Thursday, August 7, 2014

மீசை - குறும்படம் பற்றி

கலையின் கடமை


நம் இணையத்தின் புண்ணியத்தில் ஏராளமான குறும்படங்கள் பல ரகங்களில் பல குணங்களில் காணக்கிடைக்கின்றன. அப்படிப் பார்க்கும் எல்லா படங்களும் மனதை பாதிப்பதில்லை. அப்படிப் பாதிக்கும் எல்லா படங்களைப் பற்றியும் எழுதத் தோன்றுவதுமில்லை. ஆனால் சில படங்கள் நம்மை பாதிப்பது மட்டுமல்லாமல் அதையாருடனாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலையும் துாண்டுகிறது. அப்படிப்பட்ட ஒரு குறும்படம் தான் ‘மீசை’

பொதுவாகவே ஒரு படைப்பைப் பற்றி எழுதும் போது அதன் மறைபொருளை வெளிப்படுத்தக் கூடாது என்பது ஒரு விதி. நான் முடிந்தவரை அதைக் கடைபிடிப்பவன். இந்தக் குறும்படம் ஒரு பெண் புகைப்பழக்கத்துக்கு ஆட்படுவது பற்றியது என்று ஒற்றை வரியில் சொல்லிவிடலாம். அதில் மறைபொருள் ஏதும் இல்லை. ஆனால் அந்தக் குறும்படம் தன் திரைக்கதையின் வழியே சொல்லும் செய்தியில் நம் கோணல் மனதைக் கொஞ்சம் நிமிர்த்த முயல்கிறது.

திருமணம் முடிந்து பத்து பதினைந்து நாட்கள் ஆன ஒரு இளம் தம்பதிகளின் ஒரு காலைப் பொழுதில் திரைக்கதை துவங்குகிறது. மிடில்கிளாஸ் வகுப்பைச் சார்ந்த அவர்கள் தனிக்குடித்தனம் நடத்துகிறார்கள். கணவனுக்கு முன் எழுந்து அவனுக்குப் பணிவிடைகளைச் செய்யக் கடமைப்பட்ட இளம் மனைவி திரையில் காட்டப்படுகிறாள். சற்றுத் தாமதமாகத் துாக்கம் கலைத்துக் கண்விழிக்கும் கணவன், சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு புகையை ஆழ்ந்து இழுத்துவிட்டு அன்றைய நாளை ஆரம்பிக்கிறான். அன்று திருமண விடுமுறை முடிந்து அந்தக் கணவன் வேலைக்குச் செல்லும் முதல் நாள்.

புதுக்காதலும் புன்னகையுமாக அவனை வழியனுப்பிவிட்டு அவள் வீட்டுக் கதவை உட்புறமாகத் தாழ்பாள் போடுகிறாள் (தாழ்பாள் சரியாகப் போடப்படுவதில்லை). வீட்டை விட்டு வெளியே சென்ற கணவன் மறந்துவிட்ட கார் சாவியை எடுக்க உடனே வீட்டுக்குள் மீண்டும் நுழைகிறான். அப்போது அவனுடைய இளம் மனைவி சிகரெட் புகைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறான்.

ஒரு மிடிள்கிளாஸ் பெண் சிகரெட் புகைப்பதை நம் சமூகம் பொறுத்துக் கொள்ளுமா..? அவள் கணவன் நாம் எதிர்பார்த்ததைப் போலவே பொங்கியெழுகிறான். அவளின் தந்தையும் அண்ணனும் வரவழைக்கப்பட்டு இந்த ஒழுக்கக்கேடு விவாதிக்கப்படுகிறது. அவளின் தந்தை இதை வன்மையாகவும் அண்ணன் கொஞ்சம் மென்மையாகவும் கண்டிக்கிறார்கள். அதற்கு அந்த பெண் என்ன மாதிரியான எதிர்வினையாற்றுகிறாள் என்பதை அறைந்து சொல்லியிருக்கிறது ‘மீசை’ குறும்படம்.

