Thursday, August 7, 2014

மீசை - குறும்படம் பற்றி

கலையின் கடமை


நம் இணையத்தின் புண்ணியத்தில் ஏராளமான குறும்படங்கள் பல ரகங்களில் பல குணங்களில் காணக்கிடைக்கின்றன. அப்படிப் பார்க்கும் எல்லா படங்களும் மனதை பாதிப்பதில்லை. அப்படிப் பாதிக்கும் எல்லா படங்களைப் பற்றியும் எழுதத் தோன்றுவதுமில்லை. ஆனால் சில படங்கள் நம்மை பாதிப்பது மட்டுமல்லாமல் அதையாருடனாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலையும் துாண்டுகிறது. அப்படிப்பட்ட ஒரு குறும்படம் தான் ‘மீசை’

பொதுவாகவே ஒரு படைப்பைப் பற்றி எழுதும் போது அதன் மறைபொருளை வெளிப்படுத்தக் கூடாது என்பது ஒரு விதி. நான் முடிந்தவரை அதைக் கடைபிடிப்பவன். இந்தக் குறும்படம் ஒரு பெண் புகைப்பழக்கத்துக்கு ஆட்படுவது பற்றியது என்று ஒற்றை வரியில் சொல்லிவிடலாம். அதில் மறைபொருள் ஏதும் இல்லை. ஆனால் அந்தக் குறும்படம் தன் திரைக்கதையின் வழியே சொல்லும் செய்தியில் நம் கோணல் மனதைக் கொஞ்சம் நிமிர்த்த முயல்கிறது.

திருமணம் முடிந்து பத்து பதினைந்து நாட்கள் ஆன ஒரு இளம் தம்பதிகளின் ஒரு காலைப் பொழுதில் திரைக்கதை துவங்குகிறது. மிடில்கிளாஸ் வகுப்பைச் சார்ந்த அவர்கள் தனிக்குடித்தனம் நடத்துகிறார்கள். கணவனுக்கு முன் எழுந்து அவனுக்குப் பணிவிடைகளைச் செய்யக் கடமைப்பட்ட இளம் மனைவி திரையில் காட்டப்படுகிறாள். சற்றுத் தாமதமாகத் துாக்கம் கலைத்துக் கண்விழிக்கும் கணவன், சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு புகையை ஆழ்ந்து இழுத்துவிட்டு அன்றைய நாளை ஆரம்பிக்கிறான். அன்று திருமண விடுமுறை முடிந்து அந்தக் கணவன் வேலைக்குச் செல்லும் முதல் நாள்.

புதுக்காதலும் புன்னகையுமாக அவனை வழியனுப்பிவிட்டு அவள் வீட்டுக் கதவை உட்புறமாகத் தாழ்பாள் போடுகிறாள் (தாழ்பாள் சரியாகப் போடப்படுவதில்லை). வீட்டை விட்டு வெளியே சென்ற கணவன் மறந்துவிட்ட கார் சாவியை எடுக்க உடனே வீட்டுக்குள் மீண்டும் நுழைகிறான். அப்போது அவனுடைய இளம் மனைவி சிகரெட் புகைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறான்.

ஒரு மிடிள்கிளாஸ் பெண் சிகரெட் புகைப்பதை நம் சமூகம் பொறுத்துக் கொள்ளுமா..? அவள் கணவன் நாம் எதிர்பார்த்ததைப் போலவே பொங்கியெழுகிறான். அவளின் தந்தையும் அண்ணனும் வரவழைக்கப்பட்டு இந்த ஒழுக்கக்கேடு விவாதிக்கப்படுகிறது. அவளின் தந்தை இதை வன்மையாகவும் அண்ணன் கொஞ்சம் மென்மையாகவும் கண்டிக்கிறார்கள். அதற்கு அந்த பெண் என்ன மாதிரியான எதிர்வினையாற்றுகிறாள் என்பதை அறைந்து சொல்லியிருக்கிறது ‘மீசை’ குறும்படம்.

குறும்படம் என்பது அடிப்படையில் ஒரு சினிமாதான். அதுவும் காட்சி ஊடகமே. அதன்படி இதிலும் காட்சிகளாலேயே முடிந்தவரை கதையை நகர்த்தும்படி திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. நல்ல திரைக்கதையில் அதற்குள் நிகழும் சப்தங்களுக்கும் பெரும் பங்குண்டு. இந்தப்படத்திலும் அது நேர்த்தியாகக் கையாளப்பட்டிருக்கிறது. காலை நேரத்துப் பண்பலை வானோலியின் விளம்பரங்களும் பாடல்களும் படத்துக்குப் பின்புலமாக அமைந்து அழகுசேர்க்கின்றன.

