Sunday, October 7, 2012

தினமும் கசியும் மௌனத்தின் பிறந்தநாள்


எண்ணத்துக்கும் எழுத்துக்குமான இடைவெளியற்ற நிலையே படைப்பின் நேர்மையை உணர்த்தும் தன்மை கொண்டது. கதிரின் எழுத்துகள் அவ்வகைத் தன்மை கொண்டவை. அவர் அகத்தினுள் பொதிந்துள்ள சமூகஅன்பு மேலும்மேலும் நிரம்பிக் கசிந்து உருமாறும் ஓர் உன்னதஅனுபவமே அவரின் எழுத்துக்கள். அதன் சகல முனைகளும் நம் கீழ்மைகளைக் குறிவைக்கும் கூர்மைகொண்டவை. நம் இருண்மைகளின் மீது கருணையே இல்லாமல் வெளிச்சம் பாய்ச்சக்கூடியவை. அந்த வெளிச்சத்தின் துணைகொண்டு நம் மனப்பான்மையின் கோணல்களை நிமிர்த்திக்கொள்ள வாய்ப்பளிப்பவை. நாம் கவனத்தவறிய மனிதர்களை, சூழ்நிலைகளை நம் முன்னிறுத்தி நாம் இயல்பாகவே எப்பொழுதும் முரண் கொண்டிருக்கும் நம் மனசாட்சியுடன் நம்மைச் சமரசநிலைக்கு இட்டுச் செல்லும் நற்பணியாற்றுபவை.

மனிதக்கயமைகளுக்கு எதிரான தன் ரௌத்திரத்தை கேள்விகளாய் முன்வைத்து நம்மையும் பதிலளிக்கும் நிலையில் நிறுத்துவதில் இருக்கிறது அவருடைய எழுத்தின் தனித்துவம். அன்றாட நிகழ்வுகள் அனைத்தின் மீதும் நம் கவனம் கவிழ்ந்திருக்கும் படியான விழிப்புணர்வைச் சாத்தியமாக்கும் அவரின் கேள்விகள் யாருக்கானதோ அல்ல. அவர் வைக்கும் விமர்சனங்கள் எதன் மீதோ அல்ல. அவை நமக்கானது. அதற்கு முன்உதாரணமாக அவா் தன்னையே அந்தக் கேள்விகளுக்கு உட்படுத்திக்கொள்கிறார். தன்னால் வைக்கப்படும் விமர்சனங்களின் முன் தானும் வந்து நின்றுகொள்கிறார்.

படைப்புத்தளத்திலும் அவரின் ஆற்றல் தனித்துவம் கொண்டதே. விமர்சனத்தை படைப்புக்குள் ஒளித்து வைக்கும் வழமைக்குப் பதிலாகத் தன் முழுப்படைப்பையுமே விமர்சனமாய் முன்வைக்கும் பிரத்யேகத்தன்மை கொண்டது அவருடைய படைப்புலகம். சிறுகதைகளிலும், அனுபவப்பகிர்தலிலும் அவர் நமக்குக் காட்டும் சித்திரங்கள் எல்லோருக்குள்ளும் அந்தரங்கமான நினைவுகளைத் துாண்டிவிடக்கூடியவை.

ஒரு தேர்ந்த வாள்வீச்சாளனின் சுழட்டலுக்கு நிகரானது அவர் மொழியைக் கையாளும் லாவகம். அவருடைய படைப்புகளில் மொழி தன் எல்லா சாத்தியங்களையும் நிறைவேற்றிக்கொள்ளக்கூடிய வாய்ப்பைப் பெறுகிறது. படைப்பின் வீரியம் கெடாமல் மொழியின் அழகியலை உணரச்செய்யும் கலைநேர்த்தி யாவருக்கும் வாய்ப்பதில்லை. தமிழ் நவீனத்தின் முன்னோடிகளில் சொர்ப்பமானவர்களுக்கே அந்த வரம் வாய்க்கப்பெற்றது. அந்த வரிசையில் கதிரின் எழுத்தையும் நிறுத்தி நிறுவமுடியும். கதிரின் படைப்புகளில் புலமைத்துருத்தல் இல்லாத அழகியல் வெளிப்பாடாய் மட்டுமே மொழி தன் கடமையைச்செய்கிறது.

அதேபோல் கதிரின் கவிதைகளும் தன்னிச்சையான வெளிப்பாடுகள் கொண்டவை. கவிதையின் உருவாக்கத்தில் தன்னிச்சையான வெளிப்பாட்டுக்கும் கட்டமைக்கப்படும் வார்ப்புகளுக்கும் அனேக வேறுபாடுகள் உண்டு. வெளிப்பாடுகளுக்கு நிகராய் கட்டமைக்கப்படுபவைகள் நேர்த்தியான கலையுருவம் கொள்வதில்லை என்பது கவிதைக்களத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கருதுகோள். உயிருக்குள் நிகழும் ஆன்ம தரிசனத்தின் அனுபவச்செரிவு மேலும் திணிவு பெற்று உள்ளுக்குள் இருந்து பீரிட்டுக் கிளம்பி, மொழியின் வசீகரத்துணையுடன் நிகழ்த்தும் ரூபதரிசனமே கவிதை. அவ்விதம் வெளிப்படும் ரூபம் அதை வாசிப்பவருக்குள் அரூப அனுபவங்களைத் தோற்றுவிக்க வல்லது. அவ்வகை வசீகர வடிவம் கொண்டவையே கதிரின் கவிதைகளும். அவரின் கவிதை முனைப்பிற்குக் காலம் ஒருநாள்  முழுதும்  வசப்படும்.
 
-ஈரோடுகதிரின் பிறந்தநாள் (07.10.2012) அன்று முகநுாலில் எழுதப்பட்டது. 

1 comment:

  1. வித்தியாசமான பகிர்வு... உங்கள் ரசனை ரசிக்க வைத்தது...

    ReplyDelete