குறும்படம் என்பது அடிப்படையில் ஒரு சினிமாதான். அதுவும் காட்சி ஊடகமே. அதன்படி இதிலும் காட்சிகளாலேயே முடிந்தவரை கதையை நகர்த்தும்படி திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. நல்ல திரைக்கதையில் அதற்குள் நிகழும் சப்தங்களுக்கும் பெரும் பங்குண்டு. இந்தப்படத்திலும் அது நேர்த்தியாகக் கையாளப்பட்டிருக்கிறது. காலை நேரத்துப் பண்பலை வானோலியின் விளம்பரங்களும் பாடல்களும் படத்துக்குப் பின்புலமாக அமைந்து அழகுசேர்க்கின்றன.

படத்தின் உச்சம் என்று குறிப்பிட்டே ஆக வேண்டிய இரண்டு விஷயங்களில் ஒன்று, அந்தப் பெண் முதன் முதலில் புகைப்பதைப் பழகும் ஷாட்களின் அற்புத வடிவாக்கம். புகைப்பழக்கம் ஒருவரை எவ்விதம் முதலில் வசீகரிக்கிறது பின் எப்படிப் பரவசப்படுத்துகிறது என்பதை மிகச்சில ஷாட்களில் நேர்த்தியாகக் காட்டியிருக்கிறார்கள். சிகரெட்டை யாராக இருந்தாலும் முதலில் முகர்ந்துதான் பார்ப்பார்கள். அடுத்து மெல்ல உதட்டில் பொருத்தி பிறகு அதைப் பற்ற வைக்கும் முறையற்ற முயற்சிகள். அதன்பின் முதல் புகையை இழுத்தவுடன் ஒவ்வாமையில் வரும் இருமல் என்று புகைப்பதன் பரிணாமவளர்ச்சியை மிக அழகாகப் பதிவுசெய்திருக்கிறார்கள். ஒவ்வொரு படிநிலைக்கும் அந்தப் பெண் வெவ்வேறு உடையணிந்திருப்பதைக் காட்டுவதன் மூலம் அந்தப் பழக்கம் ஒரே நாளில் அல்லாது சில நாட்களின் தொடர்ச்சி என்பதை மிக நுட்பமாகச் சொல்லியிருக்கிறார்கள். இன்னொன்று, அவள் புகைப்பதைப் பழக்கமாக்கிக் கொண்ட பின் அவளைப் பெண்பார்க்க வந்திருப்பார்கள். இது ஒரே ஷாட்டில் விளக்கப்படும் காட்சி. அவள் கண்ணாடி முன் நின்று ஒப்பனை செய்து கொண்டிருப்பாள். அது ஒரு குளோசப் ஷாட். வாய்ஸ் ஓவரில் ஒரு திருமண மத்தியஸ்தரின் குரல் பேசும். அதை அவள் கவனித்துக் கொண்டே அலங்காரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது போன்ற பாவனையில் காட்சி தொடரும்.

“பையன் ரொம்ப நல்ல பையங்க. MCA படிச்சிருக்காப்ல. ஏகப்பட்ட வரன் வந்திச்சு. ஆனா ஊர் சைடுதான் பெண் எடுக்கணும்னு ஆசைப்பட்டாங்க. அதான் நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தேன். ஒரு சின்ன விஷயம்…... பையன் சிகரெட் குடிப்பாரு. மத்தபடி பையன் ரொம்ப நல்ல பையன்ங்க.” என்பார்.
அதுவரை அவர் பேசுவதை சாதாரணமாகக் கவனித்துக் கொண்டு வந்த அவள் ‘ஒரு சின்ன விஷயம்’ என்றதும் சட்டென்று துணுக்குற்று, ‘பையன் சிகரெட் பிடிப்பாரு’ என்றதும் ஒரு புன்னகை செய்வாள் பாருங்கள். காட்சிப்படுத்துதலின் அழகியல் அற்புதம் அது.

