பழனி பேருந்து நிலையத்தில் வழக்கம் போல நசநசப்புக்குக் குறைவில்லை. காவிகளும் காவடிகளுமாக எங்கு பார்த்தாலும் கூட்டம். ஊருக்குத் திரும்பும் அவசரம். எல்லாப் பேருந்துகளும் பக்தர்களை அள்ளி அடைத்தபடி மெதுவாக நகர்ந்து வெளியேறிக்கொண்டிருந்தன. இன்று காலையில் என் கல்லூரித் தோழனின் திருமணம் திருஆவினன்குடி கோவிலில் நடந்தது. முந்தைய நாள் இரவே வந்துவிட்டேன். தீபம் லாட்ஜில் ரூம் போட்டாயிற்று. என்னைத் தவிர இன்னும் மூன்று நண்பர்கள். ஒருவரை ஒருவர் பார்த்து ஐந்து வருடங்களாகி விட்டபடியால் இரவு வெகுநேரம் வரை அரட்டையடித்துக் கொண்டிருந்தோம். காலையில் திருமணம் முடிந்தவுடன் நண்பர்கள் கிளம்பி விடவே நான் மட்டும் களைப்புத் தீர சிறிது நேரம் தூங்கிவிட்டுச் செல்லலாம் என்று படுத்தேன். விழித்துப் பார்த்த போது மணி சாயங்காலம் நாலு ஆகியிருந்தது. அவசர அவசரமாக விடுதி அறையைக் காலி செய்து விட்டுப் பேருந்து நிலையம் வந்து நின்றுகொண்டிருந்தேன்.
சிறிது நேரத்தில் ஈரோடு வண்டி வந்து நின்றது. அதுவரை அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறியிருந்த மக்கள் பேருந்தைச் சுற்றி மொய்க்க ஆரம்பித்து விட்டார்கள். படிக்கட்டில் முட்டிமோதி நுழைந்தேறிய கூட்டத்துடன் சோ்ந்து நானும் ஒருவனாக ஏறிக்கொண்டேன். அதற்கு முன்பாகவே பல புத்திசாலிப் பயணிகள் ஜன்னல் வழியாக கைக்குட்டைகளாலும் வாட்டர் பாட்டில்களாலும் ஒயர் கூடைகளாலும் இருக்கைகளை முன்பதிவு செய்துவிட்டார்கள். ஆனாலும் கூட எனக்கு ஒரு இடம் கிடைத்தது அதிர்ஷ்டமே! ஜன்னல் ஓரத்தில் ஒரு நடுத்தர வயதுப் பெண் அமர்ந்திருந்தாள். அவளுக்குப் பக்கத்தில் அவள் கணவன். கடைசியாக நான். பின்னால் ஏறியவர்கள் நசுங்கிக் கொண்டு மூச்சுத் திணறி நின்றார்கள். அதைப் பார்த்த எனக்கு சற்று நிம்மதியாக இருந்தது.
சிறிது நேரத்தில் வண்டி கிளம்பியது. நகர எல்லையை விட்டு ரயில்வே லைன் தாண்டியது. செவண்த் பட்டேலியன் கடந்து தாராபுரம் சாலையில் மெல்ல வேகமெடுத்தது. நடத்துனர் முண்டியடித்துக் கொண்டு டிக்கெட் கொடுக்க ஆரம்பித்தார். வண்டிக்குள் எங்கு திரும்பினாலும் சந்தனம் அப்பிய மொட்டைத் தலைகள். குழந்தை குட்டிகளோடு நீக்கமற நிறைந்திருந்தன. பெரிய மொட்டைகள் கொய்யாப்பழம் கடித்துக் கொண்டும் வெள்ளரிப் பிஞ்சுகள் மென்று கொண்டும், சிறிய மொட்டைகள் பலூன், ரப்பர் பந்து, மயிலிறகு போன்றவற்றை வைத்து விளையாடிக் கொண்டும், சிலர் களைத்துப் போய் அரைத்தூக்கித்திலும் சிலர் வாயில் எச்சில் வழிந்தபடி முழுத் தூக்கத்திலும், மொத்தத்தில் பேருந்து முழுவதும் மொட்டைகள் ராஜ்யம். ஆனால் எனக்கு அருகில் வாய்த்தவன் மொட்டையல்ல. முடியுடை மன்னன்.
