நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலண்டில் ஜிடிபி
4.5% ஆக உள்ளது. இது எதிர்பார்த்த அளவான 5% க்கும் குறைவான அளவேயாகும். நாட்டின் பொருளாதார
வளர்ச்சி மந்தநிலையில் இருப்பதற்குப் பல காரணங்களை முன்வைத்து விவாதங்கள் நடைபெற்று
வரும் நிலையில் நவம்பர் நிலவரப்படி கடந்த ஆண்டு நிதிநிலையறிக்கையில் வளர்ச்சித்திட்டங்களுக்கு
ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த ரூ.27,86,349 கோடியில் இன்னும் 34.7% அதாவது ரூ.9,66,292
கோடிகள் அமைச்சகங்களால் செலவிடப்படாமலேயே இருப்பதாக தலைமை கணக்குத் தணிக்கை அலுவலகப்
புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. கடந்த நிதியாண்டின் நவம்பர் இறுதியிலும் இதேபோல 33.9%
சதவீத ஒதுக்கீடுகள் பயன்படுத்தப்படாத நிலையிலேயே இருந்திருக்கின்றன. ஒதுக்கப்படும்
நிதி, திட்டங்களின் மூலமாக மக்களுக்குச் சென்றடையாமல் இருப்பதன் விளைவு பொருளாதார வளர்ச்சியில்
நிலவும் தேக்கநிலையில் மேலும் பின்னடைவையே உண்டாக்கும்.
மூன்று காலாண்டுகள் முடிந்து நான்கில் ஒரு பங்கு
காலமே இன்னும் மீதமிருக்கும் நிலையில் வளர்ச்சித்திட்டங்களுக்கான நிதியில் மூன்றில்
ஒரு பங்கு இன்னும் மக்களைச் சென்றடையாமல் இருப்பது அமைச்சகங்களின் மெத்தனத்தையே காட்டுகிறது.
இந்தப் புள்ளிவிவரங்கள் அமைச்சகங்களின் ஒட்டுமொத்த
சராசரி அளவுகள் தானே தவிர தனித்தனித் துறையின் புள்ளிவிவரங்களின் படி 50 சதவிகித நிதியைக்கூட
பயன்படுத்தாத துறைகளும் உண்டு. நாட்டின் மிக முக்கியமான வேளாண் அமைச்சகமே ஒதுக்கப்பட்ட
ரூ.1,38,564 கோடி நிதியில் இன்னும் சுமார் 70 ஆயிரம் கோடியளவுக்கு பயன்படுத்தாமல் வைத்திருக்கிறது.
இது இந்தத் துறையின் 51 சதவிகித அளவு நிதி வெளியேற்ற தேக்கமாகும்.
விவசாய உற்பத்திப் பொருட்களை நேரடியாக வியாபாரிகளுக்குக்
கொண்டு சேர்க்கும் விதமாக கடந்த 2018-19 ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நவீனச்சந்தைத் திட்டத்திற்கு
அந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.2000 கோடி.. இந்தியா முழுவதும் 22000 சந்தைகளை இலக்காகக்
கொண்ட இந்தத் திட்டத்தின் படி இரண்டு ஆண்டுகள்
கடந்த நிலையில் 376 சந்தைகளே இதுவரை உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்த அரசு வேளாண்துறையின்
திட்டங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
நாட்டின் பொருளாதாரம் மந்தமாக உள்ள இந்தச் சூழ்நிலையில்
இது போன்று பலதுறை அமைச்சகங்களிலும் நிதி வெளியேற்ற வேகம் குறைவாக இருப்பதும் நிதியாண்டின்
கடைசி மூன்று மாதங்களில் அவசர அவசரமாக நிதியைச் செலவிடும் போக்கும் மிகவும் தவறான விளைவுகளை
ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது. பொருளாதார மந்த நிலைக்கு பணமிதிப்பு நீக்க நடவடிக்கையும்
ஜி.எஸ்.டி உருவாக்கம் மற்றும் அமலாக்கங்களின் குளறுபடிகளும் முக்கியக் காரணங்களாக விவாதிக்கப்பட்டு
வரும் சூழ்நிலையில், ஒதுக்கப்பட்ட நிதியின் வெளியேற்ற வேகம் குறைவது வளர்ச்சியில் மேலும்
தேக்கத்தையே ஏற்படுத்தும்.
கடந்த நிதிநிலை அறிக்கையின் படி ஜிடிபி யில்
3.3% ஆக நிதிப்பற்றாக்குறை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. அதற்கு முந்தைய நிதி ஆண்டுகளில்
(2017-18 மற்றும் 2018-19) இருந்ததை விட கடந்த ஆண்டு பற்றாக்குறை சதவிகிதம் குறைந்திருந்தாலும்
கூட, நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலண்டின் முடிவில் நிதிப்பற்றாக்குறை 3.38% ஆக
அதிகரித்திருப்பதும் பொருளாதாரத்தில் ஒரு கவலைக்குறிய விடயமாகவே பார்க்கப்படுகிறது.
வரிவருவாயும் எதிர்பார்த்த அளவை விட குறைவாக இருப்பதும் கூட நிதிப்பற்றாக்குறையை மேலும்
தீவிரப்படுத்தும் நிலையில் வரும் நிதியாண்டுக்கான இந்த அரசின் நிதிநிலையறிக்கையை யாவரும்
கவனத்துடன் உள்வாங்குவதும் புரிந்து கொள்வதும் அதை விவாதிப்பதும் மிக முக்கியமான செயல்பாடாக
இருக்க வேண்டும்.
சிறப்பான அலசல்
ReplyDeleteவருவாய் பற்றாக்குறையை நீங்க கணக்கில் எடுத்துக்கலை. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்.
ReplyDelete