யாழி, நல்ல கவிதைக்காரர். இன்று கோவை
சென்றிருந்தபோது ஏற்கனவே திட்டமிட்டபடி சந்திக்க எண்ணி போன் செய்தேன். ஒரு இலக்கியக்
கூட்டத்தில் இருப்பதாகவும் இன்னும் சற்று நேரத்தில் முடிந்துவிடும் என்றும் சொல்லி
வரச்சொன்னார். போனேன்.
அது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம்
சார்பாக நடந்து கொண்டிருந்த ஒரு கவிதை வாசிப்புக் கூட்டம். வாசலில் யாழி கரம் குலுக்கி
உள்ளே அழைத்துச் சென்றார். அரங்கத்தில் சுமார் ஐம்பது தலைகள் இருந்தன. அதில் ஐம்பது
சதவிகிதம் ஐம்பதைத்தாண்டியவர்கள். நடுத்தரம் கொஞ்சம். இளைஞர்கள் கொஞ்சம். நான்கு இளம்
பெண்கள். நடுவயதை நெருங்கிய ஒரு திருநங்கை.
நாற்பது மதிக்கத்தக்க ஒடிசலான தேகன் ஒருவர் சில காகிதங்களைக்
கையில் வைத்துக்கொண்டு கவிதை வாசித்துக் கொண்டிருந்தார். பள்ளி ஆண்டுவிழாக் கூட்டத்தில்
எட்டாம் வகுப்புப் பிள்ளைகள் வாசிக்கும் கவிதைக்குச் சமமானதொரு ஆக்கம்தான். ஆனாலும்
வாசிப்பவரிடம் ஒரு உத்வேகம் இருந்தது. அங்கு தொடர்ந்து இருக்க வேண்டிய அவசியம் எனக்கு
இருப்பதாகப்படவில்லை.
நான் யாழியைத் திரும்பிப் பார்த்தேன். அவர் கற்பூரம். புரிந்துகொண்டார்.
போகலாம் என்றார். நாங்கள் எழுந்து வெளியெற எத்தனித்தவுடன் எங்களுக்கு முன் அமர்ந்திருந்த
திருநங்கை எழுந்து வெளியேறினார். அவரைச் சிலர் பின் தொடர்ந்தனர். நாங்களும் வெளியே
வந்தோம். வாசலில் அந்தத் திருநங்கையை மையப்படுத்தி ஒரு சிறுகூட்டம் கூடியது. கூடவந்த
சிலர் உடனடிச் சிரிப்புகளைப் பொருத்திக்கொண்டு அவருடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.
அவர் யார் என்று யாழியிடம் கேட்டேன். “அவர் ஒரு செக்ஸ்ஒர்க்கராக இருந்திருக்கிறார்.
ஒரு திருநங்கையாக தான் பட்ட வேதனைகளைப் பதிவு செய்ய எண்ணி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.
அவர்தான் இன்றைய கூட்டத்தின் சிறப்பு விருந்தினர். அவர் பேசி முடிக்க நீங்கள் வந்து
சேர்ந்தீர்கள். பிறகுதான் கவிதை வாசிப்பு ஆரம்பித்தது” என்றார்.
பேசிக்கொண்டே அரங்கத்தை விட்டு கொஞ்சதுாரம் வந்துவிட்டோம்.
யாழியின் சில முகநுால் நண்பர்கள் வந்திருந்தனர். அவர்களிடம் அறிமுகம் முடித்து இருவரும்
கிளம்பினோம். கொஞ்சம் புறநகர் வந்து ஒரு தேனீர்க் கடையில் நுழைந்து அமர்ந்தோம். யாழி
தன் இரண்டு கவிதைத் தொகுப்புகளை எனக்கு அன்பளித்தார். பரஸ்பர தகவல் பரிமாற்றம், எங்களுக்குத்
தெரிந்த அளவிலான கவிதைகுறித்த நுட்பங்கள், பொதுவான இலக்கிச்சூழல், முட்டைபப்ஸ் மற்றும்
தேனீருடன் எங்கள் முதல்சந்திப்பு இனிதே முடிந்தது. விடைபெற்றுக்கொண்டு திரும்பும் போது
இருவருமே சந்தோஷமாக இருந்ததாக உணர்ந்தோம்.
No comments:
Post a Comment