உண்மையிலேயே மன்னன் ஓய்வெடுப்பது போன்ற பாவனையிலேயே அமர்ந்திருந்தான். நெஞ்சை நிமிர்த்தி தலையை மேல் நோக்கி வைத்து வாயைப்பிளந்து கொண்டு கண்களை மூடி ஏகாந்தமாய்ச் சாய்ந்திருந்தான். ஆனால் அவனிடமிருந்து ஒரு கெட்ட வாடை வீசியது. கண்டுபிடித்துவிட்டேன். குடிகாரன் பாம்பின் கால் பாம்பறியுமே. நானும் குடித்துக் கொண்டிருந்தவன்தான். சமீபகாலமாகத்தான் குடியை விட்டேன்.
எட்டாம் வகுப்பு முழுப் பரிட்சை லீவுக்கு அப்பிச்சியின் ஊருக்குப் போனபோது ஆரம்பித்த பழக்கம்.
“பய எலச்சி எலும்பா திரியறானே, ஒரு மரத்துக் கள்ளுக் குடிச்சா ஒடம்பு கிண்ணுன்னு ஏறும்ல” என்று கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு துண்டுக்காட்டுத் தென்னந்தோப்புக்குக் அப்பிச்சி கூட்டிச் செல்வார். ‘கள் என்பது உடல் நலத்துக்கு உகந்தது’ என்ற கருத்தாக்கம் கொண்டவர். சின்ன வயதில் தோள் மேல் தூக்கிப் போட்டுக் கொண்டு நடந்த, கிணற்றில் இறக்கி நீச்சல் கற்றுக் கொடுத்த, நுங்கு சீவிக் கொடுத்த, இளநீர் பொத்துக் கொடுத்த அப்பிச்சியை மிகவும் பிடித்துப் போனதால் அவர் சொல்வது எல்லாம் எனக்கு வேதவாக்கு.
சுரக்குடுவையில் வெள்ளை வெளேரென நுரைத்துக் கொண்டிருக்கும் கள்ளை முதன்முறையாக முகர்ந்த அந்த நிமிடமே அதன் மணம் என் மூளையில் சென்று பதிய வேண்டிய இடத்தில் பதிந்து கொண்டது. ஒரு மரத்துக் கள்ளும், அதற்கு நக்கிக்கொள்ள நாரத்தங்காய் ஊறுகாயுமாக அந்த முழுப் பரிட்சை லீவில் என் குடியைத் தொடங்கினேன்.
கள்ளில் ஆரம்பித்த குடி கல்லூரிக்குள் நுழைந்ததும் பீருக்கு மாறியது. பிறகு வேலைக்குச் சென்ற பின் பீரின் இடத்தை விஸ்கி பிடித்துக் கொண்டது. மிகவும் சந்தோஷமாய் இருந்தாலும் குடிப்பேன். தாங்க முடியாத மனச்சோர்வில் இருந்தாலும் குடிப்பேன்.
என்னுடைய குடியுரிமைக்கு கல்யாணம் ஆகும்வரை எந்த பங்கமும் ஏற்படவில்லை. ஆனால் வந்து வாய்த்தவளுக்கோ குடியென்றாலே வெறுப்பு. அதற்குக் காரணம், குடித்துக் குடித்தே குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்திய அவளுடைய அப்பா. குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து சர்வகாலமும் அவள் அம்மாவை அடித்துத் துன்பப்படுத்திக் கொண்டிருந்திருக்கிறார். பிறகு ஒருநாள் குண்டாமணி வெடித்துச் செத்துப் போய்விட்டார். அம்மாவின் அரவணைப்பில் கஷ்டப்பட்டு படித்து வங்கியில் வேலை பெற்று தெரிந்த குடும்ப நண்பர் மூலமாக எங்கள் குடும்பத்துக்கு அறிமுகமாகி பிறகு ஒரு சுபயோக சுபதினத்தில் சுற்றமும் நட்பும் சூழ என் கையால் தழையத் தழையத் தாலி கட்டிக் கொண்டு முதலிரவன்று அவள் கேட்ட முதல் கேள்வியே “நீங்க குடிப்பீங்களா?” என்று தான். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சற்றுக் குழம்பிய பின், “இல்லை” என்று சொல்லிவிட்டு அப்போதைக்கு ஆகவேண்டிய காரியத்தில் கண்ணாய் இருந்து விட்டேன். அன்று ஆரம்பித்தது எனக்குச் சனி. பேசாமல் உண்மையைச் சொல்லியிருந்தாலாவது அப்போதே ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம். இல்லையென்று பொய் சொல்லிவிட்டதால் எனக்கும் சௌகரியமாகப் போய்விட்டது. அவளுக்குத் தெரியாமல் குடிக்க ஆரம்பித்தேன். இரவில் குடிக்கும் சூழ்நிலை வந்தால் வீட்டுக்கு வருவதைத் தவிர்த்தேன். காலையில் வந்து சில பொருத்தமான பொய்களைக் கூறிக்கொண்டேன்.
