Tuesday, August 28, 2012

மதுபான கடை- சினிமா பற்றி...





ஒரு மாற்றுசினிமா முயற்சி

‘இந்தப் படத்தில் கதை என எதையாவது நீங்கள் உணர்ந்தால், அது உங்கள் கற்பனையே’ என்று முதலிலேயே ஒப்புக்கொண்டு ஒரு சினிமாவைக் காட்ட ஆரம்பித்த நேர்மைக்காகவும், நாயகப்போற்றுதலும் பிரமாண்டமிரட்டல்களும் ரசிகனின் சொரணையுணர்வை மழுங்கச் செய்யவல்ல கற்பனைகளும் கொண்டு பலகோடிகளை விழுங்கி உருவாக்கப்படும் குப்பைகளுக்கிடையில் சிக்கனமாய்ச் சினிமா எடுக்க முடியும் என்று மீண்டும் ஒரு முறை  நிரூபித்ததற்காகவும், தமிழ் ரசிகர்களில் ஒரு சாரார் நிச்சயம் படம் பார்க்க வரமாட்டார்கள் என்று தெரிந்தும் இந்தக் கருவைப் பதிவு செய்ய வேண்டும் என்று முனைந்த உறுதிக்காகவுமே இந்தப்படத்தைப் பற்றி எழுதவேண்டும் என்று எண்ணினேன்.

சினிமாமொழி,அதன் இலக்கணம் மற்றும் இன்ற பிற இத்தியாதிகளைப் பின்பற்றியெல்லாம் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறதா இல்லையா என்ற கவலைகள் ஏதுமற்று, இதற்கு வெகுஜன ரசிப்புத்தகுதிகள் உள்ளதா அற்றதா என்ற கணிப்புமற்று என் ரசிப்புத்தன்மையின் எல்லை சார்ந்த கண்கொண்டு மட்டுமே இதை எழுதுகிறேன்.

மாற்றுசினிமாவை மக்களுக்குக் கொண்டு சேர்க்க இடையறாது முயன்ற ‘ஜான் அப்ரஹாமுக்கு’ இந்தப் படத்தைச் சமர்ப்பித்திருக்கிறார்கள். பொருத்தமான சமர்ப்பணம். இந்தப் படம் ஒரு கிராமத்து மதுபான கடையின் (டாஸ்மாக் பார்) ஒரு முழு நாளைய நிகழ்வுகளை மிக சுவாரஸ்யமாகப் பதிவு செய்து அதனுடாக நமக்குச் சில அனுபவங்களை அளிக்க முயல்கிறது. மையக்கதையற்ற இதன் போக்கு ஒவ்வோறு பார்வையாளனுக்கும் ஒவ்வொறு விதமான அனுபவ வேறுபாடுகளை அளிக்கவல்லது. அந்த வகையில் இந்தப் படைப்பை ஒரு பின்நவீனத்துவக் கவிதைக்கு நிகராகக் கருத  இடமுண்டு.

