Tuesday, May 1, 2012

செவ்வந்தி - (சிறுகதை)


                          ருள் நீங்கிக் கொண்டிருந்ததுஇன்னும் கொஞ்ச நேரத்தில் பளிச்சென்று விடிந்துவிடும்சன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்த செவ்வந்தி மெல்லச் சரிந்து தரையில் அமர்ந்தாள்சுவரில் தன் உடலைச்சாய்த்துக் கொண்டாள்பக்கத்தில் சிமினி விளக்கு எரிந்துகொண்டிருந்ததுவலது காலின் கட்டுக்கள் தளர்வுற்று அவிழ்ந்து கிடந்தனகுனிந்து வலதுகாலைக் கைகளால் பிடித்துத் தூக்கி மடிமீது வைத்துப் பாதத்தில் சுற்றியிருந்த துணியை முழுவதுமாகப்  பிரித்தாள்புண்ணிலிருந்து வந்த கெட்ட வாடை மூக்கை குப்பென்று தாக்கியது. ‘ஐயோ மறுபடியும் சீ புடிச்சுக்கிட்டுதாட்ட இருக்குதே என்று நினைத்துக் கொண்டே அதே துணியில் மீண்டும் பாதத்தைச் சுற்றி இறுக்கிக் கட்டினாள்இப்போது காலில் வலி  கடுகடுப்பதை உணர்ந்தாள்.

சற்றுத் தள்ளிப் படுத்திருந்த சண்முகம் தொண்டையைச் செருமிக் கொண்டே திரும்பிப் படுத்தான்வேட்டி இடுப்பில் இருந்து விலகிக் கிடந்ததுசெவ்வந்தி சிமினி விளக்கின் திருகாணியைத் திருகிக் குறைத்து விளக்கை அணைத்துவிட்டு “அப்பா .......அப்பா......“ என்று கூப்பிட்டுப் பார்த்தாள்அவன் ஏதோ முனகியபடி பரக் பரக்கென்று குண்டியைச் சொரிந்து கொண்டே புரண்டு படுத்துக் கொண்டான்.

                தூரத்தில் சேவலின் கூவலொன்று சன்னமாய்க் கேட்டதுஅருகில் கிணற்றுமேட்டடியில் தூக்கணாங்குருவிகள் கிரீச்சிட்டுக் கொண்டிருந்தனசுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த தடியை கையில் எடுத்துக் கொண்டாள்.  சுவரைப் பிடித்துக் கொண்டு தடியை ஊன்றி மெல்ல எழுந்தாள்நகர்ந்து வந்து நடைதிறந்து வீட்டுக்கு வெளியே வந்தாள்பொடக்காலிக்குள் நுழைந்து ஒன்னுக்கிருந்துவிட்டு மூஞ்சியைக் கழுவிக் கொண்டு வெளியே வந்து படலைப் பிடித்து நின்றபோது கணக்காக பழனிச்சாமிக் கவுண்டரும் அவர் பொண்டாட்டியும் பால்போசியைத் தூக்கிக் கொண்டு அவளைக் கடந்து சென்றார்கள். “த்தூ....கருமண்டி தெனமுங் காத்தால இந்த மொண்டி நாயி மூஞ்சீல முலிக்கோணுமுனு நம்ம தலையெலுத்து.....“ என்று எச்சிலைத் துப்பிக் கொண்டே கவுண்டரு அவர் பொண்டாட்டியிடம் சொல்லிக் கொண்டு போனது இவள்  காதிலும் விழுந்தது.

                கிணற்றுமேட்டில் மோட்டர்ரூமுக்குப் பக்கத்தில் அவர்கள் திரும்பி மறையும் வரை அங்கேயே பார்த்துக் கொண்டிருந்தாள்அப்போது பக்கத்து வீட்டிலிருந்து எச்சில் தட்டு குண்டா தேக்சாவையெல்லாம் தூக்கிக் கொண்டு வெளியே வந்த பெரியம்மா அவற்றையெல்லாம் சலதாரையில் வைத்துவிட்டு நிமிர்ந்து தலைமயிரை உதறிச் சுருட்டிக் கொண்டையிட்டுக் கொண்டிருந்ததுஅருகில் அதன் வீட்டுப் பூனை நின்று கொண்டு முதுகை மேல் நோக்கி வளைத்துக் கால்களை நீட்டி சோம்பல் முறித்துக் கொண்டிருந்தது.

                செவ்வந்தி குனிந்து படலில் மாட்டியிருந்த வார்ச்செருப்பை எடுத்தாள்எந்தச் செருப்பும் இவளுடைய கோணல்கால்களுக்கு ஒத்துவருவதில்லைஏதோ இந்தச் செருப்புக் கொஞ்சம் சுமாராக வாய்த்ததுஅதுவும் கூட இவள் காலிழுப்புக்குத் தாங்க முடியாமல் ஒரு பக்கமாகத் தேய்ந்து பல்லிளித்துக் கொண்டுதானிருக்கிறதுஅதை இரண்டு தட்டுத்தட்டி குனிந்து காலில் சிக்கவைத்து வாரை மாட்டிக் கொண்டு தடியை ஊன்றிக் கால்களை அடியெடுத்து வைத்தாள்.

படலைத் தாண்டி வீட்டின் பக்கவாட்டிலிருந்த கிணற்றை ஒட்டிய பாதை வழியாகத் தப்படிகள் போட்டாள்சரசரவென்று நான்கைந்து தப்படிகள்சிறிது இளைப்பாறல்மீண்டும் தப்படிகள்கிணற்றுப் பாதை தாண்டி இட்டேரிக்கு வந்து கிழக்குப் பக்கம் திரும்பி நகர்ந்தாள்இட்டேரியை ஒட்டி வலப்பக்கம் பழனிச்சாமிக் கவுண்டரின் தொண்டுப்பட்டி இருந்ததுஅதைத் தாண்டி வேகமாக முன்னேறினாள்இட்டேரித்தடம் முடிந்து வாய்க்கால் மேட்டில் நின்று பார்த்தபோதுதான் செவ்வந்திக்குத் திக்கென்றதுநொச்சிச் செடிகளை ஆட்கள் வெட்டிக் கொண்டிருந்தார்கள்.

                வெளிக்குப் போவதற்கு அதைவிட்டால் செவ்வந்திக்குத் தோதான வேறு இடம் கிடையாது.  நடக்க முடிபவர்கள் கிணற்றுமேடு தாண்டி மேற்குப் பக்கம் சென்று நேராகத் துண்டுக்காட்டுத் தென்னந் தோப்புக்குப் போய்விடுவார்கள்அது தூரம் அதிகம்.  இந்த நொச்சிச் செடி மறைவுதான் வீட்டிலிருந்து எட்டிக் கொடுத்தது போல் இருக்கும் ஒரே இடம்சின்னப்புள்ளயா இருக்கும் போது வீட்டுக்குப் பக்கத்திலேயே போய் விடுவாள்இப்போது செவ்வந்திக்குப் பதிமூன்று வயதாகிறதுகடந்த பத்து வருடமாய் அங்குதான் கழிக்கிறாள்அந்த இடத்தில் அவளுக்குச் சில வசதிகள் இருந்தனமற்றவர்களைப் போல் உட்கார்ந்து கொண்டெல்லாம் அவளால் போக முடியாதுநொச்சிச் செடிகள் விளாறு விளாறாக ஓங்கி அடர்ந்து வளர்ந்து தடிமனாக மரம் மாதிரி கெட்டிப்பட்டிருக்கும்அதை ஒரு கையில் ஆதரவாகப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையில் தடியை ஊன்றி ஒரு மாதிரி கால்களைக் கோணித்துக் கொண்டு இடுப்பை வளைத்து பாதி நின்ற நிலையில் பாதி உட்கார்ந்த நிலையிலேயே போக வேண்டும்சில நேரங்களில் வயிறு சரியில்லாமல் தண்ணி தண்ணியாகப் பீய்ச்சியடிக்கும் சமயங்களில் காலெல்லாம் அடித்துக் கொள்வாள்அப்படிப்பட்ட நாட்களில் செவந்திக்கு தன்மேலேயே கோபம் கோபமாய் வரும்.

