Monday, November 12, 2012

நாஞ்சில்நாடனும் ஒரு சிறுகதையும்

வெகுஜன ரசிப்புத்தளத்தில் இருந்து வந்த என் வாசிப்பு அனுபவத்தை இலக்கியப்படுத்திய என் முதல் முன்னோடி நாஞ்சில்நாடன். அவரின் கதைகளைப் பிடித்துக்கொண்டுதான் என் முதல் அடியை தீவிர வாசிப்பின் மாபெரும் கோட்டைக்குள் அடி எடுத்து வைத்தேன். அவருடைய எழுத்தின் தடத்தை ஒட்டியே என் ஆரம்பகால வாசிப்புகளின் ஒப்பீடு இருந்தது. கதைசொல்லலில் அவருக்கிருந்த துல்லியத்தன்மை எனக்குள் பெரும் கிளர்ச்சியை உண்டாக்கியிருந்த காலத்தில் அவரின் கதைகள் மூலமாகவே நான் நாஞ்சில் நாட்டைப் பற்றிய ஒரு முழுமையான சித்திரத்தை என் மனதுக்குள் உருவாக்கிக் கொண்டேன். தொடர்ந்த அவருடையதான எழுத்தின் வாசிப்பு தந்த உற்சாகத்தின் காரணமாக அவருடைய கதைகளின் களங்களையும் அவரின் கதாபாத்திரங்களையும் பார்த்துவிடவேண்டும் என்ற நாடகத்தனமானதொரு எண்ணம் எனக்குச் சிறு செடியைப் போல் முளைவிடத் துவங்கியது. பின்னாளில் அது பெருமரமாய் வளர்ந்து நிற்கையில் நான் நாஞ்சில் நாட்டுப் பயணத்தைத் தீர்மானித்துவிட்டேன்.

கன்னியாகுமரிமாவட்டத்தின் செழிப்பான பல கிராமங்களின் தொகுப்பே நாஞ்சில் நாடு. அதில் ஒன்று வீரநாராயணமங்களம். நாஞ்சில் நாடனுடைய சொந்த ஊர். நாகர்கோவிலிருந்து இறச்சகுளம் சென்று பின் வலம் திரும்பிச் செல்ல ஆரம்பித்தவுடனேயே அவரின் சிறுகதைத் தொகுப்பைத் திறந்துவைத்துப் படிக்க ஆரம்பித்ததைப் போன்ற உணர்வு உண்டானது. அவரின் கதாபாத்திரங்களான சின்னத்தம்பியா பிள்ளையும் பூதலிங்கம் பிள்ளையும் பூமணியும் வழியெங்கும் குறுக்கிட்டார்கள். அவர் விரித்து விரித்து எழுதிய நெர்கதிர் வயல்வெளிகளும் நீலப்பச்சை மலைக் குன்றுகளும் சிதிலப்பட்ட தார்ச்சாலைகளும் வரவேற்க, வீரநாராயணமங்களம் நோக்கி மெல்ல நகர்ந்தேன்.
வழக்கமாக சின்னத்தம்பியா பிள்ளை குளிக்கும் பழையாறு கிளை பிரிகின்ற இடத்தை திருவிதாங்கூர் மகாராஜா காலத்து சுடு செங்கல் சுண்ணாம்புக்காரைப் பாலத்தின் மேல் நின்று கொண்டு பார்த்தேன். சிதைபட்ட பாலத்தில் வேலை நடந்து கொண்டிருந்தது. அவர் எழுதின படி அப்பொழுதும் பிள்ளைமார்களும் சின்னஞ்சிறார்களும் குளித்துக் கொண்டுதானிருந்தார்கள்.
வீரநாராயணமங்களம் வந்தவுடன் முதலில் தென்பட்டது அவர் படித்த அந்தப் பள்ளி. நவீன தமிழ் இலக்கியச் சூழலின் ஒரு தவிர்க்க முடியா ஆழுமையைத் தந்த அந்த ஆரம்பப்பள்ளியையும் அதன் அருகிலேயே ஓடிய வாய்க்காலின் படித்துறையையும் பக்கத்தில் உயர்ந்திருந்த ஆழமரத்தையும்வியப்புடன் பார்த்துக் கொண்டு நின்றேன். கதைகளின் வழியே எனக்குள் பதிந்திருந்த அத்தனை உறுப்புகளும் என் கண்முன்னே நிஜமாக விரிந்து நின்ற அந்தத் தருணங்கள் மிக வித்தியாசமான அனுபவமாக இருந்தது. குறுக்கிட்ட ஒருவரிடம்ஒருவேளை மருண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேயாகத் தெரிவது போலவோ என்னவோ, அவர் கூடஎடலக்குடிராசாபோலவே இருந்தார்.- “நாஞ்சில் நாடன்வீடு எதுங்ண்ணா ?“ என்றேன். ஒரு முட்டுச் சந்தை நோக்கிக் கைநீட்டினார். அதில் நுழையும் போதே அவர் இளமையின் வாழ்வு எனக்குள் மீண்டது. கைநீட்டி காட்டிய அடையாளத்தை அடைந்தேன். கதவு சற்று திறந்திருந்தது. என் குரலுக்கு ஒருவர் வெளியே வந்தார். வெற்று உடம்பு, இடுப்பில் வேட்டி, பத்து நாள் தாடியுடன் ரமணமகரிஷி போல இருந்த அவர் நாஞ்சிலுடைய உடன் பிறந்த சகோதரர் காந்தி.
பிறகு விருந்தோம்பல்தான். என் களைப்பை உணர்ந்து வெந்நீருக்குள் சோற்றுக் கஞ்சியை விட்டுக் கொடுத்தார்கள். அவருடைய தாயார் சரஸ்வதி அம்மாளின் வெள்ளந்தியான பேச்சை வெகுநேரம் கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தேன். அன்று தை அமாவாசையாதலால் பாசிப்பருப்பு பாயாசம் கிடைத்தது. மதிய உணவு நேரம் முடிந்து பிற்பகலில் நான் சென்றதால் சாப்பிட முடியவில்லை. நாஞ்சில் நாட்டு சமையலை அவர் வீட்டில் சாப்பிடத்தான் ஆசை. கொடுத்து வைக்கவில்லை. கொடுப்பைக் கீரை, துவரன் பருப்புக் குழம்பு, எள்ளுத் துவையல், தாளிச்ச மோர், புளிக்கறி, தீயல், அவியல் என்று எல்லாவற்றினுடைய பக்குவமும் சொன்ன அவருடைய அம்மா, சாப்பிடாமல் விடைபெற்ற என்னிடம் அதற்காக வருத்தப் பட்டார்கள். அவர் சொல்லக் கேட்டதே சாப்பிட்டதைப் போலத்தான் என்றதும் சிரித்துக் கொண்டே மறக்காமல் காப்பி கொடுத்து வழியனுப்பிவைத்தார்கள்.