நமக்கான அனுபவங்கள் பெரும்பாலும் இதில் பங்களிக்கும் கதாபாத்திரங்களின் வாயிலாகவே குறிப்பாக அவர்களின் வாய்மொழிகளின் வழியாகவே சாத்தியப்படுகின்றன. இந்தப்படத்தின் கதாபாத்திரங்களை ஒரு வசதி கருதி இரண்டாகப் பிரித்துக்கொள்ள முடியும். முதல்வகையினர் நம் கதைக்களமான  பாருடன் நிரந்தரத்தொடர்பில் உள்ளவா்கள். இதில் பாரின் முதலாளி மூா்த்தி, அவருடைய வேலையாட்களான சமையல் மாஸ்டர் வாசு, சப்ளையர்கள் முருகேசன், ரபீக், தண்டபாணி, ஒரு சிறுவன், பாரைச்சுத்தம் செய்யும் ஒரு பெரிசு மற்றும்  பாத்திரங்கள் கழுவிச்சுத்தம் செய்து கூட்டிப் பெருக்கும் ஒரு வயதான பெண். இவர்கள் தவிர அந்த பாருக்கு நிரந்தரமாக வந்து குடித்துக்கொண்டிருக்கும் நடுத்தர வயதுடைய ஆசாமிகளான போலீஸ் ஸ்டேசனில் பெட்டிசன் எழுதும் மணி (இவர் ஈராக்கில் குண்டு போட்டதற்காக ஈரோட்டில் போரட்டம் நடத்திய போராளி), பாடுவதில் திறமை கொண்ட சின்ராசு (ஆனால் பாவம் ஒரு கட்டிங் அடிக்க யாரிடமாவது ஆட்டையைப் போடவேண்டிய நிலையில் இருப்பவர்), எப்போதும் போதைமீறித் தலைகவிழ்ந்து அமர்ந்திருக்கும் வேலைவெட்டிக்குப் போகாத படித்த பட்டதாரித் தோற்றமுடைய இளைஞன், அந்த பார் அமைந்துள்ள இடத்தை விற்றுவிட்டு அந்த விரக்திமிகுதியால் மனநிலை பாதிக்கப்பட்டு அந்த பாரிலேயே தஞ்சம் புகுந்து குடியைத் துணைகொண்ட ஒரு மண்ணின் மைத்தன். பாருக்குள் வராமல் மதுக்டையில் ரெகுலராக சரக்கு மட்டும் வாங்கிக் கொண்டு செல்லும் குடிமகன்களின் பிரதிநிதியாகச் சித்தரிக்கப்படும் பங்ச்சுவாலிட்டி பார்ட்டி. மேற்சொன்னவர்கள் இத்திரைக்கதையில் அடிக்கோடிட்டுக்காட்டப்படுபவர்கள். இரண்டாவது வகையினர் அவ்வப்போது வந்து போகும் பலதரப்பட்ட வாடிக்கையாளக்குடிமகன்கள். இவ்விரண்டு சாராரையும் தொடர்புபடுத்தி அவர்களிடையிலான சம்பவங்களைக்கோர்த்து திரைக்கதையாக்கியிருக்கிறார்கள். நன்று.

இதில் அந்தக் கதாபாத்திரங்கள் வாயிலாக முன்வைக்கப்படும் அரசியலாலேயே இந்தப்படைப்பு முக்கியத்துவம் பெறுகிறது. அரசு, ஆதிக்கசக்திகள், வர்க்கபேதம், சாதியமேலாண்மை இவைகளின் மீதான தீவிர விமர்சனத்தை அழுத்தமாக முன்வைப்பதன் மூலம் இத்திரைக்கதை அதன் நோக்கத்தை நிறைவுசெய்துகொள்கிறது. சீரான காட்சி அடுக்கு, உருத்தாத ஒளிஅமைப்பு, அவசியமான காமிரா நகர்வு, ரசனையான சட்டகங்கள், வேகு இயல்பான நடிப்பு, கவனம் ஈர்க்கும் வசனங்கள், ஆகாவென்றில்லா விட்டாலும் மௌனத்துக்கும் இயற்கைச்சத்தங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துவிட்டு மிகப்பணிவுடன் தேவைக்கேற்ப ஒலிக்கும் பின்னனி இசை, வலிகளையும் வேதனைகளையும் தன் வரிகளில் சொல்ல முயலும் பாடல்கள் போன்றவை மேற்சொன்ன நோக்கத்துக்குத் துணை நிற்கின்றன.

மிகச்சிறப்பாய் அமைந்த விசயங்கள் பல உண்டு இப்படத்தில். பாரில் தண்ணியடித்துக்கொண்டிருக்கும் போது இரண்டு குழுக்களுக்கிடையில் ஒரு சண்டைமூளும், அதைப் பக்கத்து டேபிளில் அமர்ந்திருக்கும் ஒரு இளைஞன் தன் செல்போனில் படமெடுக்க ஆரம்பிப்பார். சட்டென்று அந்தக்காட்சி அந்த செல்போன் காமிரா மூலமாகவே பார்வையாளர்களுக்குக் காட்சிப்படத்துவங்கும். அந்த செல்போன் மேற்சொன்ன ரகளையில் கைதவறி கீழே விழ, அந்தக் காட்சி தொடர்ந்து செல்போனின் கோணத்திலேயே காட்டப்பட்டுக்கொண்டிருக்கும். அற்புதமான அனுபவத்தைத் தரும் அந்தக்காட்சி ஒளிப்பதிவாளரின் திறனுக்கு ஒரு சோற்றுப்பதம்.

அந்த ‘கோடிக்கால் பூதமடா தொழிலாளி’ பாடலின் வரிகளும் அதைப்பாடியவரின் குரலும் அடிவயிற்றிலிருந்து எழும் எளியவர்களின் ஓலமாய்க் கதறவைக்கிறது.

