Tuesday, March 29, 2022

முகநுால் பதிவு 28.03.2022

தமிழ்நாடு அரசின் போற்றத்தக்க ஜனநாயகம்

நுாலக ஆணைக்குழுவின் கீழ் செயல்படும் மாவட்ட மற்றும் கிளை நுாலகங்களுக்கு 2022-2023 ஆம் ஆண்டிற்கான நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்கள் வாங்கும் தொடர்பில் நுாலக செயல்பாட்டை மேம்படுத்துவதன் பொருட்டு ஒரு குழு அமைத்து, அதன் பரிந்துரையின் பேரில் அங்கீகரிக்கப்பட்ட பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளது.

தற்காலத் தமிழ் தேசியப் போக்கில் பல முக்கியச் செயல்பாடுகளை தீவிரமாக முன்னெடுக்கும் இயக்கமான தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் திரு. பெ.மணியரசனும் பொதுச் செயலாளர் திரு. கி.வெங்கட்ராமனும் தொடர்ந்து தங்கள் தமிழ்த் தேசிய அரசியல் செயல்பாட்டில் திராவிட எதிர்ப்பு என்பதை மிகத் தீவிரமாக முன்னெடுத்து வரும் சூழ்நிலையில், அதற்கு எதிர்வினையாக திராவிடக் கருத்தியலை சித்தாந்த அளவிலேயே நிலைநிறுத்தி நிறுவவேண்டிய நிர்பந்தம் தற்போதைய ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு உருவாகியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் மாத இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டத்தை தமிழ்நாடு அரசு மாவட்ட மற்றும் கிளை நுாலகங்களில் இந்த அரசு அனுமதித்துள்ளது.

எதிர்க்கருத்தியலுக்கு இடமளித்து திராவிட சித்தாந்த எதிர்ப்பை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு அரசின் மாண்புமிகு முதல்வருமான திரு. மு..ஸ்டாலின் அவர்களைப் பாராட்ட வேண்டும். நுாலக நாளிதழ் மற்றும் பருவஇதழ்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் இடம் பெற்றிருந்த நண்பர் பத்திரிக்கையாளர் திரு. சமஸ் அவர்களுக்கும் வாழ்த்துகளை உரித்தாக்க வேண்டும்.

 -அதியா வீரக்குமார்

1 comment: