ஒரு திகில் அனுபவம்....
‘பீட்சா’ வைப்பற்றி
வந்துகொண்டிருக்கும் பாசிடிவ் ரிப்போர்ட் தந்த நம்பிக்கையில் இன்று படம் பார்த்துவிடுவதென்று
முடிவெடுத்தேன். படம் ஆரம்பிப்பதற்கு சற்று முன்பே போய்விட்டேன். கொத்துக்கொத்தாக கல்லுாரி
மாணவர்களும் மாணவிகளுமாகக் கலைகட்டத்துவங்கியது திரையரங்கம். படம் ஆரம்பித்த சற்றுநேரத்திலேயே
அதற்கான காரணம் தெரிந்துவிட்டது. படத்தின் துவக்கத்தில்
ஒருகாட்சி - காதலன் அவனுடைய காதலியின் ஒரு பொறுப்பற்ற செயலுக்காகக் குறைகூறித்திட்டிவிடுவான்.
அவள் முகத்தைத்துாக்கிவைத்துக்கொண்டு அழத்தொடங்குவாள். உடனே தன் கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்ட
காதலன் அவளிடம் மெல்ல நெருங்கி, "என்னடா இதுக்குப்போய் அழலாமா…? நீ சில விஷயங்களில்
ரொம்ப கேர்லெஸ்ஸா இருக்கடா" என்று கூறிவிட்டு, "இப்ப என்னைய எடுத்துக்கொள்ளேன் நான்
எதிலுமே கேர்லெஸ்ஸாக இருக்கமாட்டேன். எதிலாவது கேர்லெஸ்ஸாக இருக்கேனா சொல்லு….ம்ம்ம்…சொல்லு"
என்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக் கேட்பான். சட்டென்று அவள் அவன் முகத்தைப்பார்த்து,"நான்
இப்ப கர்ப்பமாக இருக்கிறேன்" என்று சொல்லுவாள் பாருங்கள். விசில் பறக்கிறது தியேட்டரில்.
அங்கிருந்து ஆரம்பமாகும் படத்தினுடைய ஆட்டம் இறுதிவரை ஓயாமல் தொடர்கிறது.
‘பீட்சா’ – படத்தின்
தலைப்புக்கும் கதைக்கும் தொடர்பே இல்லாதது போல் தெரிந்தாலும் மிக முக்கியத்தொடர்புண்டு.
இயக்குநர் என்ற கதைசொல்லி, பீட்சா டெலிவரி செய்யும் ஒரு இளைஞன் மூலமாக நமக்கு ஒரு கதை
சொல்கிறார். அந்தக் கதைசொல்லியின் ரத்தம்உறைய வைக்கும் கதையை இங்கு விளக்கமாகச் சொல்ல
முடியாது. சொல்லவும் கூடாது. ஆகச்சிறந்த புத்திசாலித்தனம் கொண்ட இந்த பீட்சாவின் திரைக்கதையை
எங்கு தொட்டுக்காட்டினாலும் புதிதாகப் படம் பார்ப்பவர்களுக்கு அதன் சுவாரஸ்யம் விடுபட்டுவிடும்.
சினிமாவின் புதியமுயற்சியாளர்களுக்கு ஒரு மாபெரும் ஊக்கியாக இருக்கும் இந்தத் திரைக்கதையின்
நுட்பம் மிக விரிவாகப் பேசப்படவேண்டியது.
திரைப்படம் ஏற்படுத்தும்
அனுபவம் என்பது மிக நுட்பமானது. ஒரு நல்ல சினிமா நம் மனதோடு மிக அந்தரங்கமாக உறவாடக்கூடியது.
பீட்சா அப்படி ஒரு அனுபவத்தை மிகநிச்சயமாக ஏற்படுத்தும். நல்ல சினிமாவுக்கான புதியமுயற்சிக்கு
எப்போதுமே நம் தார்மீக ஆதரவு இருந்தால் மட்டுமே அப்படிப்பட்ட அனுபவங்களைக் கலைஞர்கள்
மேலும் உற்சாகமாக நமக்குச் சாத்தியப்படுத்த முனைவார்கள். இல்லையென்றால் நமக்கு மலினமான
சினிமாக் குப்பைகளே காணக்கிடைக்கும். அதற்காகவேனும் நல்ல சினிமாவின் மேல் விருப்பமுள்ளவர்கள்
ஒருமுறையேனும் பீட்சாவைப்பாருங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். இதை ஒரு நல்ல சினிமா
ரசிகன் என்ற முறையில் என் கடைமையாகவும் கருதுகிறேன்.
-25.10.2012 ன் ஒரு மாலைவேளையில் எழுதியது.
/// இங்கு விளக்கமாகச் சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. ///
ReplyDeleteநன்றி நண்பரே... இன்னொரு நண்பரும் இதையே (சொல்லி) விமர்சித்து இருந்தார்...
நன்றி... (நாளை செல்கிறோம்)
நன்றி நண்பரே....
Deleteவித்தியாசமான படம்... கூடவே விறுவிறுப்பு
ReplyDelete