குடிகாரர்களாக நடிக்கிறார்கள் என்பதே மறந்துபோய் குடிகாரர்களாகவே கதாபாத்திரங்களை உணரச்செய்யும் இயல்பான உடல்மொழியுடன் கூடிய நடிப்பு சகலரிடமும் சாத்தியமாகியிருக்கிறது. தெளிந்தவராகவும் போதையில் மிதந்தவராகவும் வலம்வந்து பெருங்குரலெடுத்துப்பாடும் சின்ராசுவும், எப்போதும் நிறைபோதையில் மீசையை முறிக்கி விட்டுக்கொண்டு மேலாதிக்கத்திற்கெதிராகத் தன் அகஉணர்வை போராட்டமுனைப்பிலேயே வைத்திருக்கும் பெட்டிசன் மணியும் அழுந்தப்பதிக்கிறார்கள் தத்தம் தடத்தை. இவர்கள் தவிர அனேகமாக அனைவருமே அவரவர் கதாபாத்திரங்களுக்கு அவரவர் நடிப்பால் மெருகேற்றியுள்ளனர்.

பார் சப்ளையர் ரபீக் தன் காதலியான பார் ஓனரின் பெண்னை ஒரு முட்டுச்சந்துக்குள் இழுத்து வைத்து காதல்பொங்க எச்சில்முத்தமிடும் காட்சியும், அதைப்பார்த்துவிடும் சக தொழிலாளி முருகேசனுக்கும் ரபீக்குக்கும் நடக்கும் மோதல் காட்சியும், முதன்முதலாய் கொஞ்சம் பீர் குடித்து விட்டு,“என் பேரு அப்ப பொன்ராஜ்….இப்ப பிரணவ்” என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட ஒரு இளைஞன் முடிந்துபோன காதலும் மீதமிருக்கும் கவிதையுமாய் நம் பெட்டிசன் மணியையே மிரளவைக்கும் காட்சியும். ‘காட்ட வித்துக் கள்ளக்குடிச்சாலும்’ தன் சாதியே உயர்வெனக்கருதும் ஒரு கெட்டிதட்டிப்போன ஆதிக்கன் மீது சீறிப்பாய்ந்து தன் இனவெழுச்சியைக் கனலாய்க்கக்கும் தலித் துப்புரவுத்தொழிலாளியின் கோபம் கொப்பளிக்கும் காட்சியும் மானசீகமாய் இயக்குனரின் கையைப் பிடித்துக் குலுக்கத் தகுதி படைத்தவை.

டுப்ளிக்கேட் சரக்கு முதல் பலவற்றைக் குறியீடாக்கி, நம்மை ஆளும் அரசும் அதன் நேர்மையற்ற நிர்வாக அமைப்பும் தங்களுக்குள் கொள்ளும் ஊழல் சமரசங்களின் விளைவுகள் எளியவர்களின் வாழ்வின் மீது தன் கோரப்பற்களை எவ்வாறு அழுந்தப்பதிக்கின்றன என்பதை உரத்துச்சொல்லும்  பிரதியாய் நம்முன் வைக்கப்படுகிறது இந்தப்படைப்பு. இதில் விளிம்புநிலை மனிதர்கள் துயரப்படுகிறார்கள், துக்கப்படுகிறார்கள், ஏமாற்றப்படுகிறார்கள், அவமதிக்கப்படுகிறார்கள், ஆண்டாண்டுகாலமாய் அதட்டியே பழக்கப்பட்ட ஆதிக்கசக்திகள் மெல்லத்தன் வலிமையை இழக்கும்படியாக எதிர்வினை புரிகிறார்கள்.

இவ்வளவு எளிய ஒரு படைப்பில் இவற்றைச் சாத்தியமாக்கியமைக்காக மதுபான கடை குழுவினர் நிச்சயம் போற்றத்தக்கவர்களே.

3 comments:

  1. நல்ல விமர்சனம்! நன்றி!

    ReplyDelete
  2. வித்தியாசமான விமர்சனம்... வாழ்த்துக்கள் நண்பா...

    தொடருங்கள்... நன்றி...

    ReplyDelete
  3. எளிய படைப்பு, ஆனால் ரசித்து பார்க்கும் பொழுது புரிகிறது ஒவ்வொருவரின் கதாபாத்திரத்தின் அழுத்தமும் அவர்களின் உணர்வும்...

    ReplyDelete