இதில் குறைகள் இல்லாமல் இல்லை. புகை பிடிப்பவர்களின் கையில் சிகரெட் பொருந்தியிருக்கும் விதமும், புகையை வெளியே ஊதும் உதட்டின் முனைப்புமே புகைப்பவர்களின் அனுபவத்தைச் சொல்லிவிடும். அந்த வகையில் இதில் கொஞ்சம் கவனம் எடுத்திருக்க வேண்டும். அதேபோல் எடிட்டிங் சார்ந்த தொடர்ச்சிகளிலும் சிற்சில குறைகள் இருப்பினும் அவையெல்லாம் இந்தப் படம் பேசக்கூடிய விஷயத்தின் நேர்மைக்கு முன் பெரிய விஷயங்களே இல்லை.

கண்டிப்பாகப் படத்தைப் பாருங்கள். இந்தப் படம் இந்தியப் பெண்கள் சிகரெட் குடிப்பதை ஆதரிக்கவோ எதிர்க்கவோ செய்யும் கலாச்சாரப் பிரச்சாரம் அல்ல. புகைப்பதை முன் வைத்து, ஒழுக்கநெறியில் பெண்களைப் பாகுபடுத்திப் பார்ப்பதைச் சுட்டிக் காட்டும் ஒரு கலையின் கடமை.

ப்ரியமுடன்
-வீரா

படத்தின் சுட்டி : http://www.youtube.com/watch?v=LxmMybxkmK0பிறந்த நாள் வாழ்த்து - எனக்கு...!!

அருமையான எழுத்தாளர் ..எளிமையான தோழர். சீரிய சிந்தனை, சிறப்பான நகைச்சுவை ...இதான் வீராவிடம் நான் உணர்ந்த விஷயங்கள்.. சில சமயங்களில் குருவாக சில சமயங்களில் சிஷ்யராக, ஆரம்ப காலம் முதல் இன்றுவரை அதே மரியாதையுடன் நட்பு பாராட்டும் தோழர் வீராவிற்கும் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்


-செல்லி ஸ்ரீனிவாசன், பெங்களூரு
தேர்ந்த விமர்சகன்.... ஈர்க்கும் எழுத்துநடைக்கு சொந்தக்காரன்....
அன்பை வெளிப்படுத்துவைப்போலவே அவன் விமர்சனமும் இருக்கும்....
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வீரா

-யாழி கிரிதரன்.

.

கலைஞனுக்கு என் அஞ்சலி

பாலுமகேந்திரா – நிற்க விரும்பிய இடம்‘பாலுமகேந்திராவுக்கு ஒருவனுக்கு ஒருத்தி என்ற நம் திருமண பந்தத்தில் உடன்பாடு கிடையாது. குறிப்பாக ஆண்கள் தங்கள் மனைவிமார்களைத் தாண்டி வேறு பெண்களைத் துணைவியாக்கிக் கொண்டு வாழ்வதை தன் படங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால் பெண் பாத்திரங்களுக்கு அவர் அந்த சுதந்திரத்தைத் தரத்தயாராக இல்லை. தன் தனிப்பட்ட வாழ்வையும் அவர் அவ்வாறே அணுகினார்.’


பாலுமகேந்திராவின் படங்கள் குறித்து ஒரு நண்பர் தன் விமர்சனத்தை இப்படி என்முன் வைத்தார்.. அவருடைய இந்தக் கூற்றை இந்தக் கட்டுரையின் பின் பகுதியில் விவாதிக்கலாம். அதற்கு முன், கடந்த வாரம் தோழர் செல்லிசீனிவாசன் அவர்கள், தான் சார்ந்த பண்பலை வானோலியான www.masala.fm ல் பாலுமகேந்திரா பற்றிய நினைவஞ்சலி நிகழ்ச்சிக்காக அவர் பற்றிய அனுபவங்களை பல நண்பர்களிடம் கேட்டுப் பதிவுசெய்தார். அதில் நானும் பங்கேற்று என் கருத்தைப் பதிவுசெய்தேன். . அதில் நான் பகிர்ந்து கொண்ட ஒரு செய்தியை இப்போது உங்களுக்குச் சொல்கிறேன்.

பண்டொருநாள் இலக்கிய நிகழ்ச்சி ஒன்றுக்காக பாலுமகேந்திரா சேலம் வந்திருந்தார். அந்த நிகழ்ச்சி நிரலில் ‘சந்தியாராகம்’ திரையிடலும் இருந்தது. நம் தமிழ்நாட்டின் இலக்கியக் கூட்டத்துக்கே உரிய மிகச்சிறிய மனிதக் கூட்டம். அதில் நானும் ஒருவனாக அன்று இருந்தேன். நிகழ்ச்சி ஆரம்பமாகும் வரை அந்தக் கூட்டம் பாலுமகேந்திராவைச் சற்றி அமர்ந்து கொண்டு, அறியாமையால் எழும் குழந்தைக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தது. பல நேரங்களில் குழந்தைகளின் கேள்விகள் கூட மிக மதிப்புமிக்கவையாக அமைந்துவிடும் தானே. அதற்கெல்லாம் ஒரு தந்தையின் பெருமிதத்தோடு பதில்களைச் சொல்லிக் கொண்டிருந்தார் பாலுமகேந்திரா.

நிகழ்ச்சி தொடங்கியது. ‘சந்தியாராகம்’ படத்தை நிகழ்ச்சி அமைப்பாளர்கள் திரையில் ஓடவிட்டார்கள். சடாரென்று எழுந்த பாலுமகேந்திரா படத்தை நிறுத்துமாறு கூறிக்கொண்டே ஒளிபரப்புக்கருவிக்கு அருகில் சென்று அதன் ஆப்ரேட்டருடன் விவாதத்தில் ஈடுபட்டார். அப்போதுதான் எல்லோருக்கும் மெல்ல அந்த விஷயம் புரிந்தது. ‘சந்தியாராகம்’ கருப்பு வெள்ளையில் வெளியிடப்பட்ட திரைப்படம். ஒளிபரப்பு இயந்திரத்தில் எற்பட்ட ஏதோ தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அன்று அது வண்ணத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. உடனே திரையிடல் நிறுத்தப்பட்டது. ஆப்ரேட்டருடன் பாலுமகேந்திரா இணைந்து அந்தக் கோளாறை சரிசெய்ய முயல்கிறார்கள். நேரம் ஆகிக்கொண்டே போகிறது. முக்கால் மணி நேரத்திற்கும் மேலாக அந்த இயந்திரத்தின் தொழில்நுட்பத்துடன் போராடுகிறார் பாலுமகேந்திரா. நாங்களெல்லாம் பொறுமை இழந்து போய், ‘அன்று மட்டும் அது வண்ணத்திலேயே ஒளிபரப்பாகி விட்டுப் போகட்டுமே’ என்ற நிலைக்கு வந்துவிட்டோம். பாலுமகேந்திராவின் விடாப்பிடியில் ஒரு வழியாக கோளாறு சரிசெய்யப்பட்டு கருப்பு வெள்ளையில் படம் ஓடத்துவங்குகிறது. அப்போது பாலுமகேந்திராவின் அருகில் இருந்து அவரின் முகத்தைக் காணும் ஒரு அரிய வாய்ப்பு எனக்குக் கிடைக்கிறது. அவர் முகத்தில் எறியிருந்த நிறைவையும் மகிழ்ச்சியையும் பற்றி வர்ணிக்க உண்மையிலேயே வார்த்தைகள் கிடையாது.

