Tuesday, January 29, 2013

வாடிவாசல் - குறுநாவல் பற்றி...


கருணையை வேண்டி நிற்கும் மிருகம்

சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் குறுநாவலை நான் படிக்க துாண்டியது எது என்று நினைத்துப்பார்க்கிறேன். நமது சமகால இலக்கிய ஆளுமைகளின் சிபாரிசுப் பட்டியலில் இடம்பெறும் முக்கிய ஆக்கம் என்பதாலோ அல்லது சி.சு.செல்லப்பா பற்றி நான் அறிந்து வைத்திருந்த உணர்ச்சியூட்டக்கூடிய தகவல்களின் அடிப்படையில் அவரைப்பற்றி எனக்குள் உருவாகியிருந்த ஆர்வத்தினாலோ கூட இல்லை.
 
ஜல்லிக்கட்டை நான் ஒருவித ஜீவகாருண்யக் கருத்தாக்கத்தின் அடிப்படையிலேயே புரிந்துவைத்திருக்கிறேன். தமிழ்சினிமா ஜல்லிக்கட்டைப் பற்றித் தந்த நாடகத்தனமான சித்திரங்களாகவும் பொங்கல்நாளன்று தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி சுவாரஸ்யத்துக்காகக் காட்டப்படும் மேம்போக்கான வீர சாகச நிகழ்வாகவுமே ஜல்லிக்கட்டு என் அகத்தில் பதிவுகொண்டிருந்தது. சமீபமாக புத்தகக் கடையொன்றில் தேடல் படலத்தின் போது ஒரு புத்தகத்தின் பின் அட்டையில் என் கண்ணில் பட்ட ஒரு பழைய விளம்பரம் அந்த புரிதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
 
அந்தப் புத்தகம் காலச்சுவடு பதிப்பாக வந்த ‘வாடிவாசல்‘ குறுநாவல்.1959 ம் வருடம் செப்டம்பர் மாதம் தான் நடத்திவந்த ‘எழுத்து என்ற சிறுபத்திரிக்கையில் வாடிவாசல் குறுநாவல் பற்றி சி.சு. செல்லப்பா கொடுத்திருந்த விளம்பரம் அந்தப் புத்தகத்தின் கடைசி பக்கத்தில் அச்சாகியிருந்தது. அது:
 
ஜெல்லிக்கட்டு ஒரு வீர நாடகம். அது விளையாட்டும் கூட. புயவலு தொழில்நுட்பம், சமார்த்தியம் எல்லாம் அதுக்கு வேண்டும். நான் போராடுவது மனிதனுடன் அல்ல, ரோஷமூட்டப்பட்ட ஒரு மிருகத்துடன் என்பதை ஞாபகத்தில் கொண்டு வாடிவாசலில் நிற்கவேண்டும் மாடு அணைபவன். அந்த இடத்தில் மரணம்தான் மனிதனுக்குக் காத்துக்கொண்டிருக்கும். காளைக்குத் தன்னோடு மனுஷன் விளையாடுகிறான் என்று தெரியாது. அதற்கு விளையாட்டிலும் அக்கறை இல்லை.
 
மேற்கண்ட விளம்பரத்தில் காளைக்குத் தன்னோடு மனுஷன் விளையாடுகிறான் என்று தெரியாது. அதற்கு விளையாட்டிலும் அக்கறை இல்லை என்ற இரண்டு வாக்கியங்களும் எனக்குள் இனம்புரியாத உத்வேகத்தை உண்டாக்கி வாடிவாசலைப்பற்றிய ஆர்வத்தைத் துவக்கின. விளம்பர வரிகளிலேயே இவ்வளவு சுவாரஸ்யம் கூட்டியிருக்கும் சி.சு.செல்லப்பா ‘வாடிவாசலை‘ எங்கணம் சமைத்திருப்பார் என்ற உணர்வு மேலிட படைப்புக்குள் நுழைந்தேன்.
 
ஒரு ஜல்லிக்கட்டு நிகழ்வைத் தன் தேர்ந்த காட்சிச்சித்தரிப்பு வழியாக நம் மனக்கண்ணுள் விரியவிட்டு காளைகளை ஒரு புறமும் காளை அணைபவனை மறுபுறமும் நிறுத்திப் புனைவை விரிய விடுகிறார் செல்லப்பா. வரையறுக்கப்பட்ட ஒரு கதைத் திட்டத்துடன் முறையான கால இடைவெளியில் அவர் உருவாக்கி இறக்கிவிடும் கதாபாத்திரங்கள் கதையின் விரிவுக்கும் முடிவுக்கும் கச்சிதமாகப் பங்காற்றுகின்றன.
 
