயகன் சொக்கலிங்கபாகவதர் ஒரு கலைஞனாக இருக்கிறார். கலைஞனின் மனம் குழந்தைத் தனங்களால் நிரம்பியது. கட்டுப்பாடுகள் அற்றது. புறச்சூழ்நிலைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாதது. அவ்வகைக்  குழந்தைத்தனங்களின் வெளிப்பாடுகளை முறையான காட்சிகளாக பாலுமகேந்திரா வடிவமைத்துக் கொடுக்க, சொக்கலிங்க பாகவதர் தன் அபாரமான உடல்மொழியாலும் இயல்பான முகபாவனைகளாலும் அற்புதமாக வெளிப்படுத்தி அந்தப் பாத்திரத்துக்கு உயிரூட்டியிக்கிறார். ஒரு கலைஞனுக்கு இயல்பாகவே இருக்கக் கூடிய தன்மான உணர்வு, அனுசரித்துப் போகும் குணம், சட்டென்று சூழ்நிலையைப் புரிந்து கொள்ளும் நுண்ணுணர்வு போன்றவைகளும் பாகவதரின் பாத்திரத்தை வடிவமைப்பதில் செய்நேர்த்தியுடன் கையாளப்பட்டிருக்கிறது. இவ்விதச் சேர்மானங்களாலேயே அந்த முதியகலைஞன் இதில் உயிர்ப்புடன் எழுந்து நின்று தன் இறுதிவாழ்வை நமக்கு நெகிழ்ச்சியுடன் நிகழ்த்திக் காட்ட முடிந்தது.

இந்தத் திரைக்கதையில் முதியவர் சொக்கலிங்கத்துக்கும் அவர் மருமகள் துளசிக்குமான உறவின் ஆழத்தைப் பெரும் உளவியல் ஆய்வோடு உருவாக்கம் செய்திருக்கிறார் பாலுமகேந்திரா. அவர்கள் இருவருக்கும் இடையில் நிகழும் உறவுகளின் வெளிப்பாடுகளில் மனிதப் புரிதல்களின் சாத்தியங்களை விரித்துக்கொண்டே செல்கிறார். எந்த ஒரு உறவுக்குள்ளும் புரிதலின் சமானம் என்பது முற்றாக நிகழ்ந்து முடிவதல்ல. உறவுகள் தொடர்ந்து இயக்கிக் கொண்டிருக்க வேண்டிய நிலையில் முரண்கள் என்பதும் தவிர்க்கவே இயலாத ஒரு இணை அலகாகவே இயங்கிக்கொண்டிருக்கும். அப்படி உருவாகிவரும் முரண்பாடுகளை சக உயிர்களின் பார்வை வழி நின்று உணர்வதின் மூலமாகவும் அதைப்புரிந்து கொண்டு, விட்டுக் கொடுப்பதின் வழியாகவுமே சமானப்படுத்திக் கொள்ள முடிகிறது. மனித உறவுகளுக்குள் நிகழும் இந்தச் சமானங்களை பெரியவர் சொங்கலிங்கத்துக்கும் அவர் மருமகள் துளசிக்குமாக உறவில் வெகு இளக்கமாகக் காட்டியிருப்பார் பாலுமகேந்திரா. ஒரு சினிமா பார்வையாளனின் ரசிப்புத்தன்மையை கூர்மைப்படுத்தியும் உயர்த்தியும் கொண்டுசெல்லும் படியான காட்சிகளை வடிவமைப்பதிலேயே ஒரு இயக்குநருடைய மேதமை வெளிப்படுகிறது. ‘சந்தியாராகத்தில்’ பெரியவருக்கும் மருமகள் துளசிக்குமான ஒருங்கிணைந்த காட்சிகள் அனைத்துமே அவ்வகை ரசிப்புத்தன்மையை உருவாக்குபவையே.  

இந்தப் படத்தைத் தரமானதாக்கியதில் சிறப்பு சப்தங்களின் சேர்ப்புகளுக்கும் பின்னனி இசைக்கும் முக்கியப்பங்கு இருக்கின்றது. கிராமத்து மனிதர்களின்  ஏகாந்தச் சூழலை பறவைகளின் கீச்சுகளையும் கால்நடைகளின் ஓசைகளையும் கொண்டும், நகர மனிதர்களின் மனஉளைச்சல்களை சுற்றி நிகழும் இரைச்சல்களையும், ரயில்வண்டியின் தடதடப்புகளைக் கொண்டுமே உணரவைத்திருக்கிறார் பாலுமகேந்திரா. பின்னனி இசையை எங்கு பயன்படுத்தக் கூடாது என்பது பற்றியும் அதை சரியாக எங்கு பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியும் ஒரு சாதாரண சினிமா ரசிகன் கூட கொஞ்சம் கவனம் எடுத்தால் புரிந்து கொள்ள முடியம் என்பதே இந்தப்படத்தின் உருவாக்கத்தில் மிக முக்கியமான சிறப்பு. அதனால் தான் ‘சந்தியாராகம்’ போன்ற சினிமாக்கள் ‘மக்களுக்கான சினிமா’வாகப் போற்றப்படுகின்றன.

இழப்பு :
‘சந்தியாராகம்’ போன்ற ஒரு அற்புதமான தமிழ்ப்படத்தின் நெகட்டிவ் இல்லாமல் போய்விட்டது என்பது தமிழ் சினிமாவுக்கு நிச்சயம் ஒரு பேரிழப்புதான்.


                                                                      ***