Sunday, September 22, 2013

6 மெழுகுவர்த்திகள் - சினிமா பற்றி...

இருண்மையின் மீது பாயும் வெளிச்சம்


நேற்றுப் படம் பார்த்தேன். உண்மையிலேயே மிரண்டுவிட்டேன் என்று தான் சொல்லவேண்டும். படம் ஆரம்பித்தது முதல் முடியும் வரை ஒரு கணம் கூட நம் கவனத்தைத் திசை திருப்ப விடாத கச்சிதமான திரைக்கதை.

ஏழாம் உலகம் நாவலில் குழந்தைகள் கடத்தப்பட்டு அவர்கள் உறுப்புகள் சிதைக்கப்பட்டு பிறகு பிச்சை எடுக்கத் தயார் படுத்தப்படுவார்கள். அப்படிக் கடத்தப்பட்டு முகம் சிதைக்கப்பட்ட சில குழந்தைகளை அடைத்து வைத்திருப்பதை ஜெயமோகன் அந்த நாவலில் ஒரு இடத்தில் தொட்டுக்காட்டியிருப்பார். அந்தக் காட்சியின் நீட்சியே ‘6 மெழுகுவர்த்திகள்’ படம்.

நான் அந்த நாவலைப் படித்த போது என் குழந்தையைத் திருடர்களுக்குப் பறிகொடுத்தால் என் மனநிலை எப்படியிருக்கும், எவ்விதம் பாதிக்கப்படுவேன், எப்படி அவளைத் தேடி அலைவேன் என்று நினைத்து நினைத்து மிகுந்த மனஉளைச்சலுக்குள்ளானேன். அந்த மனநிலையின் செயல்பாட்டுப் பிரதியே இந்தப் படம்.

ஒரு இளம் தம்பதிகள் தங்கள் அன்பு மகனான சிறுவனை ஒரு கூட்ட நெரிசலில் பறிகொடுத்துவிடுகிறார்கள். அந்த மகனை மீட்கப் புறப்படும் பாசமிகு தந்தையின் அலைச்சல் மிகு பயணமாய் விரிகிறது கதை. காவல் துறையின் மெத்தனத்தில் பொறுமையிழந்து தன் மகனைத் தானே தேடிக் கண்டுபிடித்துவிடும் முடிவுடன் காவல் துறையிலிருந்தே நுால் பிடிக்கிறான் அந்தத் தந்தை.

குழந்தைகளைக் கடத்த உதவிசெய்யும் ஒரு குழுவின் மூலமாகக் கிடைக்கும் ஒரு ஒற்றைத் தகவலைத் துணைகொண்டு ஆந்திரா மாநிலம் வழியாக இந்தியாவின் பல பகுதிகளில் அலைந்து திரிகிறான். அந்த கடும் கருப்புப் பயணத்தில் அவன் சந்திக்கும் குரூர மனிதர்களும் அதிர வைக்கும் சூழ்நிலைகளும் மிகப் பதட்டமான அனுபவமாக நமக்கு உணர்த்தப்படுகிறது. இளம் தளிர்கள் கடத்தப்படும் காரணம் நமக்கு ஒருவாறு தெரியவந்தவுடனேயே இயல்பாக நம்முடைய கவனமும் அவன் தந்தையைப் போலவே துளியும் சிதறாமல் ஒர்மை கொள்கிறது.

படத்தின் இன்னோரு அற்புதம் அதில் நடித்தவர்களின் வியக்க வைக்கும் உடல்மொழி. அதன் உச்சமென்று இருவரைச் சொல்லலாம். ஒருவர் தந்தையாக வரும் ஷாம். இன்னொருவர் அவருடனே பயணிக்கும் கார் ஓட்டுநர் மூணார் ரமேஷ்.

சில இடங்களில் கதாபாத்திரத்தின் கனத்தைத்தாங்க முடியாமல் ஷாம் தடுமாறுவது போல் தெரிந்தாலும் அதுகூட இயல்பான வெளிப்பாடாகவும் கருத இடமுண்டு. ஏனெனில் வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளை எதிர் கொள்ளும் போது மனிதர்கள் இப்படித்தான் எதிர்வினைபுரிவார்கள் என்பது யாரும் கணித்துவிட முடியாததுதானே. அந்த வகையில் ஷாம் தான் ஏற்றுள்ள கதாபாத்திரத்தின் மூலமாக நெருக்கடியான நிலைகளில், தான் அடையும் அனுபவத்தை மிக சூக்குமமாக நமக்கும் கடத்துகிறார்.
   
இன்னொருவர் மூணார் ரமேஷ். சிறுவனைத் தேடி அலையும் தந்தைக்கு உதவி செய்யும் கார் ஓட்டுநர் பாத்திரம் அவருக்கு. பல படங்களில் ஒரு துணைப் பாத்திரமாக வந்து போன ரமேஷ் தன் அபரமான நடிப்புத் திறனை இதில் நிறுவியிருக்கிறார். மிக மிக அற்புதமான பங்களிப்பு அவருடையது. இறுதியாக ஷாமுக்கு உதவி செய்ய வரும் முஸ்லீம் பெரியவரும் இந்த இடத்தில் கவனம் கொள்ளத்தக்கவரே.

மற்றும் இதில் குழந்தை கடத்தல் தொழிலில் ஈடுபடும் பல வகை மனிதர்கள் வந்து போகிறார்கள். அனைவருமே தங்கள் தொழிலின் குரூரத்தை மிக நேர்த்தியாக வெளிக்காட்டியிருக்கிறார்கள். இந்தக் கொடூரக் காட்சிகளின் படைப்பூக்கம் இதில் நடித்த நடிகர்களின் திறனாலேயே பூரணத்துவம் பெறுகிறது.

இது தவிர வியக்க வைக்கும் ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசையும் அலைந்து திரியும் தந்தையுடனேயே நம்மையும் படபடப்பாய்ப் பயணிக்க வைக்கும் கிச்சாவின் ஒளிப்பதிவும் யதார்த்தம் விரவிக்கிடக்கும் இயல்பான ஜெயமோகனின் வசனங்களும் படத்தைத் தரமான வரிசையில் நிறுத்தி வைக்கின்றன.


சமூகத்தில் மிகத் தீவிரமாகப் புரையோடிக் கொண்டிருக்கும் ஒரு கருப்பு அவலத்தை அதன் குரூர அழகியலுடன் பதிவு செய்கிறது இந்தப் படம். கதை சொல்லும் யுக்தி மற்றும் காட்சிகளின் எதிர்பாராத திசைமாறுதல்கள் இவைகளின் மூலம் பார்வையாளனுக்கு ஏற்படுத்த வேண்டிய உணர்வுகளையும் கடத்த வேண்டிய அனுபவங்களையும் லாவகமாக, பிசிறில்லாமல் நிகழ்த்திக் காட்டும் V.Z.துரையின் இயக்கம் இந்தப் படத்தை சந்தேகமில்லாமல் ஒரு கலைப்படைப்பாக நம்முன் வைக்கிறது.
3 comments:

 1. நல்ல விமர்சனம்....வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. ரசனையான விமர்சனம்... வாழ்த்துக்கள் நண்பரே...

  ReplyDelete
 3. really a good and obsorving review..!

  -Dr.Sathya

  ReplyDelete