படம் முடிவடைந்தவுடன் அதுபற்றிப் பேசிய பாலுமகேந்திரா, ஏன் அது கருப்பு வெள்ளையிலேயே அனுபவிக்க வேண்டிய படம் என்பது பற்றி விளக்கினார். கருப்பு வெள்ளை காட்சிகளுக்கு சில அபரிதமான உணர்வுகளை துல்லியப்படுத்தும் வல்லமை உண்டென்றும், ‘சந்தியாராகம்’ அவ்வகை உணர்வுகளைத் தேக்கிவைத்திருக்கும் திரைக்கதையெனவும், அதற்குத் தக்கவாறே அதற்கு ஒளியமைப்பையும் உடைஅலங்காரத்தையும் தான் நெறிப்படுத்தியிருந்ததைச் சுட்டிக்காண்பித்து அதன் அவசியத்தைப் புரியவைத்தார். 

நாங்கள் பிரமித்துப் போய் மௌனமாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தோம். சிறுமழையின் துாரல்களுக்காகவும் சூரியனின் மெல்லிய கீற்றுக்களுக்காகவும் மணிக்கணக்காகத் தவமிருக்கும் அந்த ஒளிவித்தைக்காரனின் முகம் அந்தக் கணம் பரிபூரணமாக மலர்ந்திருந்ததைக் கண்டோம். அன்று அதை உணர்ந்த அனைவரும் பூண்ணிய ஆத்மாக்களே. இருளையும் ஒளியையும் பக்குவமாகப் பயன்படுத்தி, தான் நிர்ணயித்துக் கொண்ட சட்டகங்களுக்குள் உணர்வுகளை சரிவிகித அளவில் நிரப்பிய அந்தக் கலைஞன் தொடர்பான பண்பலை நிகழ்ச்சியில் நான் பங்குபெற்றதைப் பற்றி நண்பர் ராமமூர்த்தியிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் மேலே குறிப்பிட்ட பாலுமகேந்திரா பற்றிய அந்த ஒற்றைப் பார்வையை ஐயா என்முன் வைத்தார். மேலே சொன்ன கருத்தில் கொஞ்சம் உண்மையிருப்பது போல் தோன்றுவதால் அது பற்றிய ஒரு சிறு புரிதலை நாம் ஏற்படுத்திக் கொள்வது அவசியம் என்று பட்டது.

அதனால் நண்பர் ராமமூர்த்திக்கு நான் சொல்கிறேன் :

பாலுமகேந்திராவின் படங்களை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்குச் சில விஷயங்கள் புரிந்திருக்க வேண்டும். அவர் தன்னுடைய பெரும்பான்மையான படங்களில் ஒரு ஆணுக்கு இரண்டு பெண்கள் மீது ஈர்ப்பு வருவதைப் போன்ற கதைகளையே கையாண்டிருப்பார். அது அவருடைய ஆழ்மனவிருப்பம் என்றுதான் நாம் முடிவுக்கு வரவேண்டியுள்ளது. காரணம், அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவ்வகையான வாழ்க்கை முறையே செயலுக்கு வந்தது. 