கொழுத்த நண்டு எத்தனை நாள்தான் வலையில் தங்க முடியும். ஒருநாள் வெளியில் வந்தது. குடித்த ஓர் இரவு வீட்டுக்கு வரவேண்டியதாயிற்று. அன்றைக்குப் பார்த்து அவள் என்னை அணைய முற்பட வாடை காட்டிக் கொடுத்துவிட்டது. அன்றைக்குத்தான் அவளுடைய விஷ்வரூபதரிசனத்தைக் கண்டேன். பத்ரகாளி கோலம் கொண்டு நிலமதிரக் குதித்தாள். கையில் கிடைத்ததையெல்லாம் விட்டெறிந்தாள். கண்ணில் கண்டதையெல்லாம் போட்டுடைத்தாள். மண்ணெண்ணையைத் தலையில் ஊற்றிக்கொண்டு தீக்குச்சி கொளுத்தினாள்.
“ஏய் பைத்தியமாடி உனக்கு? வயத்தில மூணுமாசக் குழந்தைய வச்சிட்டு இப்படிக் குதிக்கறே.”
“பைத்தியமா? ஏண்டா சொல்லமாட்டே நாயே. குடிக்கறதுமில்லாம அத எங்கிட்ட இத்தன நாளா மறைச்சு பொய் சொல்லிட்டு இருந்திருக்கறே.”
“இங்கபாரு இத ஒரு பிரச்சனையாக்காத...பிளீஸ்...”
“இது உனக்குவேனா சாதாரணமா இருக்கலா. எனக்கு அப்பிடியில்லன்னு ஏற்கனவே உங்கிட்ட சொல்லியிருக்கறன்லடா?”
இனி ஒருபோதும் குடிப்பதில்லை என்று அவளிடம் நூறு சத்தியங்கள் செய்தேன். மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டேன். அன்று அவளைச் சமாதானப்படுத்தியதே இன்றுவரை என் வாழ்நாள் சாதனையாக இருக்கிறது.
வண்டி கிளம்பியபோது எந்தச் சலனமும் இல்லாதிருந்த பக்கத்து இருக்கைக்காரன் மெல்ல வேலையைக் காட்ட ஆரம்பித்தான். கொள்ளளவுக்கு மேல் குடிப்பவன் போலும். இருப்புக் கொள்ளாமல் அங்குமிங்கும் திரும்பினான். எனக்கு சிர்..என்று கோபம் வந்தது. என்ன செய்வது. என் கோபத்தைப் பொருட்படுத்தும் நிலையில் குடிமகன் இல்லை. அந்தப் பெண்ணிடம் கோபத்தைக் காட்டலாமா என்று நினைத்தேன். அவள் அவனைக் கண்டுகொள்வதாகவே தெரியவில்லை. எந்தச் சுரத்தும் இல்லாமல் எதையோ வாயில் போட்டுக் கொறித்துக் கொண்டே ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள். திருமணமாகி குறைந்தது பத்து வருடங்களாவது ஆகியிருக்கலாம். முதிர்வு முகத்திலும் உடலிலும் தெரிந்தது. சந்தோஷமற்ற வெறிப்பு அவள் கண்களில் இருந்தது. மெலிந்த உடலும் வறண்டு போன தோலும் வெளிறி வெடித்திருந்த உதடுகளும் செம்பட்டையேறிய சிகையும் அவள்மேல் ஒரு பரிதாபத்தை உண்டாக்கியது. அவள்மேல் கோபப்பட்டு என்ன பயன் என்று நினைத்துக் கொண்டேன்.
குடிமகன் சற்றுநேரம் இரை விழுங்கிய பாம்பு போல் நெளிந்துவிட்டு என் மடிமேல் சாய்ந்து விழுந்தான். அதற்குள் அவன் பக்கமாகத் திரும்பிய அந்தப் பெண் என் மடிமேல் சாய்ந்தவனைக் கையால் இரண்டு தட்டுத்தட்டி “ந்தா எந்திரீ” என்று சட்டையைப் பிடித்து இழுத்தாள். சட்டென்று சுதாரித்து எழுந்தவன் நல்ல பாம்பைப்போல தலையை வலதும் இடதுமாகத் திருப்பித் திருப்பிப் பார்த்தான். என்னைப் பார்த்து ஒரு இளிப்புக் காட்டினான். இளித்துக்கொண்டே அந்தப் பெண்ணின் மீது விழுந்தான். அவளுடைய தொடைகளின் மீது முகத்தை வைத்து அசிங்கமாகத் தேய்த்தான். அந்தச் செயலால் எரிச்சலடைந்த அவள் அவனுடைய கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டாள். உடனே நிமிர்ந்த அவன் ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரித்துக்கொண்டே உதட்டைக் குவித்து அவளை முத்தமிடப் போனான். அவள் தன் கையால் அவனைத் தடுத்துத் தள்ளிவிட மீண்டும் ஒருவாறு பழைய இருப்புக்கு வந்தான்.
சிறிது நேரம் கழித்து உடலைச் சற்று இறக்கி கால்கள் இரண்டையும் மடக்கி முன் இருக்கையில் வைத்து ஒரு உந்து உந்தினான். முன் இருக்கை முழுவதும் குலுங்கியது. அதிலிருந்த மொட்டை ஒன்று திரும்பி முறைத்தது. சற்று நேரம் அப்படியே இருந்துவிட்டு அந்த இருப்பில் திருப்தியில்லாதவனாக மீண்டும் நெளிந்து எழும்பி முன் இருக்கையில் கைகள் இரண்டையும் குறுக்கு வெட்டாக வைத்து தலை கவிழ்ந்து படுத்துக் கொண்டான். அந்தப் பெண் ஏதோ முனகிவிட்டு மீண்டும் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
எனக்கு எழுந்து நின்றுவிடலாம் போல் தோன்றியது. ஆனால் நிற்பவர்களின் நிலை கண்டு என் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். அது மட்டுமல்லாமல் குடிமகனிடமும் அதற்குப் பிறகு எந்தச் சலனமும் இல்லாததால் கொஞ்சம் ஆசுவாசம் அடைந்தேன்.
பேருந்து தாராபுரத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. குடிமகன் மெல்ல தலையைத் தூக்கி என்னைப் பார்த்தான். முகம் இறுக்கமாக இருந்தது. வயிற்றை இரண்டு முறை எக்கினான். “ஓய்” என்று பெருங்குரலெழுப்பினான். குடிகாரன் வாந்தியெடுத்தால் எப்படியிருக்கும் என்று வர்ணித்து எழுத இன்னும் பயிற்சி வேண்டும் எனக்கு. கெட்டித் தயிருக்குள் முட்டையை விட்டு கலக்கியது போல மஞ்சளும் வெள்ளையுமாக, பாதி செரித்துப் பாதி செரிக்காமல் தரிசு தரிசாக கொளகொளவென்று வெளியே வந்து என் மேலேயே விழுந்தது. சுதாரிப்பதற்குள் மீண்டும் ஒருமுறை கக்கினான். சதசதவென்று என் உடல் முழுவதும் வாந்தியால் நனைந்து நாறிப்போனது. அதிலிருந்து வந்த கெட்ட வாடையால் எனக்கு மயக்கமே வருவதுபோல் ஆகிவிட்டது.
பேருந்து முழுவதும் அந்தக் கெட்ட வாடை பரவியது. எல்லா பயணிகளும் சங்கடத்தில் நெளிந்தனர். புடவைகளாலும் துண்டுகளாலும் மூக்கைப் பொத்திக் கொண்டனர். கூட்டம் வாந்தியெடுத்த பகுதியை விட்டு வட்டமாய் விலகி நின்றது. நடத்துனர் கண்டமேனிக்கு கெட்ட வார்த்தை பேசினார். வசவுகளால் அந்தப் பெண்ணைச் சீண்டினார். அவள் எழுந்து நின்று முந்தானையை உதறி இடுப்பில் செருகிக் கொண்டு குடிமகனை வெறித்துப் பார்த்தாளே தவிர வேறு எதுவும் செய்தாள் இல்லை. அவனுடைய வேட்டிக்கட்டு அவிழ்ந்து விலகியது. அப்படியே சரிந்து இருக்கைகளுக்கு நடுவில் விழுந்தான்.