                அங்கேயும் கூட வெடிகாலமே போய்விட்டு வந்துவிட வேண்டும்பொழுதுவிடிந்து சூரியன் மெலெழும்பி விட்டால் நொச்சி மரங்களுக்குப் பக்கத்தில் மலம் கழிக்க முடியாதுநொச்சி மரங்கள் இருக்கும் பங்கு பழனிச்சாமிக் கவுண்டரின் தம்பியுடையதுஅதை ஒட்டியே பழனிச்சாமிக் கவுண்டர் தோட்டம்அவர் தன் பங்கில் எப்போதுமே வெள்ளாமை வைப்பவர்பால் கறந்து சென்று சொசைட்டியில் ஊற்றிவிட்டு சாப்பிட்டு வந்தாரென்றால் பொழுதுசாயும் வரை தோட்டத்துக் குள்ளேயே இருப்பவர்அவர் இல்லாத சமயங்களில் அவர் பொண்டாட்டியோ ஆட்களோ வேலை செய்து கொண்டிருப்பார்கள்.

                பழனிச்சாமிக்கவுண்டருக்கும் அவர் தம்பிக்கும் பங்கு பிரிப்பதில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டு அதனால் அவர் தம்பி அந்த நொச்சிக் காட்டில் எந்த வெள்ளாமையும் வைக்காமல் சும்மா போட்டுவிட்டு ஈரோட்டிற்குப் போய்விட்டார்மஞ்சள்மண்டி வைத்திருக்கிறார்அங்கேயே வீடு கட்டிக் குடும்பத்துடன் குடியேறிவிட்டார். “நொச்சிக் காட்டயும் பழனிச்சாமிக் கவுண்டரே வாங்கிட்டாராமாஅவரு தம்பி எல்லாக் காட்டையும் அண்ணனுக்குக்கே வித்துப் போட்டாராமா.“ என்று  பெரியம்மா ஒரு வாரத்துக்கு முன்னாடி சொன்னப்பக்கூட செவ்வந்திக்கு அது பெரிதாக உறைக்கவில்லைநொச்சிமரச் செடிகளை வெட்டிவிடுவார்கள் என்று அவள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லைஇப்போது அவள் கண்முன்னாலேயே வெட்டிக் கொண்டிருந்தார்கள்.

                அதற்கு மேல் அவளால் அங்கு நிற்க முடியவில்லைவந்த வழியே திரும்பினாள்வழியில் பழனிச்சாமிக்கவுண்டர் எதிர்பட்டார்இவள் அருகில் வந்து “ஏய், இனிமே நொச்சிக்காட்ட நாத்தம் பண்ணமுடியாதுண்ணு தொண்டுப்பட்டிக்குப் பக்கத்துல எங்காவது பேண்டு வச்சேன்னு வெய்யி கால வெட்டிருவேன் ஜாக்கிரதை“ என்று நரநரத்துவிட்டு வெட்டப்பட்டுக் கொண்டிருக்கும் நொச்சிமரச் செடிகளை நோக்கி நடந்தார்செவ்வந்திக்கு ஆத்திரம் பீறிட்டதுமமட்டைக் கடித்துக் கொண்டு வேகமாகக் காலை இழுத்து இழுத்து நடந்தாள்காலில் மீண்டும் கட்டுக்கள் தளர்வுற்றன.

                தட்டுத் தடுமாறி வீட்டுக்குள் நுழைந்து அவளோட இடத்துக்கு வந்து பாயில் அப்படியே மடிந்து உட்கார்ந்தாள்கண்களில் நீர் கோர்த்துத் தேங்கியதுஅடி வயிற்றில் மலத்தின் உந்துதல் அதிகரித்துக் கொண்டு வந்தது.

