பிப்ரவரி 22, 2014 அன்று ஈரோடு வாசிப்பு இயக்கம் நடத்திய 'பனுவல் போற்றுதும்' நிகழ்ச்சியில் கவிஞர் மகுடேஸ்வரன் எழுதிய ‘தன்வெறியாடல்’ நுால் பற்றிய என் உரை...
கவிஞர் மகுடேஸ்வரனை அவரின் கவிதைகள் மூலமாக நம்மில் பலர் அறிந்திருப்போம். ‘தன்வெறியாடல்’ புத்தகத்தை படிப்பதற்காக என்னிடம் கொண்டு சேர்த்தபோது முதலில் இதுகூட ஒரு ‘கவிதைத் தொகுப்பு’ என்றுதான் நினைத்தேன். ஒரு நாள் இரவு புத்தகத்தைப் புரட்ட ஆரம்பித்தேன். முதல் அத்தயாயத்திலேயே தான் ஒரு பிசாசை நேரில் சந்தித்ததாகச் சொல்லி ஒரு சம்பவத்தை விவரித்திருந்தார். அதைப் படித்தவுடன் எனக்கு ஒருவித ஒவ்வாமை ஏற்பட்டது. காரணம் உடல்விட்ட உயிர்களின் பிரசன்னங்களில் எனக்கு வேறு விதமான நம்பிக்கைகள் இருக்கின்றன. அதனால் புத்தகத்தைச் சட்டென்று மூடிவைத்து விட்டேன்.
படுக்கையில் என் அருகிலேயே புத்தகம் கிடந்தது. சற்று நேரம் கழித்து எதேச்சையாகப் புத்தகத்தின் பின் அட்டை மீது என் கவனம் குவிய அதில் எழுதப்பட்டிருந்த வாசகம் என்னைத் துணுக்குறச் செய்தது.
’மழை பொழிந்து ஓய்ந்தபின்,
இலைநுனியில் உதிரத் துடிக்கும்
ஒரு நீர்த்துளி போல்,
சொல்வதற்கும் ஏதோவொன்று
எஞ்சுகிறது.’
- என்ற அற்புதமான அந்த வரிகள் என்னைப் புத்தகத்துக்குள் மீண்டும் இழுத்துச் சென்றன. ஒரு பாறைக்கல் மண்டபம், அதைச் சுற்றிய பச்சைப் புல்வெளி, அருகே ஒரு பசுமையான மரம் கொண்ட ஓர் இடத்தை அட்டைப்படமாக்கி, அதனுள் நுாற்று இருபத்தெட்டு பக்கங்களில் நம்மிடம் தன் அனுபவங்கைளைப் பகிர்ந்து கொள்ள முன் அட்டையின் ஓரத்தில் முகம் மலர்ந்து சிரித்துக் கொண்டிருந்தார் கவிஞர் மகுடேஸ்வரன்.
நாள் ஒன்றுக்கு முப்பது அத்தியாயங்கள் வீதம் நான்கு நாட்களில் படித்துவிட வேண்டும் என்ற முன்தீர்மானத்துடன் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் புத்தகத்தின் விஷய சாமர்த்தியம் என்னை ஒரே மூச்சில் வாசிக்கக் கோரியது. நுாற்றாறு அத்தியாயங்களையும் படிக்க படிக்கத் தெரிந்து போயிற்று ‘இந்தப் புத்தகம் பற்றிய அறிமுக உரை என் தலையில் ஏற்றப்பட்ட பனங்காய்’ என்று.
ஒரு புத்தகத்தை அறிமுகம் செய்யும் நோக்கம், அதை எல்லோரையும் படிக்கத் துாண்டுவதே. இன்றைக்கு இணையம் நமக்குக் கொடுத்திருக்கக்கூடிய வாசிப்பு சாத்தியங்களாலும், நெருக்கடி மிகுந்த வாழ்க்கையின் நேரப் பற்றாக்குறையாலும், ஒரு புத்தகத்தைப் படித்துத்தான் ஆக வேண்டுமா ? என்ற கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது. அதன் அடிப்படையில் இந்தப் புத்தகத்தின் அவசியம் பற்றி நான் உணர்ந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தவுடன் அவர் எழுத்தில் மெலிதான தற்புகழ்ச்சி வாசம் அடிக்கத் தொடங்கியது. தான், தனது என்ற சுயபதங்கள் கொண்ட அவருடைய நடை அவரைப்பற்றிய ஒரு எதிர்மறை எண்ணத்தையே முதலில் எனக்குத் தோற்றுவித்தது. பக்கங்கள் புரளப்புரள அது வெறும் தற்புகழ்ச்சியல்ல,
மன்னுடை மன்றத்து ஓலை தூக்கினும்,
தன்னை மருதலை பழித்தகாலையும்,
மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதிலும்,
தம்மைத்தாம் புகழ்தலும் தகும் புலவோர்க்கே
- என்னும் நன்னூல் நெறியின்படி ஒரு கவிஞன் தன் இருப்பை உறுதிசெய்யும் கட்டாயத்தின் வெளிப்பாடு என்பது மெல்லப் புரிந்ததெனக்கு.