படத்தின் உச்சம் என்று குறிப்பிட்டே ஆக வேண்டிய இரண்டு விஷயங்களில் ஒன்று, அந்தப் பெண் முதன் முதலில் புகைப்பதைப் பழகும் ஷாட்களின் அற்புத வடிவாக்கம். புகைப்பழக்கம் ஒருவரை எவ்விதம் முதலில் வசீகரிக்கிறது பின் எப்படிப் பரவசப்படுத்துகிறது என்பதை மிகச்சில ஷாட்களில் நேர்த்தியாகக் காட்டியிருக்கிறார்கள். சிகரெட்டை யாராக இருந்தாலும் முதலில் முகர்ந்துதான் பார்ப்பார்கள். அடுத்து மெல்ல உதட்டில் பொருத்தி பிறகு அதைப் பற்ற வைக்கும் முறையற்ற முயற்சிகள். அதன்பின் முதல் புகையை இழுத்தவுடன் ஒவ்வாமையில் வரும் இருமல் என்று புகைப்பதன் பரிணாமவளர்ச்சியை மிக அழகாகப் பதிவுசெய்திருக்கிறார்கள். ஒவ்வொரு படிநிலைக்கும் அந்தப் பெண் வெவ்வேறு உடையணிந்திருப்பதைக் காட்டுவதன் மூலம் அந்தப் பழக்கம் ஒரே நாளில் அல்லாது சில நாட்களின் தொடர்ச்சி என்பதை மிக நுட்பமாகச் சொல்லியிருக்கிறார்கள். இன்னொன்று, அவள் புகைப்பதைப் பழக்கமாக்கிக் கொண்ட பின் அவளைப் பெண்பார்க்க வந்திருப்பார்கள். இது ஒரே ஷாட்டில் விளக்கப்படும் காட்சி. அவள் கண்ணாடி முன் நின்று ஒப்பனை செய்து கொண்டிருப்பாள். அது ஒரு குளோசப் ஷாட். வாய்ஸ் ஓவரில் ஒரு திருமண மத்தியஸ்தரின் குரல் பேசும். அதை அவள் கவனித்துக் கொண்டே அலங்காரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது போன்ற பாவனையில் காட்சி தொடரும்.

“பையன் ரொம்ப நல்ல பையங்க. MCA படிச்சிருக்காப்ல. ஏகப்பட்ட வரன் வந்திச்சு. ஆனா ஊர் சைடுதான் பெண் எடுக்கணும்னு ஆசைப்பட்டாங்க. அதான் நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தேன். ஒரு சின்ன விஷயம்…... பையன் சிகரெட் குடிப்பாரு. மத்தபடி பையன் ரொம்ப நல்ல பையன்ங்க.” என்பார்.
அதுவரை அவர் பேசுவதை சாதாரணமாகக் கவனித்துக் கொண்டு வந்த அவள் ‘ஒரு சின்ன விஷயம்’ என்றதும் சட்டென்று துணுக்குற்று, ‘பையன் சிகரெட் பிடிப்பாரு’ என்றதும் ஒரு புன்னகை செய்வாள் பாருங்கள். காட்சிப்படுத்துதலின் அழகியல் அற்புதம் அது.

இதில் குறைகள் இல்லாமல் இல்லை. புகை பிடிப்பவர்களின் கையில் சிகரெட் பொருந்தியிருக்கும் விதமும், புகையை வெளியே ஊதும் உதட்டின் முனைப்புமே புகைப்பவர்களின் அனுபவத்தைச் சொல்லிவிடும். அந்த வகையில் இதில் கொஞ்சம் கவனம் எடுத்திருக்க வேண்டும். அதேபோல் எடிட்டிங் சார்ந்த தொடர்ச்சிகளிலும் சிற்சில குறைகள் இருப்பினும் அவையெல்லாம் இந்தப் படம் பேசக்கூடிய விஷயத்தின் நேர்மைக்கு முன் பெரிய விஷயங்களே இல்லை.

கண்டிப்பாகப் படத்தைப் பாருங்கள். இந்தப் படம் இந்தியப் பெண்கள் சிகரெட் குடிப்பதை ஆதரிக்கவோ எதிர்க்கவோ செய்யும் கலாச்சாரப் பிரச்சாரம் அல்ல. புகைப்பதை முன் வைத்து, ஒழுக்கநெறியில் பெண்களைப் பாகுபடுத்திப் பார்ப்பதைச் சுட்டிக் காட்டும் ஒரு கலையின் கடமை.

ப்ரியமுடன்
-வீரா

படத்தின் சுட்டி : http://www.youtube.com/watch?v=LxmMybxkmK0



No comments:

Post a Comment