ஆனால் அவர் ஒருபோதும் அப்படிப்பட்ட எல்லை மீறல்களை நியாயப்படுத்தியதில்லை என்பதை அவருடைய படங்களை உணர்ந்தவர்களுக்குத் தெரியும். ‘மூன்றாம்பிறை’ தொடங்கி ‘இரட்டைவால்குருவி’, ‘மறுபடியும்’, ‘சதிலீலாவதி’ என்று தன் எல்லா படங்களிலும் மனைவியைத் தவிர பிற பெண்கள் மீது வைக்கும் ஈடுபாடு குறித்த தன் அக உணர்வுகளைப் பிரதிபலித்து வந்திருக்கும் அவர், அதில் அவ்வித மனிதர்களின் மன உலைச்சல்களையும் அவர்கள் அதிலிருந்து மீண்டு வருவது பற்றியுமே தன் கதையாடல்களை நிகழ்த்தினார். தன் படைப்பின் இறுதியில் அவர்களைத் தமிழ்ச் சமூகம் சார்ந்த கருத்தியல்களின் பக்கத்திலேயே கொண்டு வந்து நிறுத்தினார். தான் நின்றுகொண்டிருக்கும் இடத்திலிருந்து கொண்டு, நிற்க வேண்டிய இடம் பற்றியே தன் படைப்பின் வழியாகப் பேசினார். ‘மறுபடியும்’ நிழல்கள் ரவி மற்றும் ‘சதலீலாவதி’ ரமேஷ்அரவிந்த் கதாபாத்திரங்களின் கையாடல்களில் அவற்றை நம்மால் கண்டுகொள்ள முடியும்.

எல்லை மீறல்களில் ஆண்களின் நிலை பற்றிய அவரின் முடிவை ‘மறுபடியும்’ அரவிந்தசாமியின் பாத்திரப்படைப்பு வழியாகத் தீர்க்கமாக நிறுவுகிறார். நிழல்கள்ரவியின் செயல்களால் விரக்தியின் உச்சத்தில் இருப்பார் ரேவதி. மாற்றான் மனைவியான அவரின் மனதுக்குள் ஊடுருவும் அரவிந்த்சாமி, தன் எல்லைகளை எப்படி கண்ணியமாக வரையறுத்துக் கொண்டார் என்ற மானுடத்தின் உச்சத்தை, பாலுமகேந்திரா எவ்விதம் கலையாக்கினார் என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.

ஆண்களுக்கு இருக்கும் எல்லை மீறல் உணர்வுகளை தொடர்ந்து வெளிப்படுத்திய பாலுமகேந்திரா பெண்களின் அவ்வித எண்ணங்களை தவிர்த்தே வந்திருக்கிறார். அதற்குக் காரணம் பெண் பாத்திரங்களுக்கு அவர் அந்தச் சுதந்திரத்தைக் கொடுக்கவில்லை என்பது அர்த்தமல்லை. பெண்களைப் பற்றிய அவருடைய மிக மேலான மதிப்பே அப்படியொரு இடத்தில் அவர்களை வைத்துப் பார்க்க அவரைத் துாண்டவில்லையென்று படுகிறது. ‘மறுபடியும்’ ரேவதியையும் ‘இரட்டைவால் குருவி’ அர்ச்சனாவையும் ‘சதிலீலாவதி’ கல்பனாவையும் ஆண்களின் சலனப்புயலுக்கு ஈடுகொடுத்து நம்முடைய குடும்ப அமைப்பைத் தாங்கிநிற்கும் ஆணிவேர்களாகவே சித்தரித்திருப்பார். மூன்றாம்பிறையின் சில்க்ஸ்மித்தா பாத்திரம் கூடத் தான் எடுக்கப் போகும் நிலைப்பாட்டுக்கு மிக நியாயமான காரணங்கள் கொண்ட பெண்ணாகவே சித்தரிக்கப்பட்டிருக்கும். ஆண்களின் எல்லைமீறல்களுக்குப் பழியாகும் அவரின் பெண்பாத்திரங்கள் கூட அந்த ஆண்களின் வற்புறுத்தலாலும் துாண்டுதல்களாலுமே தங்களை வழிதவற விட்டிருப்பார்கள். இவையெல்லாம் பெண்கள் கூட்டத்தை திரையரங்குக்குள் வரவழைக்கும் ஒரு வியாபாரியின் தந்திரமாக நாம் பார்க்க முடியாது. பாலுமகேந்திரா அப்படியெல்லாம் சமரசம் செய்து கொள்ளும் ஒரு கமர்சியல் வியாபாரியில்லை என்பதை நாம் உறுதியாக நம்பலாம். அப்படியிருந்தால் அவர் இன்னும் பல ‘நீங்கள் கேட்டவை’ களைத் தொடர்ந்து இயக்கியிருப்பார்.