இந்த வாரம் நாஞ்சில்நாடனுடைய சிறுகதை (பெருந்தவம்) ஆனந்தவிகடனில் வந்துள்ளது. மனிதக் கயமைகளைத் தன் வழிதோரும் இனம் கண்டு அடிக்கோடிட்டுவரும் அவருடைய மற்றுமோரு சிறப்பான கதை. வாழ்கையின் ஏதோ ஒரு புள்ளி அதன் வலிமையைப் பொருத்து நம் பயணத்தின் திசையையே மாற்றிவிடும் சாத்தியம் இருப்பதைச் சொல்லும் கதை. நாம் இப்போது வாழ்க்கையில் இருக்கும் இந்த நிலைக்குக் கூட நம்முடைய கடந்த காலத்தின் ஏதோ ஒரு நிமிடமே காரணமான இருந்திருக்கும். முடிவுகள் மாற்றியமைக்கப்பட வாய்ப்புள்ள அந்த நிமிடத்தின் புள்ளியைப் பதிவு செய்துள்ள அருமையான படைப்பு 'பெருந்தவம்'.

3 comments:

 1. இனிய அனுபவம்...பகிர்வுக்கு நன்றி நண்பரே...

  ReplyDelete
 2. இப்படி தான் ஒவ்வொருவரும் தன் திறமையை வளர்த்து கொள்ள வண்டும் என்று அழகாக எழதியுள்ளீர். நன்று. ஆனால் நீங்கள் உணவு அருந்தாமல் வந்தது சற்று ஏமாற்றத்தை அழிக்கிறது.நாஞ்சில் நாட்டைப் பற்றிய அனுபவம் அருமை.  ள்

  ReplyDelete
 3. அண்ணா, சிரந்த மொழித் துள்ளியத்தை அல்லது மொழி ஆளுமையை இப்பதிவில் காண்கிறேன், மேலும் உங்கள் எழுத்தை எதிர்நோக்கும்,

  கண்ணப்பன்

  ReplyDelete