Thursday, August 7, 2014

செ.சுஜாதாவின் 'தேவஸ்வரம்' - சிறுகதை பற்றி...

ஒரு உரிமையான வேண்டுகோள்



இன்று செ.சுஜாதாவின் ‘தேவஸ்வரம்’ என்ற சிறுகதையைப் படித்தேன். அதைப்பற்றிக் கொஞ்சமேனும் எழுதவில்லையென்றால் இன்று இரவு சாப்பிட முடியாது என்பதும் துாங்க முடியாது என்பதும் உறுதியாகிவிட்டது. 


உலகத்தரமான சிறுகதைகள் என்று நம் இலக்கிய ஆசான்கள் வியந்தோதிய பல சிறுகதைகளைப் படித்தவன் என்ற சிறிய தகுதியில் சொல்கிறேன், இதுவரை என் வாசிப்பனுபவத்தில் நான் உணர்ந்தேயிராத ஒரு உச்சம் இந்த ‘தேவஸ்வரம்’ எனும் படைப்பு. 

செ.சுஜாதா ஒரு ஆத்மார்த்தமான கவிஞர் என்பதை நான் அறிவேன். போதுவாகவே கவிஞர்களின் உரைநடையில் கவிதைக்கான கூறுகளே நிரம்பி, உரைநடையின் இயல்பையும் வீரியத்தையும் சற்று சிதைத்து அந்தப் படைப்பை ஒரு இரண்டும் கெட்டான் நிலையில் நிறுத்திவிடும். ஆனால் செ.சுஜாதாவின் கவிதை மனம் உரைநடையில் செம்மையாகப் பயணித்திருக்கிறது. 

ஒரு வனத்தைத் தன் இருப்பிடமாகக் கொண்டு வாழ்ந்த, இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய ஏதொ ஒரு வனதேவதை, தனக்குள் இடையறாது மிகுந்து கொண்டேயிருக்கும் தன் ரசனையான காதலையும், காமத்தையும் இதற்கு மேல் தேக்கிவைத்துக் கொள்ள முடியாத அழுத்தத்தில், அதை வெளிக்கொண்டுவர சுஜாதாவின் கவிஅடர்த்தி மிக்க எழுத்தை ஊடகமாகப் பயன்படுத்தியிருக்கும் என்றே உறுதிபட நம்புகிறேன். காரணம், இந்தப் படைப்பைச் செழுமைப்படுத்தக் கூடிய சாத்தியம் ஒரு கவிதை மனத்துக்கு மட்டுமே உண்டு என்பதை ‘அது’ உணர்ந்தே இப்படி ஒரு தேர்வைச் செய்திருக்கும் என்பது என் அனுமானம். அப்படி ஒரு தேர்ந்தெடுப்புக்கு ஆட்படவேண்டுமெனில் செ.சுஜாதா எவ்வளவு உயர்தரமான கலை ஆளுமையாக இருக்கவேண்டும் என்று எண்ணிப்பாருங்கள். 

உயிர்த்துகளின் ஒவ்வொரு நடுமையமும் வனதேவதையின் ஆன்மாவுக்கு இசைவாக இருந்தால் ஒழிய வனத்தின் இயல்பையும் அங்கு நிகழும் இரு உயிர்களின் கலப்பையும் இவ்வளவு துள்ளலாக எழுத்தில் வடித்துவிட முடியாது. 

வரிக்குவரி நம்மை ஒரு மோகனமான நிலைக்குக் கொண்டு சென்றுவிடும் இந்தக் கொண்டாட்டமான படைப்புக்கு நிச்சயம் நாம் மரியாதை செய்ய வேண்டும். உங்கள் உயிரை ஒரு தென்றலின் மென்மையோடு வருடிச்செல்லும் இதை எவ்வளவு வேலை, எவ்வளவு சிரமம் இருந்தாலும் சூழ்நிலையை அமைதியாக்கிக் கொண்டு ஒரு முறையெனும் வாசித்து உள்வாங்கிவிடுங்கள். அது உங்கள் உயிரையும் மனதையும் நிச்சயம் மேன்மையான கதிக்குத் திருப்பிவிடும் வல்லமை படைத்தது.

அதன் சுட்டி : http://malaigal.com/?p=4243



No comments:

Post a Comment