மதுரை ஜில்லாவின் ஒரு கிராமத்தில் ஒரு ஜல்லிக்கட்டு நிகழ்வதற்கான ஆயத்தங்கள் துவங்குகின்றன. ஜனங்கள் ஆர்வமுடன் திரள்கிறார்கள். மாடுகளும் மாடுஅணைபவர்களும் வந்து கூடுகிறார்கள். அது அந்தப் பகுதியின் ஜமீந்தார் ஒருவரால் முன்னின்று நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சி. அந்த ஜமீனுடைய காளைகளும் அதில் கலந்து கொள்ள இருக்கின்றன. அவை யாராலும் அடக்க முடியாத பயிற்சியும் தினவும் ஏற்றப்பட்ட காளைகள். பக்கத்து ஊரைச் சேர்ந்த மாடு அணையும் வீர இளைஞர்களான பிச்சியும் அவனுடைய சகபாடி மருதனும் அதில் கலந்து கொள்ள வருகிறார்கள்.  அவர்களின் நோக்கம் வாடிவாசலில் புகுந்து புறப்படும் ஏதோ சில மாடுகளை அணைவதல்ல. ஜமீந்தாரின் மாடுகளுள் மிக உக்கிரமானதும் வெறியேறியதுமான, செல்லப்பாவின் வார்த்தைகளில் சொல்வதானால் கருப்புப் பிசாசு‘ என்று வர்ணிக்கப்படும் ‘காரி‘ என்னும் காளையை அணைந்து அடக்குவதேயாகும். ‘காரி‘ மீதான அவர்களுடைய துல்லியமான இலக்கும் அந்த இலக்கின் நோக்கத்திற்கான தார்மீகக் காரணமும் தான் கால ஒருமையைக் கைகூட வைத்துப் புனைவை சிலாகிப்பின் உச்சத்திற்கு எடுத்துச் செல்கின்றன.
 
 
மிக இயல்பாக ஆரம்பமாகி லயத்தோடு நகரத்தொடங்கும் கதை, பிச்சி தான் எதிர்பார்த்து வந்த ‘காரி‘ யைக் கண்ணில் கண்டவுடன் மாயவித்தை புரிந்து சடுதிநேரத்திற்குள் நம் மனோவேகத்தை முடுக்கிவிட்டு சிலிர்ப்பான வாசிப்பனுபவத்தைத் தரத்துவங்குகிறது. இப்படி ஆரம்பமாகிறது அது:
 
பட்டத்து யானைக்குப் படாம் போர்த்தின மாதிரி பல வர்ணப்பட்டு, ஜரிகை, ஜிகினா இவைகளால் ஆன சிங்காரப் பொன்னாடை திமிலுக்கு முன்னிருந்து புட்டாணி வரைக்கும் முதுகோடு படிந்து இருபுறமும் மணிக் குஞ்சலங்களுடன் தொங்க, ஒரே புஷ்பாலங்காரமாக ஜல் ஜல் என்று சலங்கை மாலையும், கொம்பு, கால் சதங்கைகளும் அசைவுக்கு அசை விட்டு விட்டு ஒலிக்க, நாட்டியக்காரி மேடைக்கு வருகிற மாதிரி நிமிர்ந்து நிமிராமலும் முகம் லேசாகத் தணித்து, கண்கள் கீழ் நோக்கி இரு பக்கமும் பார்க்க, கம்பீர நடை போட்டு அமரிக்கையாக வந்து நின்றது காரி. தொழுவத்தில் அதன் அவங்காரங்கள் கலைக்கப்பட்டு உள்வாடிககுக் கொணரப்பட்ட காளை ஒரு தடவை முக்காரமிட்டு அடைப்புக்குள் வந்தது.
 
       ”கருப்புப் பிசாசு டோய்……” கூட்டம் ஆர்ப்பரித்தது.
 
கத்திய அத்தனை குரல்களிலும் ஒரு நடுக்கம், திகில் வெடித்துப் பரவியது. வாடிவாசல் அமர்க்களப்பட்டது. சில விநாடிகளில் வாடிவாசலில் முண்டியடித்து எக்கி நின்ற கூட்டம் போன இடம் தெரியவில்லை. காரி கொம்புக்கு எட்டாதபடி எப்படியெல்லாம் பாதுகாத்துக் கொள்வதேன்று தவித்து அவனவன் அங்குமிங்கும் ஓடிப் பதுங்கப் பார்த்தான். துடைத்துவிட்ட மாதிரித் திட்டிவாசல் குழப்பமின்றி விஸ்தாரமாகியது. எந்தக் காளைக்கும் காட்டாத மரியாதை கொடுத்து ஆற்று நோக்கிய பாதையை விசாலப்படுத்தி காளை தன் போக்கில் போக வழிவிட்டு பிளந்து நின்றது கூட்டம். இரண்டாவது வரிசையில் நிற்கவே ஒவ்வொருவரும் தவித்தனர்.
 
 
தனக்கு முன் நெருக்கி வந்து நின்றவர்களை முண்டித் தள்ளிவிட்டு நகர்ந்து முன்வந்து பிச்சி அதை வெறியோடு பார்த்தான். அப்பனைக் காரி கொந்தி எறிந்தபோது தான் சற்றுத் தள்ளி நின்றது ஞாபகம் வந்தது. அப்பன் குடல் வெளியே வந்தபோது ஊற்றாக பெருகி வழிந்த ரத்த வாசனை இப்போது அவன் மூக்கில் நெடியேறிற்று. காளையின் கொம்புகளுக்குக் கண்களைத் திருப்பினான். கொம்பில் அப்பன் ரத்தம் இன்னும் வழிந்து கொண்டிருப்பது போல் அவனுக்குப் பிரமை ஏற்பட்டது. அந்தக் கொம்பிலிருந்து ஒரு வீச்சம் அவன் மூக்கில் அடித்த மாதிரி, மூக்கை ஒரு தடவை சிணுங்கி மூச்சை வெளியே தள்ளினான்.
 