படைப்பாளிகள் இந்த சமூகத்தின் வழிகாட்டிகளல்ல. அவர்கள் சமூகத்தைப் பிரதிபலிப்பவர்கள் மட்டுமே. தன் அந்தராத்மாவை மட்டுமே அவர்கள் படைப்பாக்க முடியும். அவ்வகையில் ஒரு நல்ல படைப்பாளி யாதொரு சமரசமும் செய்து கொள்ளாமல் தன் வாழ்வின் மூலம் பெற்ற அனுபவங்களை, உன்னதமான படைப்பின் வழியே இந்த சமூகத்தின் முன் வைப்பதன் மூலம் அதன் பெருந்திரளோடு ஒரு பொதுப்புள்ளியில் கலந்து, அதன் ஆன்மாவோடு பிரத்யேகமான உரையாடல்களை நிகழ்த்துகிறார். அவ்விதம் நடத்தப்படும் உரையாடல்களில் நம் மனம் விழிப்புக்கொள்வதும் அல்லது மேலும் தன்னை இறுக்கிக் கொள்வதும் நம் அறிவுன் பொறுப்பே ஒழிய, படைப்பாளியின் பொறுப்பல்ல. அவ்வகையில் பாலுமகேந்திரா நம் ஆன்மாவுக்குள் ஊடுருவிய ஒரு அற்புதமான படைப்பாளி. அவனிலிருந்து நாம் எதைக் கண்டடைகிறோம் என்பது நம்முடைய மனத்தின் பக்குவம் சார்ந்ததே.

கை கிரிக்கெட் - ஒரு புதிய விளையாட்டு

ஒரு புதிய விளையாட்டு - கை கிரிக்கெட்..!!!!'தி இந்து' நாளிதழிலில் தான் எழுதிய கட்டுரையில் எழுத்தாளர் பெருமாள்முருகன் 'கை கிரிக்கெட்' எனும் ஒரு புதிய விளையாட்டைப் பற்றி அறிமுகம் செய்துள்ளார். நாமக்கல் மாவட்டங்களில் பரவலாக மாணவர்களிடையே அறிமுகமாகி வளர்ந்து வரும் இந்த புதிய விளையாட்டு, அவர்களின் படைப்பூக்கத்துக்கும் மூளைத்திறனுக்கும் எவ்வகையில் துணைநிற்கிறது என்பதை அழகாக விளக்கியுள்ளார். செய்தி சிறியதாகத் தெரிந்தாலும் அதற்குள் இருக்கும் விஷயம் பெரியதாகவே படுகிறது. இன்று உலகைக் கலக்கும் எல்லா பெரிய விளையாட்டுக்களும் என்றோ எங்கோ யாரோ ஒரு சிறிய குழுவால் தானே கண்டுபிடிக்கப்பட்டு விளையாடப்பட்டு வளர்ந்து வந்துள்ளன. அந்த வகையில் நம் மண்ணின் புதிய ஒரு விளையாட்டைக் கவனப்படுத்திய பெருமாள்முருகனுக்கு நன்றிகள் பல. செ.சுஜாதாவின் 'தேவஸ்வரம்' - சிறுகதை பற்றி...

ஒரு உரிமையான வேண்டுகோள்இன்று செ.சுஜாதாவின் ‘தேவஸ்வரம்’ என்ற சிறுகதையைப் படித்தேன். அதைப்பற்றிக் கொஞ்சமேனும் எழுதவில்லையென்றால் இன்று இரவு சாப்பிட முடியாது என்பதும் துாங்க முடியாது என்பதும் உறுதியாகிவிட்டது. 


