நெருக்கடியின் அவலம்...
நேற்று கோவையில் எழுத்தாளர் சு.வேணுகோபாலுடன் ஒரு இலக்கிய விவாதத்துக்கு நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். பல நண்பர்கள் கலந்து கொண்டோம். சு.வேணுகோபால் தமிழின் முக்கியமான ஒரு படைப்பாளி. அவரின் படைப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அவரின் ஆளுமை குறித்து என் பார்வையில் கொண்டிருந்த பிம்பம் கலைந்து வேறு விதமாக அவர் எனக்குப் பொருளானார். தன் படைப்புகளின் ஊற்றுக்கண் குறித்து அவர் உரையாடியது எனக்குள் பெரும் உத்வேகத்தைத் துாண்டியது.
அவர் சிறுகதையில் மிக முக்கியமானதும் பெரும் விவாதத்தைக் கோருவதுமான ‘உள்ளிருந்து உடற்றும் பசி’ குறித்தும் விவாதம் நடைபெற்றது. தாய் தந்தை அற்ற நிலையில் கூலிவேலைக்குச் சென்று தன் பிழைப்பை நடத்தும் ஒரு முப்பத்தேழு வயது மனிதனின் கதை. நடுவயதைக் கடக்கும் அவனுக்கு தன் திருமணத்தைப் பற்றியோ உடல் சார்ந்த தேவைகள் குறித்தோ சிந்திக்கக் கூட வாய்ப்பில்லாமல் தன் இரண்டு தங்கைகளுக்கும் மிகச் சிரமப்பட்டு திருமணம் செய்து கொடுத்துவிட்டு மூன்றாம் தங்கையுடன் சிமெண்ட் சீட் வேயப்பட்ட ஒரு மிகச்சிறிய அறையில் வசிக்கிறான். தன் தங்கைகளின் நல்வாழ்வு குறித்து மட்டுமே சிந்திக்கும் அவன் மீதும் தங்கைகள் மூவரும் உயிரையே வைத்திருக்கிறார்கள். திருமணம் ஆகாமல் வீட்டிலேயே இருக்கும் மூன்றாம் தங்கையின் பார்வையில் விரிந்து செல்கிறது கதை. புழுக்கமும் இறுக்கமும் கொண்ட அந்த ஒற்றைச் சிறுஅறையில் இரவில் உறங்கும் போது தன் அண்ணனின் பாலியல் தேவையினை திடுக்கிட்டு உணர்கிறாள் தங்கை.
அதிர்ச்சியின் உச்சத்தில் நிறைவுபெறும் இந்தக் கதை நம்முடனே பிழைத்துக்கொண்டிருக்கும் நம் சக மனிதர்களின் வாழ்வு பற்றிய இடுக்கான பகுதிக்குள் நம்மை அழைத்துச் சென்று, பெரும் அனுபவத்தை நமக்குள் துளிர்க்க விடுகிறது. யானையைப் பார்த்த குருடனைப் போல் இந்த மிகப்பெரும் வாழ்வை நம் அனுபவத்தைக் கொண்டுமட்டுமே தொடந்து புரிந்து கொண்டு வருகிறோம். ஆனால் ஒரு படைப்பாளி மட்டுமே தனக்குள் நிகழும் அனுபவங்களை நமக்குள்ளும் கடத்தி நம் பார்வையை விரிக்கிறான். அது ஏற்படுத்தும் மன மேன்மைக்காக நாம் எப்போதும் அவனுக்கு நன்றியுடன் இருக்கக் கடவோம்.
No comments:
Post a Comment