‘ஒரு
மனுஷி’ பிரபஞ்சனின் ஒரு அருமையான சிறுகதைக்கு பாலுமகேந்திராவால் எழுதப்பட்ட திரைக்கதை.
தமிழ்சினிமாவில் துணை நடிகையாக இருந்துகொண்டு தன் அன்றாட வாழ்க்கைக்கே சிரமப்படும்
ஒரு இளம் பெண்ணின் உன்னதமான குணத்தை கவனப்படுத்திய படைப்பு. பிரபஞ்சனின் படைப்புகள்
எப்போதுமே மனித உன்னதங்களை வெளிச்சமிட்டுக் காட்டக் கூடியவைதான். அவ்வகையில் ‘ஒரு மனுஷி’
என்னும் இந்தப் படைப்பின் தலைப்பே அதன் கதையாடலைத் தெளிவுபடுத்திவிடுகிறது.
வறுமையின்
நெருக்கடியில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு துணைநடிகை, தான் ஆரம்பத்தில் சினிமாவுக்குள்
நுழையும் போது தனக்கு உதவியாய் இருந்த ஒரு ஸ்டில் போட்டோகிராபரின் ஒரு நாளைய பணப்பிரச்சனைக்கு
உதவி செய்கிறாள். கேட்பதற்குச் சாதாரணமாக இருக்கும் இந்தச் சம்பவத்துக்குள் ஒரு பெண்ணின்
மனிதத்தன்மை எவ்வாறு மிளிர்கிறது என்பதை மிகவும் இயல்பாக நமக்கு உணர்த்துகிறது இந்தக்
கதை. அவன் இவளிடம் கைமாற்றாகக் கொஞ்சம் பணம் கேட்கிறான். இவளோ சோற்றுக்கே சிரமப்படும்
நிலையில் தன் தினசரி வாழ்வை நடத்திக் கொண்டிருக்கிறாள். ஆனாலும் நண்பன் கேட்டுவிட்டானே
என்று வேறு ஒருவரிடம் பணம் ஏற்பாடு செய்து அவனுக்குக் கொடுத்து உதவுகிறாள். இதுதான்
கதை. ‘நாமாக இருந்தாலும் இதைத்தானே செய்திருப்போம். நம்முடைய கஷ்டகாலத்தில் உதவி செய்தவருக்கு
நாம் நம்மால் முடிந்த சிறு உதவியொன்றைச் செய்கிறோம். இது என்ன பெரிய விஷயம்’ என்றுதானே
நமக்குத் தோன்றும்?. ஆனால் விஷயம் என்னவென்றால்,
அவன் அவளிடம் பணம் கேட்கும் முன்பாக அவளுடைய மனநிலையில் ஒரு சிறு மகிழ்ச்சியை ஏற்படுத்தி
விடவேண்டும் என்று நேர்மைக்குப் புறம்பான ஒரு காரியத்தைச் செய்கிறான். அதை உடனே கண்டுகொள்ளும்
அவள் அந்தச் செயலை எப்படி எடுத்துக் கொள்கிறாள் என்பதில் தான் இந்தக் கதை மனிதனின்
உன்னத்தை உணர்த்துகிறது.
பொதுவாகவே
சிறுகதைகளைத் திரைக்கதையாக்கும் போது அதன் அடிநாதம் தன் ஜீவனை இழந்துவிடும் அபாயம்
இருக்கிறது. ஆனால் இந்தக் கதையில் பிரபஞ்சன் தான் குறிப்பிட்டு உணர்த்த விரும்பிய மேலே
சொன்ன விஷயத்தை பாலுமகேந்திரா தன் தேர்ந்த திரைக்கதை அறிவால் காட்சிகளின் வழியாகவே
சிறுகதையின் மூலஅனுபவத்துக்கு இணையாக நம் மனதுக்கு நுட்பமாகக் கடத்திக்கொண்டு வருகிறார்.
திரைக்கதையின் தேவைக்கேற்ப மூலக்கதையிலுள்ள கூறுகளை அவர் விரித்தும் சுருக்கியும் மாற்றியமைத்து
தன் கதையாடலை நிகழ்த்துகிறார்.
இந்தச்
சிறுகதையைத் திரைக்கதையாக்குவதில் பாலுமகேந்திரா ஒரு பெரிய சவாலை எதிர்கொண்டிருந்திருக்கிறார்.
