என்னால்
‘சகலை’ என்று
அன்புடன் அழைக்கப்படும் நண்பன் கார்த்தியை உங்களில் சிலர் அறிந்திருப்பீர்கள். அவரைப்பற்றி நான் சொல்ல வேண்டியவை சில உண்டு.
தன் எண்ணம், சொல், செயல் இவற்றில் எப்பொழுதுமே ஒரு எளிமையைக்
கடைபிடித்துவரும் கார்த்தி, தன்னைப்பற்றிக் கூறிக்கொள்ளும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும்
தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத இயல்பும் அடக்கமும் கொண்டவர். அவரிடம் நான் கண்டு வியந்த
ஒரு முக்கியமான விஷயம் அவருடைய துறவு மனம். எதிர்காலம் பற்றிய எந்த ஒரு அச்சமோ எதிர்மறை
எண்ணமோ இன்றி வாழ்க்கையை அதன் போக்கில் மிக இயல்பாக எதிர்கொள்ளும் பாங்கும், தனக்கான
எந்தவொரு தனித்துவத்தையும் ஏற்படுத்திக்கொள்ள விரும்பாமல் ஒரு பார்வையாளனாய்த் தன்
சக நண்பர்களின் நடவடிக்கைகளை அணுகும் பக்குவமும் அவருக்கு வாய்க்கப்பட்டிருக்கும் ஒரு
வரம்.
கார்த்தியுடனான உரையாடல்களின் போது நாம் எங்காவது தவறு செய்துவிட்டால்
அல்லது அவருக்கு நம் கருத்து பிடிக்காவிட்டால் உடனடியாக தாட்சண்யம் ஏதுமின்றி முகத்துக்கு
நேராக தன் மறுப்பைச் சொல்லிவிடுபவர். பிடிக்காத விஷயத்திலிருந்து எப்படித் தன்னை விடுவித்துக்கொள்வதென்று
தெரியாமலேயே நம்மில் பலர் பிரச்சனைகளில் சிக்கிக் கொள்வதுண்டு. அந்த விஷயத்தில் கார்த்தி
ஒரு தேர்ந்த வல்லுநர் என்றே சொல்லலாம். மிக நாசூக்காகத் தன்னை சிக்கல்களின் பிடியிலிருந்து
விடுபடுத்திக் கொள்ளக்கூடியவர்.
கார்த்திக்கென்று ஒரு தனிச் சிறப்பு உண்டு. அது அவருடைய அபாரமான
சினிமா ஞானம். உள்ளூர் சினிமா தவிர வேறு எதுவுமே அறியாத என்னை முதன் முதலில் உலக சினிமாவின்
மாபெரும் கோட்டைக்குள் கைபிடித்து அழைத்துச்சென்று நடக்கவிட்டவர் கார்த்தி. சினிமாவை
நாடு, மொழி, இயக்குநர் என்ற வகைப்பாடுகளின் கீழ் கொண்டுவந்து என் ரசிப்புத்தன்மையைக்
கூர்மைப்படுத்தியவர் உலகசினிமாவில் கார்த்திக்கு உள்ள பரிச்சயம் அபாரமானது. ரகளையான
ரசனை கொண்டது. அனேகமாக நாம் ஒரு படத்தின் பெயரைச் சொன்னாலே அது எந்த நாட்டின் சினிமா,
அதன் இயக்குநர் யார் அதில் நடித்த நடிகர் நடிகையர் பெயர், அது வெளிவந்த ஆண்டு போன்ற
விபரங்களைத் துல்லியத்துக்கு மிக நெருக்கமாகச் சொல்லிவிடக்கூடியவர். இவையெல்லாம் இணையத்திலேயே
கிடைக்கக்கூடிய செய்திகள்தான். ஆனால் படங்களைப்பற்றிய தகவலோடு நிற்காமல் அந்தப் படத்தைப்பற்றிய
தன் கூர்மையான விமர்சனத்தை மூன்று நான்கு வார்த்தைகளுக்குள் மிக அலாதியானதொரு உடல்மொழியின்
துணைகொண்டு அற்புதமாகப் பகிரக்கூடியவர். அந்தப்படத்தின் மேலான ஆழந்த ரசனையின் பொருட்டு
உருவாகிவந்த மனஉடல் ஒத்திசைவாகத்தான் அதை நான் காண்டு வருகிறேன். அனேகமாக அவர் அறிமுகம்
செய்யும் படங்களைப் பிறகு நான் பார்க்க நேரிடும் போது அவருடைய நான்கு வரி விமர்சனம்,
அந்தப்படத்தின் மூலமாக நான் அடைந்த அனுபவத்துக்கு மிக நெருக்கமாகப் பொருந்துவதை உணர்ந்திருக்கிறேன்.
இனி வரும் எல்லா காலத்திலும் சினிமாவின் ரசனைக்குள்ளும் அதன் அறிவார்ந்த நுட்பத்துக்குள்ளும் நான் செயல்படும் பட்சத்தில் அது அத்தனையும் கார்த்திக்கே சமர்ப்பணம். ஆனால் கார்த்தி எப்போதும் தன்னைப்பற்றிச் சொல்லிக் கொள்வது, ”நான் ஒரு நுனிப்புல் மேய்பவன்” என்றுதான்.
சிறப்பு....!
ReplyDeleteஅப்புறம் தமிழ்மணம் இணைத்து விட்டேன்...
நன்றி...
தொடர வாழ்த்துக்கள்...