                சண்முகம் இன்னும் படுத்துக் கிடந்தான்பொழுது விடிந்து சன்னல் வழியாக வெய்யில் நுழைந்து அவன் மேல் விழுந்து கொண்டிருந்ததுநேரம் ஆக ஆக வெய்யிலின் சூடு உறைத்திருக்க வேண்டும் திடீரென்று சொரனை வந்தவன் போல் எழுந்து உட்கார்ந்தான். “.....ய்..... “ என்று ஒரு கொட்டாவி போட்டுவிட்டு தலையைச் சொரிந்து கொண்டே படுத்திருந்த இடத்தைச் சுற்றி ஒரு நோட்டம் விட்டான்தலையணைக்குப் பக்கத்தில் கிடந்த பீடிக்கட்டை எடுத்து ஒரு பீடியை உருவி வாயில் வைத்து அதன் நுணியைக் கடித்துக் கொண்டே திரும்பி  செவ்வந்தியைப் பார்த்தான்.

                ஏண்டி இஞ்சி தின்ன கொரங்காட்டமா உக்காந்திருக்கறே ?“ என்று கேட்டுக் கொண்டே பீடியைப் பற்றவைத்தான்செவ்வந்தி எதுவும் பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்பீடியை இரண்டு இழுப்பு இழுத்துவிட்டுக் கையை ஊன்றி எழுந்திருக்க முயல்கையில் வேட்டி இடுப்பில் இருந்து நழுவியதுசட்டென்று அதைப் பிடித்துத் தூக்கிக் கட்டிக் கொண்டே செவ்வந்தியின் அருகே வந்து குனிந்து அவள் பாதத்தைப் பார்த்தான்.

என்னடி இன்னிக்கு மறுவடியு வீங்கி இருக்குதுசீப்புடுச்சுக்கிச்சாட்ட தெரியுது ? “
ஆமா “
உன்னோட பெரிய ரொதனையா போச்சுடிபோன வாரந்தேன போயி கட்டுக்கட்டி கூட்டியாந்தேன்அதுக்குள்ள கசாமுசான்னு நடந்து புண்ணப் பெருசாக்கிட்டியாநாலுநாளைக்கொருக்கா உனக்கு இதே பொளப்பாப்போச்சுடிபேசாம நீயுங்கொம்மா கோடவே போயித் தொலஞ்சிருந்தீனா நிம்மதியா இருந்திருக்கு “ என்று எரிந்து விழுந்து விட்டு கதவைத் திறந்து படாரென்று சாத்திவிட்டு வெளியேறினான்.  

                அம்மா…….‘  மங்கலாக மட்டுமே செவ்வந்திக்குத் தெரிந்த உருவம்செவ்வந்தி மூன்று வயதாக இருக்கும் போதே சீக்கு வந்து அம்மா செத்துப்போய் விட்டதாக பாட்டி மூலம் அறிந்திருந்தாள்வளர்த்ததெல்லாம் பாட்டிதான்சின்னக் குழந்தையிலேயே இளம்பிள்ளைவாதத்தில் கால்கள் இரண்டும் சூப்பிக் கொண்டு விட்டனகாலை இழுத்து இழுத்து நடக்க வேண்டியிருந்ததால் பாதங்களில் அடிக்கடி புண்கள் ஏற்பட்டு ஆறாத ரணமாகிக் கொண்டிருந்ததுபடிப்பும் சரியாக வரவில்லைபாட்டி இருந்தவரை பள்ளிக்கூடத்துக்குத் தூக்கிக் கொண்டு சென்று அவளே திரும்பக் கூட்டி வருவாள்அவளும் போய்ச் சேர்ந்த பிறகு மூன்றாம் வகுப்புடன் நின்று போனது படிப்புஇருக்கும் ஒரே துணை அப்பா தான்துணை என்ன துணைசாப்பாடு மட்டும் செய்து வைப்பான்எப்பவாவது ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போவான்பெருங்குடியன்இருந்த ஒரு ஏக்கரா நிலத்தையும் குடித்தே அழித்துவிட்டு இப்போது கூலி வேலைக்குப் போய்க் கொண்டிருக்கிறான்சொந்த பந்தங்களுக்குள் எந்த மதிப்பும் மரியாதையும் கிடையாதுவேலைக்குப் போனால் கூலி தருவார்கள் அவ்வளவுதான்நல்லது கெட்டதுக்குக் கூட சொல்லி அனுப்ப மாட்டார்கள். ‘காசு இல்லைங்கறதுனால ஒரு நாயும் மதிக்க மாட்டேங்கறானுங்க‘ என்று கூறித் திரிந்தாலும்  உண்மை அதுவல்லபொம்பளை விசயத்தில் அவன் குணம் சரியில்லை என்று ஊருக்குள் பேச்சுதண்ணீயைப் போட்டு விட்டு எந்த வீட்டுக்குள்ளும் எந்த நேரமும் நுழைவான்யார் மீது வேண்டுமானாலும் கை வைப்பான்அதனால் அவன் மீதும் எல்லோரும் கை வைத்தார்கள்.

