Saturday, January 11, 2020

போகன் சங்கருடன் ஒரு சந்திப்பு

இச்சைகளின் தளம்
மறு உலகம்

வரி பிழையாது
தெரியும்
தும்பைத் தூயப்
பளிங்குக் கிண்ணம்
புள்ளிகளின் பின்னால் திரியும் கோடு
பற்றிய
நீண்ட கால
அழுக்கடைந்த புகாரை
அதில் நிரப்ப வேண்டுமா?


இது போகன்சங்கரின் கவிதை. ஆள் கொஞ்சம் சிடுக்காக இருப்பாரோ என்று சந்தேகித்தபடிதான் ஈரோட்டில் அவர் தங்கியிருந்த விடுதியின் அறைக்கதவை நானும் சகலை கார்த்தியும் தட்டினோம். (நன்றி : தாமோதர் சந்துரு அண்ணா)

கதவைத் திறந்தார். சினேகமாகச் சிரித்தார். எங்களை வரவேற்று அமரச் செய்தார். சிறிய பரஸ்பர அறிமுகம். பிறகு உரையாடல் தொடங்கிவிட்டது. பேச்சின் உபதலைப்புகள் - பாபநாசம், எஸ்.ராமகிருஷ்ணன், மதுவிலக்கு, சுஜாதா, பித்தப்பைகல், ஜெயமோகன், டீகடை பெண், கவிதை, பாக்யராஜ், யாகூப் மேனன், சினிமா, சிக்மண்ட் பிராய்ட், பிஜேபி, வைக்கம் முகமது பஷீர் மற்றும் இன்னபிற சில்லரை சமாச்சாரங்கள். தீர்ந்தது சந்தேகம். அவர் சிடுக்கற்ற இலகுவான மனிதர்தான்.


இடையில் ஒரு முறை காபியும் ஒரு முறை தேனீரும் பருகினோம். மாலையில் புத்தகத்திருவிழா விஜயம். புத்தக அரங்கில் கவிஞர் தனசக்தி எங்களோடு சேர்ந்து கொண்டார். அங்கு எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனைச் சந்தித்தோம். சிறிது நேரம் பேசிவிட்டு அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு மூவரும் கொஞ்சம் நடந்தோம். புத்தகங்கள் வாங்கினோம். போட்டோக்கள் எடுத்துக் கொண்டோம். சமோசா சாப்பிட்டோம். மலைத்துாரலில் சிறிது துாரம் மோட்டார் பைக்கில் பயணித்தோம். இனிய ஒரு மாலைநேரத்தையும் அதை ஒட்டிய குளுமையான இரவையும் சந்தோஷமாக்கிக் கொண்டோம். மிக நன்று.







போகனை விடுதி அறையில் விட்டுவிட்டுத் திரும்பும் போது நினைத்தேன். ‘முகநுால் பக்கங்களில் பளபளக்கும் மொழிக்கத்தியைச் சுழற்றியபடி ஒரு சாம்ராயைப் போன்று கருத்தாடும் போகன்சங்கர் நேர்சந்திப்பில் எளியோனுக்கு எளியோனாய் இருக்கிறார்.’


அவரும் அவர் எழுத்தும் வாழ்க.

ப்ரியமுடன்
-வீரா

ஆகஸ்ட் 2, 2015 அன்று முகநுாலில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment