Wednesday, August 14, 2013

வா.மு.கோமு விழா - அங்கீகாரத்தின் தொடர்ச்சி...


புத்தக வெளியீட்டு விழா
 
 
கடந்த ஞாயிறு (11.08.2013) மாலை ஈரோட்டில் எழுத்தாளர் வா.மு.கோமுவினுடைய இரண்டு புத்தகங்களின் (தவளைகள் குதிக்கும் வயிறு ...மற்றும் பிலோமி டீச்சர்) வெளியீட்டு விழா நடந்தது. அதில் நானும் வாழ்த்துரை வழங்க முடிவாகியிருந்தது. கடந்த மாதம் அவருடைய எழுத்துகளை அங்கீகரித்து நான் எழுதிய கட்டுரையை படித்த நண்பர்கள் என்னையும் தேர்ந்தேடுத்தார்கள் என்று நினைக்கிறேன். நன்று.

இலக்கியக் கூட்டத்துக்கே உரிய அளவான கூட்டமும் எளிமையான மேடைச் சம்பிரதாயங்களுமாக விழா துவங்கியது. வா.மு.கோமுவின் எழுத்தை இதுநாள் வரை ‘பாலியல் எழுத்து’ என்று நிராகரித்துக் கொண்டிருந்த சில நண்பர்களும் விழாவுக்கு வந்திருந்தார்கள். புத்தகங்கள் வெளியிடப்பட்டன. அது குறித்துப் பேசப்பட்டது. வா.முவைப் பற்றி நான் ஏற்கனவே எழுதி வெளியிட்ட பதிவைக் கட்டுரையாக வாசித்தேன். இறுதியில் அவர் ஏற்புரை நிகழ்த்தினார். எல்லாம் சுபம்.

இந்தக் கூட்டம், வா.மு.கோமு பற்றிய பல முன்முடிவுகளைத் தகர்த்து அவருடைய எழுத்துகளை நிராகரித்த நண்பர்கள் மத்தியில் ஒரு மனமாற்றத்தை உருவாக்கியிருந்ததை உணரமுடிந்தது. அவரை நிராகரித்த நண்பர்கள், தங்கள் கருத்துக்களை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருப்பவர்களல்ல. நல்லதெனப்படும் பட்சத்தில் தங்கள் நிலைகளை எப்பொழுதுமே மறுபரிசீலனைக்கு உட்படுத்திக் கொள்ளக்கூடியவர்கள். கருத்துக்களை எளிதில் மக்களிடம் கொண்டு சேர்க்கக்கூடிய வல்லமை பெற்றவர்கள். அவர்கள் வா.மு.கோமுவின் எழுத்துகளைப் படித்து அதை அங்கீகரிக்கும் நிலை ஏற்படுமேயானால் வா.மு.கோமுவின் எழுத்து இன்னும் பல வாசகர்களைச் சென்றடையும்.

எனக்குப் பின்னால் வாழ்த்துரை வழங்க வந்த மோகனரங்கன் இப்படிச் சொன்னார் :

“நல்ல படைப்பாளிகளை முதலில் நாம் அலட்சியப்படுத்துகிறோம். பிறகு மெல்ல கவனிக்கிறோம். பிறகு அவர்களுடன் முரண்படுகிறோம். இறுதியாக அவர்களை ஏற்றுக் கொண்டு அங்கீகரிக்கிறோம்.”
 
*
வாசித்த கட்டுரையின் சுட்டி : http://veerawritings.blogspot.com/2013/07/blog-post_22.html
 
 
 
 
 
 

No comments:

Post a Comment