Friday, November 2, 2012

என் மற்றொரு பிறந்த நாள்

இன்று நவம்பர் 2 ஆம் நாள். என் வாழ்வின் மிக முக்கியமான நாள். நான் புகைபிடிக்காமல் இருக்கத்தொடங்கிய நாள். புகையை நிறுத்தி ஆண்டுகள் பல கடந்துவிட்டன. என் எட்டாம் வகுப்பு விடுமுறையில் ஆரம்பித்த பழக்கம். “மெல்ல இழுக்கனும்டா…….புகையை முழுங்கக்கூடாது….மெல்ல இழுத்து விடு….இந்தா இப்படி பிடி..” என்று தங்கவேலுதான் முதலில் பற்றவைத்துக் கொடுத்தான். என் பள்ளித்தோழன். அவனை எனக்கு மிகப்பிடிக்கும் என்பதால் அவன் பிடிக்கச் சொன்ன பீடியும் பிடித்துப் போனது. முதல் இழுப்புக்கே அவன் சொன்ன பாடத்தைக் கோட்டைவிட்டேன். புகை தவறித் தொண்டைக்குள் இறங்கிவிட்டது. கண்களில் நீர் கோர்க்க இருமினேன். உயிர் போய்விடும் என்றுதான் நினைத்தேன். ஆனால் தங்கவேலு மெல்லத் தலையைத் தட்டிக்கொடுத்தான். சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு இரண்டாவது இழுப்பு இழுத்தேன். இப்போது கொஞ்சம் பிடிகிடைத்தது போல் இருந்தது. மூன்றாவது நான்காவது இழுப்பில் புகை என்வசமானது. தொண்டைக்குள் இறக்காமல் வாயளவில் மட்டும் எப்படிப் புகையைத் திருப்பியனுப்புவது என்று புரிந்த அந்தக் கணத்தில் இருந்து நான் வயதுக்கு வந்துவிட்டேன்.

எவ்வளவு நாளைக்குத்தான் புகையை நுரையீரலுக்குக் கொண்டுசெல்லாமல் வெட்டியாக விட்டுக்கொண்டிருக்க முடியும்..?? இன்னொரு புகை நண்பன் ஆரம்பித்தான்,“டேய் இங்க பாருங்கடா வீரனுக்கு பொகைய உள்ள இழுக்கத் தெரியல….ஏஏஏஏய்ய்ய்ய்….இவ்வளவு தானாடா உன்ற வீரம்…??”. என்னுடைய பெயரில் இருக்கும் வீரத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம். கவனமாகப் புகையை உள்ளே இழுத்து இறக்கினேன்….!! புற்றுக்குள் நுழையும் பாம்பைப்போல் மெல்ல நுரையீரலுக்குள் நெளிந்து நுழைந்தது புகை. “நமக்குன்னு ஒரு ஸ்டேட்டஸ் இருக்கில்ல மாப்ள…!! பீடியக்குடிச்சுக்குட்டு இருக்கியே….இந்தா பில்டரு” என்று சொல்லி என் மாமாபையன் சுப்ரமணி நீட்டிய சிகரெட் அப்போதுதான் அறிமுகமாகியிருந்த பனாமா பில்டர். இருபது பைசாவுக்கு ஒரு சிகரெட் கிடைத்தது. விரலைத்தாண்டிய நீளம். வெள்ளைவெளேர் என்ற தேகம். மூக்கில் வைத்து முகர்ந்து பார்த்தால் மூளைக்குள் கிர்ர்ர்….என்று ஏறும் அதன் மயக்கவைக்கும் மணம். பிராண்ட் செட்டாகி விட்டது. இனியென்ன….இழுக்க இழுக்க இன்பம் தான்….!!

ஒருநாள் எங்கப்பா சாட்டையை எடுத்துக்கொண்டு விளாசு விளாசென்று விளாசினார். “அய்யய்யோ அடிக்காதீங்ப்பா அடிக்காதீங்ப்பா….” என்று அலறித்துடித்தேன். பத்துநாள் வரைக்கும் தாங்கியது அந்த அடி. தங்கவேல் மறுபடியும் ஆறுதல் சொன்னான். இந்த முறை எப்படி அப்பாவிடமிருந்து மிகத்தந்திரமாகத் தப்பிப்பது என்பதையும் சேர்த்துச் சொல்லிக் கொடுத்தான். அப்புறம் என்ன..? மீண்டும் புகைய ஆரம்பித்துவிட்டது. பள்ளி முடித்துக் கல்லுாரிக்குள் நுழைந்தவுடன் அதுவரை நெடுங்காலமாகத் தன் கொடூரத்தை என் நுரையீரலுக்குள் நிகழ்த்திக் கொண்டிருந்த பனாமா சிகரெட் தன்னுடைய இடத்தை பில்டர் வில்ஸூக்கு விட்டுக்கொடுத்துவிட்டு விலகிக்கொண்டது. புதியது அதைவிடப் பவர்ஃபுல். சும்மா இருக்குமா..?? தொடர்ந்து ஆடியது அதன் ஆட்டத்தை. பதிமூன்று வருடங்கள் தொடர்ந்தது பழக்கம். நாள் ஒன்றுக்கு இரண்டு பாக்கெட் அளவுவரை எட்டியபோது எமனுக்கு மூக்கு வியர்த்துவிட்டது. விலா எழும்புகள் நோகக் குத்திக்கிளம்பியது இருமல். இடையறாது இருமியதில் தொண்டையில் ரணமேற்பட்டு ரத்தம் கசிந்தது. விளைவு..!! கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சிறப்பு விருந்தினராக அனுமதிக்கப்பட்டேன்.

மிகக் கடுமையாய் நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவர நான்கு நாள் ஐ.சி.யு விலும் பதினொரு நாள் வெளியிலும் கிடந்தேன். மரணத்தை நெருங்கிப் பார்த்ததாலோ, மருத்துவரின் அறிவுரையாலோ அல்லது என் கண்மணியின் காதல் கசிந்த கண்ணீரினாலோ தெரியவில்லை புகைப்பதை நிறுத்திவிட முடிவுசெய்தேன். அதற்காக நான் கொண்ட முயற்சிகள் மிக முக்கியமான திறப்புகளுக்கு இட்டுச்சென்றன. மிக சுவாரஸ்யம் கொண்ட அந்த ஆராய்ச்சிகள் என் உடலிலும் மனதிலும் ஆழ்ந்த அனுபவங்ளை நல்விளைவுகளாய் நிகழச்செய்தது. ஒருநாள் நான் புகையை முற்றாக விட்டுவிட்டேன். அந்த நாள்தான் நான் மீண்டும் பிறந்த இந்த நாள்.
 

-நிலம் புயல் மகாபலிபுரத்தில் கரையைக் கடந்ததற்கு மறுநாள் எழுதியது.
 

2 comments:

 1. உண்மையிலே மிக நல்ல நாள் நண்பரே...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. சொல்லாமல் சொல்லிய அறிவுரை, எல்லோருக்கும்....புகைபிடிபோருக்கு புரியுமேயானால் நிச்சயம் எங்காவது குத்தும்....
  weldone அண்ணா

  ஆஸ்பிட்டல் வரை போனது எனக்கு தெரியாம போச்சே....:( :( :(

  ReplyDelete