முன்பெல்லாம் பெரியம்மா அடிக்கடி வீட்டுக்கு வந்து  சில உதவிகள் செய்து கொண்டிருக்கும்சண்முகம் அதனிடமும் ஏதோ தப்பாக நடந்துகொண்டதால் பெரிய தகராறு ஏற்பட்டு இப்போது அதுவும் வீட்டுக்குள் வருவதில்லைஎப்போதாவது வாசலில் நின்று இரண்டொரு  வார்த்தை இவளிடம் பேசிச் செல்வதோடு சரி.

                செவ்வந்திக்கு சந்தோசமான உலகம் ஒன்று உண்டென்றால் அது சன்னல் வழியாக வெளியே தெரியும் கிணறு தான்பெஞ்சியை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து மணிக்கணக்காகக் கிணற்றையே பார்த்துக் கொண்டிருப்பாள்நீளமான பெரிய கிணறுகடும் வேடையைத் தவிர வேறெப்போதும் வற்றாத கிணறுஇவள் சோட்டுப் பிள்ளைகள் சுற்று வட்டாரங்களில் இருந்து வந்து இந்தக் கிணற்றில்தான் நீச்சல் பழுகுவார்கள்பெரியவர்கள் சிறியவர்கள் என்று வருடத்தில் வெயில் காலங்களில் கிணற்றில் ஒரே களோபரமாகத்தான் இருக்கும்சில நேரங்களில் இவளுக்கே கூடப்  போய் நீச்சல் அடிக்கலாம் என்று தோன்றும்அப்படிக் கொண்டாட்டமாக இருக்கும் கிணறு யாருமில்லாத சமயங்களில் நிசப்தமாக இருக்கும்கிணற் றின் நிசப்தத்தையே செவ்வந்தி அதிகமாக நேசித்தாள்வீட்டுக்குள் அவளும் வெளியே கிணறும் தனிமையாக இருக்கும் தருணங்களில் தண்ணீரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் போது  அந்த  அடர் பச்சை வண்ணம் அவளுக்குள் ஒரு மோன நிலையை உண்டாக்கும்தன்னை மறந்த நிலையில் தானும் அந்தத் தண்ணீராகவே மாறிவிட்டதைப் போல் உணர்வாள்மனம் முழுவதும் பச்சை வண்ணமே வியாபித்து நிரம்பும்அவ்வப்போது அவள் நினைவைக் கலைப்பது  தூக்கணாங்குருவிக் கூட்டங்களேகிணற்றின் பக்க வாட்டு மதில் சுவரின் சாய்வில் உள்ள கோணப்புளியங்காய் மரத்தில் தூக்கணாங்குருவிகள் கூடு கட்டியிருக்கும்.

குருவிகள் வருவதையும் போவதையும் வந்த குருவிகள் அந்தக் கூட்டின் மீது அமர்ந்து பின் மெல்லத் தலையை நுழைத்து கூடுகளுக்குள் செல்வதையும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டேயிருப்பாள்மீண்டும் குருவி எப்போது வெளியே வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பாள்சட்டென்று குருவி தலையை நீட்டி வெளியே வந்து மீண்டும் உள்ளே போய்விடும்அந்தக் கணம் செவ்வந்திக்குச் சந்தோஷம் கொள்ளாதுவிழிவிரித்து முகம் மலர்வாள்செவ்வந்திக்கு அது ஒரு பெரிய வேடிக்கை.

