Saturday, January 11, 2020

போகன் சங்கருடன் ஒரு சந்திப்பு

இச்சைகளின் தளம்
மறு உலகம்

வரி பிழையாது
தெரியும்
தும்பைத் தூயப்
பளிங்குக் கிண்ணம்
புள்ளிகளின் பின்னால் திரியும் கோடு
பற்றிய
நீண்ட கால
அழுக்கடைந்த புகாரை
அதில் நிரப்ப வேண்டுமா?


இது போகன்சங்கரின் கவிதை. ஆள் கொஞ்சம் சிடுக்காக இருப்பாரோ என்று சந்தேகித்தபடிதான் ஈரோட்டில் அவர் தங்கியிருந்த விடுதியின் அறைக்கதவை நானும் சகலை கார்த்தியும் தட்டினோம். (நன்றி : தாமோதர் சந்துரு அண்ணா)

கதவைத் திறந்தார். சினேகமாகச் சிரித்தார். எங்களை வரவேற்று அமரச் செய்தார். சிறிய பரஸ்பர அறிமுகம். பிறகு உரையாடல் தொடங்கிவிட்டது. பேச்சின் உபதலைப்புகள் - பாபநாசம், எஸ்.ராமகிருஷ்ணன், மதுவிலக்கு, சுஜாதா, பித்தப்பைகல், ஜெயமோகன், டீகடை பெண், கவிதை, பாக்யராஜ், யாகூப் மேனன், சினிமா, சிக்மண்ட் பிராய்ட், பிஜேபி, வைக்கம் முகமது பஷீர் மற்றும் இன்னபிற சில்லரை சமாச்சாரங்கள். தீர்ந்தது சந்தேகம். அவர் சிடுக்கற்ற இலகுவான மனிதர்தான்.


இடையில் ஒரு முறை காபியும் ஒரு முறை தேனீரும் பருகினோம். மாலையில் புத்தகத்திருவிழா விஜயம். புத்தக அரங்கில் கவிஞர் தனசக்தி எங்களோடு சேர்ந்து கொண்டார். அங்கு எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனைச் சந்தித்தோம். சிறிது நேரம் பேசிவிட்டு அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு மூவரும் கொஞ்சம் நடந்தோம். புத்தகங்கள் வாங்கினோம். போட்டோக்கள் எடுத்துக் கொண்டோம். சமோசா சாப்பிட்டோம். மலைத்துாரலில் சிறிது துாரம் மோட்டார் பைக்கில் பயணித்தோம். இனிய ஒரு மாலைநேரத்தையும் அதை ஒட்டிய குளுமையான இரவையும் சந்தோஷமாக்கிக் கொண்டோம். மிக நன்று.







போகனை விடுதி அறையில் விட்டுவிட்டுத் திரும்பும் போது நினைத்தேன். ‘முகநுால் பக்கங்களில் பளபளக்கும் மொழிக்கத்தியைச் சுழற்றியபடி ஒரு சாம்ராயைப் போன்று கருத்தாடும் போகன்சங்கர் நேர்சந்திப்பில் எளியோனுக்கு எளியோனாய் இருக்கிறார்.’


அவரும் அவர் எழுத்தும் வாழ்க.

ப்ரியமுடன்
-வீரா

ஆகஸ்ட் 2, 2015 அன்று முகநுாலில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

உள்ளிருந்து உடற்றும் பசி

நெருக்கடியின் அவலம்...


நேற்று கோவையில் எழுத்தாளர் சு.வேணுகோபாலுடன் ஒரு இலக்கிய விவாதத்துக்கு நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். பல நண்பர்கள் கலந்து கொண்டோம். சு.வேணுகோபால் தமிழின் முக்கியமான ஒரு படைப்பாளி. அவரின் படைப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அவரின் ஆளுமை குறித்து என் பார்வையில் கொண்டிருந்த பிம்பம் கலைந்து வேறு விதமாக அவர் எனக்குப் பொருளானார். தன் படைப்புகளின் ஊற்றுக்கண் குறித்து அவர் உரையாடியது எனக்குள் பெரும் உத்வேகத்தைத் துாண்டியது.
அவர் சிறுகதையில் மிக முக்கியமானதும் பெரும் விவாதத்தைக் கோருவதுமான ‘உள்ளிருந்து உடற்றும் பசி’ குறித்தும் விவாதம் நடைபெற்றது. தாய் தந்தை அற்ற நிலையில் கூலிவேலைக்குச் சென்று தன் பிழைப்பை நடத்தும் ஒரு முப்பத்தேழு வயது மனிதனின் கதை. நடுவயதைக் கடக்கும் அவனுக்கு தன் திருமணத்தைப் பற்றியோ உடல் சார்ந்த தேவைகள் குறித்தோ சிந்திக்கக் கூட வாய்ப்பில்லாமல் தன் இரண்டு தங்கைகளுக்கும் மிகச் சிரமப்பட்டு திருமணம் செய்து கொடுத்துவிட்டு மூன்றாம் தங்கையுடன் சிமெண்ட் சீட் வேயப்பட்ட ஒரு மிகச்சிறிய அறையில் வசிக்கிறான். தன் தங்கைகளின் நல்வாழ்வு குறித்து மட்டுமே சிந்திக்கும் அவன் மீதும் தங்கைகள் மூவரும் உயிரையே வைத்திருக்கிறார்கள். திருமணம் ஆகாமல் வீட்டிலேயே இருக்கும் மூன்றாம் தங்கையின் பார்வையில் விரிந்து செல்கிறது கதை. புழுக்கமும் இறுக்கமும் கொண்ட அந்த ஒற்றைச் சிறுஅறையில் இரவில் உறங்கும் போது தன் அண்ணனின் பாலியல் தேவையினை திடுக்கிட்டு உணர்கிறாள் தங்கை.
அதிர்ச்சியின் உச்சத்தில் நிறைவுபெறும் இந்தக் கதை நம்முடனே பிழைத்துக்கொண்டிருக்கும் நம் சக மனிதர்களின் வாழ்வு பற்றிய இடுக்கான பகுதிக்குள் நம்மை அழைத்துச் சென்று, பெரும் அனுபவத்தை நமக்குள் துளிர்க்க விடுகிறது. யானையைப் பார்த்த குருடனைப் போல் இந்த மிகப்பெரும் வாழ்வை நம் அனுபவத்தைக் கொண்டுமட்டுமே தொடந்து புரிந்து கொண்டு வருகிறோம். ஆனால் ஒரு படைப்பாளி மட்டுமே தனக்குள் நிகழும் அனுபவங்களை நமக்குள்ளும் கடத்தி நம் பார்வையை விரிக்கிறான். அது ஏற்படுத்தும் மன மேன்மைக்காக நாம் எப்போதும் அவனுக்கு நன்றியுடன் இருக்கக் கடவோம்.




28.12.2014 அன்று முகநுாலில் பதிவேற்றம் செய்யப்பட்டது.