இந்தப் புத்தகம் கட்டுரைகள் மற்றும் குறும்பத்திகள் கொண்ட தொகுப்பு. பத்தி எழுத்துகள் பொதுவாகவே மையநோக்கு அற்றவை. வரையறுக்கப்பட்ட அனுபவங்களை வழங்குவதற்குப் பதிலாக குறுக்கும் நெடுக்குமான இயக்கத்தில் நம் வாசிப்பு அனுபத்தைப் பரவலாக்க வல்லவை. அந்த வகையில் இந்தப் புத்தகம் மிக சுவாரஸ்யமான விஷயங்களை அலசுகிறது. வாணவேடிக்கையின் பட்டாசுச் சிதறலைப் போல் திசைகள் அற்றுத் தெறித்து நம் சித்தனைத்தளத்தில் ஒரு பரவசத்தை நிகழ்த்துகிறது.
இதில் அலசப்படும் விஷயங்களை முக்கியத்துவத்தின் அடிப்படையில் தொகுதி பிரித்தால் முதலில் வருவது தமிழ் மொழியும் தமிழ் சமூகம் சார்ந்த அவருடைய கூற்றுகளும்தாம். சொல்அறிமுகம், சொல் உருவாக்கம், வட்டார வழக்குகள், இலக்கணக் குறிப்புகள் மற்றும் மொழியின் சிறப்புகள் பற்றி ஒரு நண்பனுக்கே உரித்தான மனநெருக்கத்துடன் வாசகனிடம் உரையாடுகிறார்.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு தமிழ்ச் சொற்களுக்கான பொருள் மாறுபாடுகளை அதன் இடப்பயன்பாட்டு அடிப்படையிலும் வார்த்தைகளுக்குள் இருக்கும் நுட்பமான வேறுபாடுகளின் அடிப்படையிலும் எளிமையாக விளக்குகிறார்.
'மொழியறிவு சமான்ய மக்களுக்கு எட்டாக்கனியாக இருக்க வேண்டியதில்லை' என்று கூறும் இவர் அதற்கான சில செயல்திட்டங்களையும் முன்வைக்கிறார். புதிய சொற்களை உருவாக்குதல், மறைந்திருப்பதைக் கண்டடைதல், தொடர்ந்து உபயோகிப்பதன் மூலம், அவற்றைப் பேணிப்பாதுகாத்தல் போன்றவற்றை மொழிச் செயல்பாட்டில் மிக முக்கியமான ஒன்றெனக் கருதுகிறார். மொழியின் வளமையில் வட்டார வழக்குகளின் பங்களிப்பை உறுதிசெய்வதன் மூலம் நம் பகுதியில் உபயோகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் வார்த்தைகளின் வேர்களைத் தேடிச் செல்லுமாறு நம்மைத் துாண்டுகிறார்.
அதே நேரம் இலக்கண அறிவில் நமக்கிருக்கும் போதாமையையும் நாசூக்காக உணர்த்துகிறார். தாய்மொழியின் இலக்கணம்கூட அறியாமல் இருக்கிறோமே என்ற குற்ற உணர்வு சிறிதும் அற்ற நமக்கு, மிக இலகுவான இலக்கணக் குறிப்புகள் மூலம் கொஞ்சம் சொரணையேற்ற முற்படுகிறார். இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகும் நமக்குத் தமிழ் இலக்கணத்தின் மீது நாட்டம் ஏற்படாமல் இருக்குமேயானால் தமிழைக் கொல்லச் சதிசெய்தவர்களின் வரிசையில் காலம் நம்மைக் கட்டாயம் நிறுத்தும்.