அதற்குப்பின்னான கதையாடல் ஒரு மிகச்சிறந்த உலக சினிமாவின் அனுபவத்துக்கு இணையானவை. பிச்சிக்கும் காரிக்குமான திகிலுட்டும் நேருக்கு நேர் மோதலை நுட்பமான எழுத்தின் வழியே பதைபதைப்புக்குள்ளாக்கும் காட்சிச் சாத்தியமாக்குகிறார் செல்லப்பா.
 
ஒரு கட்டத்தில் ‘காரி‘ யைப் பிச்சி சாதுர்யமாக அணைந்து விடுவான். காளை திமிரித் தரையிலிருந்து மேலேழும்பிக் குதிக்கும். மூன்று முறையான குதிப்பில் அதன் உடலோடு ஒட்டிக் கட்டிக்கொண்டிருக்கும் பிச்சியும் சேர்ந்து மேலேழும்புவான். ஒவ்வொரு தடவை காரி தன் உடலை மேலேழுப்பிக் கிழ்இறங்கிக் கால் ஊன்றும் போதும் அதன் மூர்க்கத்தையும் அப்போது காரியின் உடலோடு ஒட்டியிருக்கும் பிச்சியின் அலைகழிப்பான நிலையையும் ஸ்லோமோசன் தொழில்நுட்பத்தோடு மிக நிதானமாக விவரித்திருப்பார். அப்போதுகூட அனல் பறக்கும் அந்த மொத்தக் காட்சியையும் வேகம் துளியளவும் மட்டுப்படாமல் நகர்த்திச் செல்வார்.
 
மேலோட்டமாகப் பார்த்தால் மிருகத்திற்கும் மனிதனுக்குமான மோதலாகத் தெரியும் ஜல்லிக்கட்டு, மனிதனுக்கும் மனித மனதுக்குமான மோதலாகவே வழிநெடுகிலும் இதில் உணர்த்தப்டுகிறது.. பிச்சியைப் பொருத்த வரை தான் தந்தைக்குச் சமர்ப்பிக்கும் வெற்றியாகவும் ஜமீந்தாருக்குக் கர்வமிகு ஜமீன் அடையாளமாகவும் கிழவனுக்கு ஊர் மற்றும் சாதிப் பெருமையாகவும் முருகுக்கு விசுவாசத்தை காண்பிக்கும் வாய்ப்பாகவும் காளை இதில் அனைவராலும் குறியீடாக்கப்பட்டு வதைக்கப்படுகிறது. கடைசியில் நம்மிடம் கருணை வேண்டி நிற்பது இது எதுவுமே அறியாத அந்த மிருகம் மட்டுமை. செல்லப்பாவே சொல்வதைப்போல் காளைக்குத் தன்னோடு மனுஷன் விளையாடுகிறான் என்று தெரியாது. அதற்கு விளையாட்டிலும் அக்கறை இல்லை

 
புத்தகம் : வாடிவாசல்
ஆசிரியர் : சி.சு.செல்லப்பா
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம். போன் : 04652 278525
 

9 comments:

 1. தேர்ந்த, நேர்த்தியான விமர்சனம். வாசிக்க ஆவலைத் தூண்டுகிறது.

  ReplyDelete
 2. அருமை... பாராட்டுகள்

  ReplyDelete
 3. விமர்சனம் அருமை அண்ணா... முன்‘னவர் சொன்னதுபோல தேர்ந்த நேர்த்தியான விமர்சனம், எழுத்து. படிக்கவேண்டும்..

  ReplyDelete
 4. வாசிக்க ஆர்வமாய் இருக்கிறேன்.....முயற்ச்சிக்கிறேன்.......நன்றி ...ஆர்வத்தை தூண்டியமைக்கு

  ReplyDelete
 5. விறுவிறுப்பான விமர்சனம்... நன்றி...

  ReplyDelete
 6. // காளை திமிரித் தரையிலிருந்து மேலேழும்பிக் குதிக்கும். மூன்று முறையான குதிப்பில் அதன் உடலோடு ஒட்டிக் கட்டிக்கொண்டிருக்கும் பிச்சியும் சேர்ந்து மேலேழும்புவான்.//
  மாட்டு திமில புடுச்சுகிட்டு ஒருத்தன் ஓடி வராப்புடியா இருக்குங் சகல..
  நல்ல விமர்சனம் :-)

  ReplyDelete
 7. விமர்சனமே போதும் போல் இருக்குது....:)

  ReplyDelete
 8. விமர்சனம் அருமை! வாழ்த்துக்கள், நண்பரே...

  ReplyDelete
 9. A good Review Veera. Feel like reading the novel after reading your review.. Nice..

  ReplyDelete