பிரபஞ்சனின் ‘ஒரு மனுஷி’ சிறுகதையில் அந்தத் துணைநடிகை தன் அன்றாடப் பணத்தேவைக்கு பாலியல்
தொழிலில் ஈடுபடுவது போன்று வெளிப்படையாகவே கதையின் போக்கு இருக்கும். ஆனால் பாலுமகேந்திராவுக்கோ
அதை அப்படியே அப்பட்டமாகக் காட்டுவதற்கு ஏனோ ஒரு தயக்கம் இருந்திருக்கின்றது. அது ஒரு
பிரபல வெகுஜனத் தொலைக்காட்சியில் வேறு ஒளிபரப்பப்படும் என்பதால் அதன் நிர்பந்த அழுத்தமாகக்
கூட இருந்திருக்கலாம். ஆனால் அவள் பாலியல் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை மூலக்கதையின்படி
காட்டியும் ஆகவேண்டும். அதே நேரம் சில வெளியீட்டு நிர்பந்தங்களையும் எதிர்கொள்ள வேண்டும்
என்ற நிலையில் சில காட்சிகளின் வழியே அவள் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறாள் என்பதை மிக
நாசூக்காகக் காட்டியிருப்பார். ஆனாலும்கூட இங்கு ஒரு படைப்பாளியின் சமரசம் குறித்தான
கேள்விகள் நெளிவதைத் தவிர்க்க முடியவில்லை.
அதே
நேரம் மூலக்கதையில் இல்லாத ஒரு விஷயத்தை பாலுமகேந்தரா இந்தத் திரைக்கதைக்குள் சொல்லியிருப்பார்.
இந்தக் கதை நிகழும் நேரம் தமிழ் சினிமாவில் ஸ்ரைக் நடந்து கொண்டிருந்தது. அதன் காரணமாக
சினிமாவின் எல்லா துறைசார்ந்த பல்லாயிரம் தொழிலாளிகளின் வாழ்வு நசிந்து கொண்டிருந்தது.
அவர்களின் வலியை துயரத்தைப் பதிவு செய்ய இந்தக் கதையைப் பயன்படுத்தினார் பாலுமகேந்திரா.
சினிமக்கார்கள் பற்றி சினிமாவுக்கு வெளியில் இருப்பவர்கள் உருவாக்கி வைத்திருக்கும்
மாயவடிவத்தை இதில் கேள்விக்குட்படுத்தியிருப்பார். சினிமாவில் நடிகையாக வேண்டும் என்ற
ஆர்வமுள்ள ஒரு இளம் பெண்ணின் பாத்திரத்தை உருவாக்கி அவள் ஆசைகளின் வழியாகவும் ஆச்சர்யங்களின்
வழியாகவும் பொதுசமூகம் உருவாக்கிவைத்திருக்கும் சினிமா பற்றிய மாயையையும் அதன் அபத்தங்களையும்
மிக அழகாகப் பதிவுசெய்திருக்கிறார்.
இதில்
துணைநடிகை பாத்திரமேற்று நடிக்கும் மோனிஷாவின் திறன் இந்தத் திரைக்கதையின் மற்றுமொரு
பலம். அவர் அறிமுகம் ஆகும் காட்சியில், உடல் நலம் இல்லாமல் இருந்துவிட்டு, கொஞ்சம்
தேறிய நிலையில் ஒரு வெட்டேத்தியான காலைப்பொழுதில் கண்விழிக்கிறார். அப்போது அவர் காட்டும்
அயர்ச்சியும் சலிப்பும் அந்தப் பாத்திரத்தின் தன்மையை பார்வையாளர்களின் அனுபவத்துக்குள்
சட்டென்று கொண்டுவந்து நிலைநிறுத்திவிடுகிறது.
சினிமா
ஸ்டில் போட்டோகிராபராக வரும் சஷிகுமார் பாத்திரத்தின் இயல்புத் தன்மையைக் கொண்டுவருவதில்
முழுமையான வெற்றி பெற்றதாக எடுத்துக் கொள்ளமுடியவில்லை. அவர் பிற கதாபாத்திரங்களோடு
உரையாடும் போது அவர் காட்டும் எதிர்வினைகளில் ஒரு மந்தத்தனமும் தேவைக்கு அதிகமான நிதானமும்
கொஞ்சமாக செயற்கைத்தனமும் இருப்பதாகவே படுகிறது. அதனாலேயே அவர் ஏற்றுள்ள பாத்திரம்
நம் மனதுக்குள் வர மறுக்கிறது. ஆனாலும் அவரை ஏன் பாலுமகேந்திரா தொடர்ந்து தன் படங்களில்
பயன்படுத்திக் கொண்டே வந்தார் என்பதையும் நாம் கணக்கில் எடுத்துக் கொண்டு பரிசீலிக்க
வேண்டும்.
மற்றபடி
ஒரு சிறந்த சிறுகதையைக் குறும்படமாக எடுக்க முனையும் எல்லா இயக்குநர்களுக்கும் மிகச்சிறந்த
எடுத்துக்காட்டு இந்தப் படம். மூலக்கதையின் மையம் சிதைபடாமல் திரைக்கதையில் புதிய சாத்தியங்களை
உருவாக்கிச் செல்வதற்கு அவர்களுக்கிருக்கும் அனேக உதாரணங்களில் ‘ஒரு மனுஷி’ யும் நிச்சயமாகச்
சேரவேண்டியதே.
***
No comments:
Post a Comment