அதே போல் வார்த்தைகளின் பயன்பாட்டை மிக விரிவான அறிதல் முறைக்கு உட்படுத்துகிறார். ஒரு உதாரணம் பாருங்கள். ‘விடுதலை’ என்ற சொல் பற்றிய அவரின் விவாதத்தில், விடு + தலை என்பதில், ‘விடு’ என்பது - நீங்குதல், நீக்குதல், ஒழித்தல் என்று பொருள்படக்கூடிய ஒரு வினைச் சொல். இதில் ஒற்றல் ‘ல’கரம் கொண்ட ‘தலை’ என்னும் வார்த்தைக்கு - சிரம், முதல், சிறந்தது, வானம், உயர்ந்தோன், தலைவன், உச்சி, நுனி, முடிவு, எனப் பொருள்கள் உள்ளன. இந்தத் ‘தலை’க்கு முன் ‘விடு’ என்னும் வினையைச் சேர்த்து விடுதலை என்றால் வினைத்தொகையாகி, ‘தலைவனை நீக்கு’ என்ற பொருள்தானே சற்று அருகண்மையில் வரும் என்கிறார். உண்மையில் இந்தச் சொல் உரிய அழகோடு துல்லியமான பொருள்கூட வேண்டுமானால் வருடல் ‘ள’கரம் சேர்க்கப்பட்டு ‘விடுதளை’ என்றே பயன்படுத்தப்பட வேண்டும் என்று நிறுவுகிறார். வருடல் ‘ள’கரம் சேர்க்கப்பட்ட ‘தளை’ என்பதற்கு மட்டுமே, விலங்கு, கட்டு, பிணைப்பு என்ற பொருள்கள் உண்டு என்று கூறுவதன் மூலமாக ஒரு விவாதத்தைத் துாண்டுகிறார்.
சமீபத்தில் எழுத்தாளர் பெருமாள்முருகனிடம் பேசிக்கொண்டிருந்த போது இதுபற்றிக் கேட்டேன். அவர் சொன்னார், ”வேண்டுதல்“ என்பதுடன் ‘ஐ’ விகுதி கூடி எப்படி வழக்குச் சொல்லில் “வேண்டுதலை” ஆனதோ அதே போன்று “விடுதல்” என்பதுடன் ‘ஐ’ விகுதி கூடி “விடுதலை“ ஆகியிருக்கக் கூடும், என்ற தனது கருத்தை வெளிப்படுத்தினார்.
எப்படியிருந்தாலும் ‘விடுதலை’ என்பது நம் மகாகவியே பயன்படுத்திய ஒரு வார்த்தை. அதை விவாதப் பொருளாக்கி பொதுவெளியில் பதிவு செய்ய எவ்வளவு தெளிவு வேண்டும் என்று நினைத்துப் பாருங்கள். மொழி பற்றிய முழு பிரக்ஞை உள்ளோர்க்கே அந்தத் தெளிவு வரும் அப்படிப்பட்ட தெளிவுக்குச் சொந்தக்காரர் நம் மகுடேஸ்வரன்.
நான் மேற்குறிப்பிட்ட விஷயங்களின் அடிப்படையில் ‘தன்வெறியாடல்’ என்ற இந்த நுால் தமிழ் மொழி மற்றும் அதன் இலக்கணங்கள் பற்றியது மட்டுமே என்ற முடிவுக்கு நீங்கள் வந்தால் ஏமாந்து போவீர்கள்.
மொழியின் நுட்பத்தை எந்த அளவுக்கு உள்வாங்குகிறாரோ அதே அளவு தன்னைச் சுற்றிலும் இயங்கும் உலகத்தையும் உள்வாங்குகிறார். இந்த நுாலில் நமக்குச் சில மனிர்களைப் பற்றிய சித்திரத்தைக் காட்டுகிறார். நாம் அன்றாடம் சந்திக்கும் எளிய மனிதர்கள்தாம் அவர்கள். நாம் பார்த்துவிட்டுப் பரிதாபப்பட்டோ அல்லது எள்ளி நகையாடிவிட்டோ நகர்ந்து சென்றுவிடும் அவர்கள்மீது மகுடேஸ்வரனின் கவனிப்பு வேறுவிதமாக விழுகிறது. மனிதர்களை அவர்களுடைய சிந்தனையின் அடிப்படையில் பகுத்துப்பார்த்து துயரங்களுக்குள் உழன்று கொண்டிருக்கும் அவர்களின் மனநிலையில் நிகழும் அபூர்வமான ஆன்ம உற்சாகத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறார்.
அதே போல், சமூகத்தைப் பற்றிய மகுடேஸ்வரனின் பார்வையும் மிக மதிக்கத் தக்கது. வெற்றியாளர்களைவிட அவர் கரிசனம் வெற்றியைத் தவற விட்டவர்களின் மீதே அதிகம் விழுகிறது. தேர்வுகளில் முதல் மதிப்பெண் எடுக்கும் முன்மாதிரிகளை விட, தோற்றுப் போகிறவர்களே இந்த உலகை ஆக்குவதிலும் அழிப்பதிலும் பாரிய பங்குகொள்கிறார்கள் என்று நம்புகிறார். அவ்வாறே நம்மையும் நம்பச் செய்கிறார்.
பிழைப்பின் பொருட்டும் வாழ்க்கை அமைப்பின் பொருட்டும் தன் படைப்புணர்வை ஆழப்புதைத்தவர்கள் நம்மில் எத்தனையோ பேர். கவிஞனாக எழுத்தாளனாக பேச்சாளனாக ஓவியனாக இசைக்கலைஞனாக பாடகனாக இன்னும் எத்தனையோ நுண்கலைகளைச் சாத்தியப் படுத்திவிடும் வெறியோடு நாம் நம் இளமையில் முனைந்திருப்போம். ஆனால் கருணையே இல்லாமல் நம் ஆசைகளைக் கசக்கிப் போட்ட காலம், நிர்பந்திக்கப்பட்ட வாழ்க்கையை நம்மீது தினித்த போது ஏற்பட்ட அந்த ரணத்தின் வடுக்கள்மீது மகுடேஸ்வரனின் விரல்கள் மெல்ல வருடுகின்றன.
இந்த நுாலின் வாசிப்பை சுவாரஸ்யப்படுத்தும் வகையில் சில அபூர்வமான உணர்வுத் தருணங்களை நம்முன் விரியவிடுகிறார். அதில் ஒன்று ‘பௌலோ கொய்லோ’வுடைய இரசவாதி நுாலில் இடம் பெற்ற ஒரு கூற்று.
அந்த வாசகத்தைப் படித்துப் பார்த்த கணத்திலேயே நான் பிரமிப்பில் ஆழ்ந்து போனேன். காரணம், அதனூடாகப் பல்வேறு வாழ்வியல் விஷயங்கள் வந்து, தானாகப் பொருந்திக் கொள்வதை உணரமுடிந்தது. இன்னும் சொல்லப் போனால், வாழ்வின் சகல விஷயங்களையும் அந்தக் கூற்றுடன் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம் போல் தோற்றியது. அந்த வாசகம் இதுதான் :
வாழ்வில் ஒரே ஒருமுறை மட்டுமே வந்தது, இனி எப்போதும் வராமலே போகலாம். ஆனால், வாழ்வில் இரண்டு முறை வந்துவிட்டது என்றால், அது இனி அடிக்கடி வரும் !
இன்னும் இந்தப் புத்தகத்தில் மகுடேஸ்வரன் ஏராளமான செய்திகளைத் தொட்டுச் செல்கிறார். பயணஅனுபவங்கள், மதிப்புரைகள், கவிதை மொழிபெயர்ப்பு, காதல் திருமணம், தந்தைக்கும் மகளுக்குமான உறவு, இணையத்தின் இலக்கியப் பயன்பாடு, சமூகவலைத்தளம் பற்றிய மதிப்பீடு என்று நீண்டு கொண்டே செல்லும் இவருடைய உரையாடலின் மிக முக்கியமான உள்நாதம் இவருடைய பகடி.
உடல்மொழியாலும் வாய்வார்த்கைகளாலும் பிறரைச் சிரிக்க வைக்க முடிவது ஒருவகைத் திறமைதான். ஆனால் எழுத்தின் மூலமாக வாசகரை வாய்விட்டுச் சிரிக்க வைக்க எவ்வகைத் திறமை வேண்டும் என்று எழுதி முயன்றவர்களுக்கே தெரியும். பகடி கைகூடப்பட்ட எழுத்துக்குச் சொந்தக்காரர்கள் பாக்யவான்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் வாய்விட்டுச் சிரித்துப் படித்த புத்தகம் இது. நம் கவிஞரின் அப்பாவுக்குக் கோபம் வந்தால் அவர் எப்படித் தன் மனைவியை அதாவது நம் கவிஞரின் அம்மாவைத் திட்டுவார் என்று ஒரு இடத்தில் எழுதுகிறார். வெடித்துச் சிரித்துவிட்டேன் அதைப் படித்தவுடன்.
விஷயங்களின் தன்மைக்கு ஏற்ப மொழியை அடர்த்தியாக்கியும் நெகிழ்த்தியும் அவர் எழுதிச் செல்லும் சிலாக்கியமான நடை இந்தப் புத்தகத்தின் மிகப் பெரிய பலம். எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் தத்துவத் தேடல்களோ நிறுவல் முறைகளோ இல்லாமல் ஒரு கருத்தை வெறுமனே முன் வைத்து அதன் இறுதியில் ஒரு கேள்வியைப் பொருத்தி அதன் மூலம் வாசகனை பதில்களைத் தேடி அலையும் விதமாகச் செய்யும் ஒரு எழுத்துமுறை இவருடையது. அந்த அலைதலில் நம் மனம் பல்வேறு விஷயங்களை சுவீகரித்துக் கொள்கிறது.
எழுதுபவர்கள் பொதுவாக இரண்டு வகை.
ஒன்று, தங்களை முன்னிறுத்தி எழுதுபவர்கள். அவர்களின் எழுத்தில் கலைத்தன்மையும் பொது நன்மைகளும் பொதிந்திருப்பினும் அவற்றில் தங்கள் புலமைத் துருத்தல்களையே முன்னிறுத்தியிருப்பார்கள். வரிக்கு வரி தங்களைப் பற்றிய வியப்புகளை வாசகன் கண்டடையும் விதமாகத் தங்கள் எழுத்துகளை மிக நுட்பமாக வடிவமைப்பார்கள்.
இரண்டாவது வகை, தங்கள் திறனை உணர்ந்து அதை இந்தச் சமூகம் சார்ந்த பயன்பாட்டுக்குக் கொண்டுவருபவர்கள். போலியான பாவனைகளும் அனாவசியமான அடக்கங்களுமற்றுத் தான் வாழும் இந்த சமூகத்தின் எல்லா அலகுகளிலும் தனக்கும் பங்குள்ளது என்னும் கடமையுணர்வுடன் நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் உடைய சமரசமற்ற தன் எழுத்துத் திறத்தால் அச்சமற்றுத் தம் கருத்தை உரக்கச் சொல்பவர்கள்.
நம் மகாகவி பாரதி இதில் இரண்டாவது வகை.
நம்புங்கள்,
கவிஞர் மகுடேஸ்வரனும் அதே வகை.
ப்ரியமுடன்
-வீரா
மிகவும் ரசனையான தெளிவான நூலின் விமர்சனம்...
ReplyDeleteகவிஞர் திரு. மகுடேஸ்வரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
நன்றி நண்பரே...
விமர்சனம், ஒரு தேர்ந்த கட்டிட கலைஞனின் படைப்பு போன்று நேர்த்தியான சொல்லடைவுடன், ரசிக்க தூண்டுகிறது. உங்கள் எழுத்து வன்மையை தனிப்பட்ட படைப்புகளின் மூலம் வெளிப்படுத்துங்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteதெளிவான கண்ணோட்டம்
ReplyDeleteவிரிவான அலசல்
அற்புதம்
விரிவான விமர்சனம்.நிறைய வார்த்தைகள் எனக்குப் புதிது என்றாலும் வாசிக்கும் ஆர்வத்தைக் கொடுத்தது.புத்தகத்தை படித்து முடித்து அனைத்தையும் ஞாபகம் வைத்து குறிப்பிடுவது சிறப்பு.கற்றலின் மற்றுமொரு பகுதி இது எனக்கு.
ReplyDeleteவீராஜி.. ஒரு விமர்சனம் எவ்வாறெலாம் உருப்பெறலாம் என்ற அளவீடுகள் பற்றியே ஒரு விமர்சனம் செய்யுமளவு ஆழமான விமர்சனம் இது. சக ஊர்க்காரனாக மகிழ்கிறேன். அன்புடன்... SreeJanakiram
ReplyDelete