                வெளியே போன சண்முகம் சற்று நேரம் கழித்து உள்ளே வந்தான்அடுப்பங்கரைக்குப் போய் குண்டாக்களை உருட்டினான்ஒவ்வொன்றாக திறந்து பார்த்தான்.

ராத்திரி சோத்துல தண்ணியூத்தி வெச்சிருக்கறேன்இப்ப அதப்போட்டு தின்னுக்கமத்தியானத்துக்கு சோறாக்கிக்கலா“ என்று இவளைப் பார்க்காமலேயே சொல்லிவிட்டு மீண்டும் விரிந்து கிடந்த பாயில் படுத்துக் கொண்டான்.

திடீரென்று அடிவயிற்றில் கனம் அதிகமானதுவயிற்றுக்குக் கீழ் வலி எடுத்ததுஆசன வாயில் அழுத்தம் கூடியதுகன்னத்து ரோமங்கள் சில்லிட்டனஉடல் முழுவதும் ஒரு ரோமாஞ்சனம் பரவியதுசெவ்வந்தி கைகளால் பாயை இறுகப் பற்றினாள்உதட்டைக் கடித்துக் கொண்டு மூச்சை உள்ளிழுத்துப் பிடித்தாள்மலவாயை இறுக்கிக் கொண்டாள்மலம் உள்ளுக்குள் புரண்டு மடங்கி மேலெழுந்ததுஉந்துதல் சற்றுக் குறைந்ததுவேறு எங்காவது போக முடியுமா என்று மனம் எல்லா இடங்களுக்கும் ஓடியுதுஇந்த நேரத்தில் எங்கும் போக முடியாதே என்று தெரிந்ததும் பதைபதைப்புக் கூடியதுமீண்டும் ஆசன வாயில் மலம் உந்த ஆரம்பித்ததுஅதுவரை புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்த சண்முகம் என்ன நினைத்தானோ தெரியவில்லை சட்டென்று எழுந்து சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டே வெளியே போனான்.

அவன் வெளியே போனவுடன் செவ்வந்தி தடாலென்று பக்கத்தில் சாய்ந்து அங்கு பொரிகடலை கட்டி வைத்திருந்த சவ்வுக்காகிதத்தை எடுத்துப் பிரித்து பொரியை கீழே கொட்டினாள்காகிதத்தை உதறிக் கொண்டே கையை நீட்டி ஒரு குண்டாவை எடுத்தாள்சவ்வுக் காகிதத்தை அதன் மேலாகப் போட்டு சற்று குழியாய்ச் செய்து கொண்டு தன் பாவாடையைத் தூக்கி குண்டாவை தன் இடுப்புக்கு அடியில் நகர்த்தி ஆசன வாய்க்குக் கொண்டு சென்றாள்சமுக்காளத்தை எடுத்துத் தன்னை முழுவதுமாகப் போர்த்திக் கொண்டாள்மலம் சவ்வுக்காகிதம் மூடிய குண்டாவுக்குள் வெளியேறியது.

செவ்வந்தி சன்னல் வழியாகக் கிணற்றையே பார்த்துக் கொண்டிருந்தாள்அவள் முகம் இருண்டிருந்ததுதிடீரென்று ஆவேசம் வந்தவள்போல் சவ்வுக்காகிதத்தை சுருட்டி வைத்திருந்த துணி மூட்டையை சன்னல் வழியாகத் தூக்கி எறிந்தாள்துணிமூட்டை கிணற்றுப் பாதையில் விழுந்து உருண்டதுதுணி வேறு காகிதம் வேறாகப் பிரிந்ததுபிரிந்த சவ்வுக்காகிதம் மண்மேட்டில் சரிந்து கிணற்றுக்குள் விழுந்ததுசவ்வுக்காகிதத்தில் இருந்த மலம் தண்ணீருக்குள் மிதந்து கரைந்தது செவ்வந்தி அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

தானும் அவ்வாறே கரைந்து விடவேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது  

                                                                                --------
                                                                                                       --------
                                                     

16 comments:

 1. மனதை பிசைகிறது கதை. மிகவும் அருமை.

  (Comment க்கு Word Verification எடுத்து விடவும் )

  ReplyDelete
 2. கிணற்று நீரில் மலம் கரைவதை காட்சி படுத்தும் போதே படிப்பவர் மனமும் கரைகிறது.

  நல்லெழுத்து வீரா.

  ReplyDelete
 3. உண்மை கதைப் போல் இருக்கிறது.கதை மிகவும் நன்று.

  அடுத்த கதைக்காக காதிருக்கும்
  சங்கீதா.

  ReplyDelete
 4. saravanakumar7/5/12 5:53 PM

  செவ்வந்தியின் வாழ்க்கையும்,அவமானங்களும்,அவஸ்த்தையும் மனதைக் கலங்க வைக்கிறது.இது கற்பனைக் கதையாகவே இருக்கவேண்டுவதாக.செவ்வந்தியின் ஒரே சந்தோசமான அந்தக் கிணறும் களங்கமாகிவிட்டது.இனி..?

  well done தம்பி...

  ReplyDelete
 5. செவ்வந்தி கலங்க வைத்து விட்டாள்..நிறைய எழுதுங்கள்..வாழ்த்துகள்.

  Comment க்கு Word Verification எடுத்து விடவும்

  ReplyDelete
 6. கதை நன்றாக இருந்தது....வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. தொடர்ந்து யதார்த்தமும் நுண்மையும் உடைய காட்சித் துளிகளால் மனதை கொத்திச்செல்லும் இக்கதை அதன் உச்சட்சதில் மனதை அந்தரத்தில் விட்டு நிறைவடைகிறது .

  செவ்வந்தி என்றால் அழகான பெண் எனும் பிம்பம் , "செவ்வந்தி மெல்லச் சரிந்து தரையில் அமர்ந்தாள்" என்பதிலிருந்து இடர்பட ஆரம்பிக்கிறது,
  "வீட்டு பூனை நின்றுகொண்டு முதுகை மேல்நோக்கி வளைத்துக் கால்களை நீட்டி சோம்பல் முறித்துக் கொண்டிருந்தது" என்பதில் உள்ள காட்சிதுல்லியம், கால் சூம்பிய கதை நாயகி, கழிவறை வசதி இல்லா நிலையில் காலைக் கடன்களை எப்படி கழிக்கிறாள் என்பதில் , நாம் தினமும் கடந்து செல்லும் சிறப்பு திறனுல்லோரின் வாழ்வுக் காட்சிகள் வலியுடன் மனதில் வந்து செல்கிறது.
  கிணற்று நீரின் அடர் பச்சையில் நாயகியின் லயிப்பு கவிதையாக வெளிபடுகிறது.
  ஒரு வாசகனாக, அரிதாக கிடைக்கும் கொங்கு கவுண்டர்களின் மொழி மற்றும் அவர்களின் நிலம் இக்கதை வழியாக என்னை கவர்ந்தாலும், நில எல்லைகளில்
  அவர்தம் அதிகாரமும் அதன் வழியே நிலமற்றோர் மீது செலுத்தப்படும் சுரண்டலும் முகத்தில் அறைகிறது.

  கண்ணப்பன்

  ReplyDelete
 8. என்னத்த சொல்ல :-((

  ReplyDelete
 9. அழுத்தமான எழுத்துக்கள்!

  ReplyDelete
 10. அருமையான பதிவு.
  நன்றி.

  ReplyDelete
 11. Bhuvana Vignesh.21/10/12 10:49 AM

  Good story.Introduced heroine with her pains and through out the story vividly elicited her troubles and taken reader along with the story.If writer makes the reader to get along with the story that implies obviously to be good narration.

  ReplyDelete
 12. பதைபதைக்க வைச்சுருச்சு அட்ரா க்ளாப்ஸ் வீராவுக்கு

  ReplyDelete