அதற்குள் தாராபுரம் வந்துவிடவே குடிகாரனும் அந்தப் பெண்ணும் வண்டியிலிருந்து இறக்கிவிடப்பட்டனர். பேருந்தை சுத்தம் செய்து கொடுத்து விட்டுப் போகுமாறு அந்தப் பெண்ணிடம் நடத்துனர் தகராறு செய்து கொண்டிருந்தார். என்னுடைய அசூசையான பரிதாப நிலையைக் கண்டு ஒரு கடையில் தண்ணீர் கொடுத்தார்கள். கிட்டத்தட்ட முக்கால் குளியல் போட்டேன். தொப்பலாக நனைந்தபடியே அடுத்த வண்டி பிடித்து படியில் நின்றுகொண்டே ஈரோடு வந்து சேர்ந்தேன். உடல் சூடும் வெளிக்காற்றும் ஈரத்தைக் காயவைத்திருந்தன.
வீட்டுக் கதவைத் தட்டும்போது இரவு பத்தாகியிருந்தது. தூக்கக் கலக்கத்தில் கதவைத் திறந்த மனைவியிடம் எதுவும் பேசாமல் குளியலறைக்குப் போய் துணிகளைக் கழற்றிப் போட்டுவிட்டு ஒரு குளியல் போட்டேன். நேராக வந்து படுக்கையில் விழுந்தேன்.
சற்றுநேரம் கழித்து அருகில் வந்த மனைவி “பாத்ரூம்ல நீ கழட்டிப் போட்ட டிரஸ்ல பிராந்தி நாத்தமடிக்குது.... குடிச்சிட்டு வந்தியா?” என்றாள்.
It's nice
ReplyDeleteஅந்தக் கடைசி வரி அத்தனை அழுத்தத்தையும் சிரிப்பா மாத்திடுச்சு!
ReplyDeleteகலக்குங்க!
நன்று
ReplyDeleteஎல்லாம் பொண்டாட்டிக்கு பயந்த பசக :-))
ReplyDeleteகடசி வரி நச் :-))
enjoyed
ReplyDeleteவாடை - முகர்ந்தபோது கொஞ்சம் மணக்கிறது.மேலும் மணக்க வாழ்த்துக்களுடன்
ReplyDeleteVa(a)dai poche!! Its very nice. Some lines are very interesting and humourous. Keep Going Brother.
ReplyDeleteMurli
கலக்கிடீங்க!
ReplyDeleteமுதல் கதையே சொந்த கதையா சொல்லிடீங்க!!
வாழ்த்துகள் அண்ணா!!!
good story veera...
ReplyDeleteவீரகுமார் Uncle,
ReplyDeleteஅடுத்த கதை எப்ப விடுவீங்கோ, நாங்களெல்லாம் ஆவலுடன் காத்திருக்கிறோம்.உங்க சுய சரிதை எழுதுனாலே 200 பக்கத்துக்கு மேல வருமே..நீங்க கதை விடறீங்களா இல்லை நான் கதை விடட்டுமா..
Dear Anna,
ReplyDeleteThings are fine here .., recently I've moved to new city with my family ..
called Dover,NH.
I've read the short story "Vaadai" , I'm not a good reader (I meant I'm an occasional reader )
but I like to share my experience with this short story.
I was impacted by the story teller's experience with his wife when she found that he was drunk.
As the story teller explains about the transformation of his wife .. when she found the truth .. for me the transformation is realistic .. as it reminds my personal experience with my wife.
My wife is a very calm girl with fears to make any decision or to move with anybody for any simple task - this was everybody's (even somebody who observed her for years) perception .. and no wonder it was my perception too .. till my work life goes into complexities due to USA economy ( the country where I live)
When I was going through dificulties in my work life .., I was shattered (pleasantly ) with her stuberness and keen decisions and conclusions she made., without which I couldnt come out of those difficulities.
The part which depicts the story teller's wife in anger .., increased my pulse rate .. this part is the peak for this story, which was wrapped in interesting narration of Palani and our bus - according to me ...!
And very happy to see a writer who can record my land's regional accent .., kongu tamil.
Kannappan
இரண்டாம் பாகம் கதையை எழுதவில்லையே. கதை கந்தலாகிவிட்டதோ?
ReplyDeleteEnjoyed the story. Good narration about the alcoholic and his wife . Just think ,you made a positive impact that if wife thinks drinkers rate can be reduced in society. Good story. Keep writing.
ReplyDeleteகுடிகாரனின் வாந்தியைக்கூட ஒரு சிறுகதையாய் எழுதமுடியும் என நிரூபித்த என் அன்பு நண்பர் வீராவுக்கு என் வணக்கங்கள்....
ReplyDeleteஅருமையான புனைவு....
மேலும் அதிகமாக உங்களிடமிருந்து எதிர்பார்க்கும்...
சநபா