உலகத்தரமான சிறுகதைகள் என்று நம் இலக்கிய ஆசான்கள் வியந்தோதிய பல சிறுகதைகளைப் படித்தவன் என்ற சிறிய தகுதியில் சொல்கிறேன், இதுவரை என் வாசிப்பனுபவத்தில் நான் உணர்ந்தேயிராத ஒரு உச்சம் இந்த ‘தேவஸ்வரம்’ எனும் படைப்பு. 

செ.சுஜாதா ஒரு ஆத்மார்த்தமான கவிஞர் என்பதை நான் அறிவேன். போதுவாகவே கவிஞர்களின் உரைநடையில் கவிதைக்கான கூறுகளே நிரம்பி, உரைநடையின் இயல்பையும் வீரியத்தையும் சற்று சிதைத்து அந்தப் படைப்பை ஒரு இரண்டும் கெட்டான் நிலையில் நிறுத்திவிடும். ஆனால் செ.சுஜாதாவின் கவிதை மனம் உரைநடையில் செம்மையாகப் பயணித்திருக்கிறது. 

ஒரு வனத்தைத் தன் இருப்பிடமாகக் கொண்டு வாழ்ந்த, இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய ஏதொ ஒரு வனதேவதை, தனக்குள் இடையறாது மிகுந்து கொண்டேயிருக்கும் தன் ரசனையான காதலையும், காமத்தையும் இதற்கு மேல் தேக்கிவைத்துக் கொள்ள முடியாத அழுத்தத்தில், அதை வெளிக்கொண்டுவர சுஜாதாவின் கவிஅடர்த்தி மிக்க எழுத்தை ஊடகமாகப் பயன்படுத்தியிருக்கும் என்றே உறுதிபட நம்புகிறேன். காரணம், இந்தப் படைப்பைச் செழுமைப்படுத்தக் கூடிய சாத்தியம் ஒரு கவிதை மனத்துக்கு மட்டுமே உண்டு என்பதை ‘அது’ உணர்ந்தே இப்படி ஒரு தேர்வைச் செய்திருக்கும் என்பது என் அனுமானம். அப்படி ஒரு தேர்ந்தெடுப்புக்கு ஆட்படவேண்டுமெனில் செ.சுஜாதா எவ்வளவு உயர்தரமான கலை ஆளுமையாக இருக்கவேண்டும் என்று எண்ணிப்பாருங்கள். 

உயிர்த்துகளின் ஒவ்வொரு நடுமையமும் வனதேவதையின் ஆன்மாவுக்கு இசைவாக இருந்தால் ஒழிய வனத்தின் இயல்பையும் அங்கு நிகழும் இரு உயிர்களின் கலப்பையும் இவ்வளவு துள்ளலாக எழுத்தில் வடித்துவிட முடியாது. 

வரிக்குவரி நம்மை ஒரு மோகனமான நிலைக்குக் கொண்டு சென்றுவிடும் இந்தக் கொண்டாட்டமான படைப்புக்கு நிச்சயம் நாம் மரியாதை செய்ய வேண்டும். உங்கள் உயிரை ஒரு தென்றலின் மென்மையோடு வருடிச்செல்லும் இதை எவ்வளவு வேலை, எவ்வளவு சிரமம் இருந்தாலும் சூழ்நிலையை அமைதியாக்கிக் கொண்டு ஒரு முறையெனும் வாசித்து உள்வாங்கிவிடுங்கள். அது உங்கள் உயிரையும் மனதையும் நிச்சயம் மேன்மையான கதிக்குத் திருப்பிவிடும் வல்லமை படைத்தது.

அதன் சுட்டி : http://malaigal.com/?p=4243பாலுமகேந்திரா பற்றி ஒரு ரேடியோ நிகழ்ச்சியில் நானும்....

MASALA FM ல் தோழர் செல்லிஸ்ரீநிவாசனுடன் ஒரு நிகழ்ச்சியில்நிகழ்ச்சியின் ஒலி வடிவச் சுட்டி: