Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Tuesday, May 1, 2012

செவ்வந்தி - (சிறுகதை)

ருள் நீங்கிக் கொண்டிருந்ததுஇன்னும் கொஞ்ச நேரத்தில் பளிச்சென்று விடிந்துவிடும். சன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்த செவ்வந்தி மெல்லச் சரிந்து தரையில் அமர்ந்தாள். சுவரில் தன் உடலைச் சாய்த்துக் கொண்டாள். பக்கத்தில் சிமினி விளக்கு எரிந்துகொண்டிருந்தது. வலது காலின் கட்டுகள் தளர்வுற்று அவிழ்ந்து கிடந்தன. குனிந்து வலதுகாலைக் கைகளால் பிடித்துத் துாக்கி மடிமீது வைத்துப் பாதத்தில் சுற்றியிருந்த துணியை முழுவதுமாகப் பிரித்தாள். புண்ணிலிருந்து வந்த கெட்ட வாடை மூக்கை குப்பென்று தாக்கியது. 'ஐயோ மறுபடியும் சீ புடிச்சுக்கிட்டுதாட்ட இருக்குதே' என்று நினைத்துக் கொண்டே அதே துணியில் மீண்டும் பாதத்தைச் சுற்றி இறுக்கிக் கட்டினாள். இப்போது காலில் வலி கடுகடுப்பதை உணர்ந்தாள்.

சற்றுத் தள்ளிப் படுத்திருந்த சண்முகம் தொண்டையைச் செருமிக் கொண்டே திரும்பிப் படுத்தான். வேட்டி இடுப்பில் இருந்து விலகிக் கிடந்தது. செவ்வந்தி சிமினி விளக்கின் திருகாணியைத் திருகிக் குறைத்துவிளக்கை அணைத்துவிட்டு “அப்பா..அப்பா..” என்று கூப்பிட்டுப் பார்த்தாள். அவன் ஏதோ முனகியபடி பரக்பரக் என்று குண்டியைச் சொரிந்து கொண்டே புரண்டு படுத்துக் கொண்டான்.

துாரத்தில் சேவலின் கூவலொன்று சன்னமாய்க் கேட்டது. அருகில் கிணற்றுமேட்டடியில் துாக்கணாங்குருவிகள் கிரீச்சிட்டுக் கொண்டிருந்தன. சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த தடியை கையில் எடுத்துக் கொண்டாள். சுவரைப் பிடித்துக் கொண்டு தடியை ஊன்றி மெல்ல எழுந்தாள். நகர்ந்துவந்து நடைதிறந்து வீட்டுக்கு வெளியே வந்தாள். பொடக்காலிக்குள் நுழைந்து ஒன்னுக்கிருந்துவிட்டு மூஞ்சியைக் கழுவிக் கொண்டு வெளியே வந்து படலைப் பிடித்து நின்றபோது கணக்காக பழனிச்சாமிக் கவுண்டரும் அவர் பொண்டாட்டியும் பால்போசியைத் துாக்கிக் கொண்டு அவளைக் கடந்து சென்றார்கள். “த்துா…..தெனமுங்காத்தால இந்த மொண்டி மூஞ்சீல முலிக்கோணுமுனு நம்ம தலையெலுத்து…” என்று எச்சிலைத் துப்பிக்கொண்டே கவுண்டரு தன் பொண்டாட்டியிடம் சொல்லிக் கொண்டு போனது இவள் காதிலும் விழுந்தது.

கிணற்றுமேட்டில், மோட்டார் ரூமுக்குப் பக்கத்தில் அவர்கள் திரும்பி மறையும் வரை அங்கேயே பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது பக்கத்து வீட்டிலிருந்து எச்சில் தட்டு குண்டா தேக்சாவையெல்லாம் துாக்கிக் கொண்டு வெளியே வந்த பெரியம்மா அவற்றையெல்லாம் சலதாரையில் வைத்துவிட்டு நிமிர்ந்து தலைமயிரை உதறிச் சுருட்டிக் கொண்டையிட்டுக் கொண்டிருந்தது. அருகில் அதன் வீட்டு பூனை நின்று கொண்டு முதுகை மேல் நோக்கி வளைத்து கால்களை முன்னால் நீட்டி சோம்பல் முறித்துக் கொண்டிருந்தது.

செவ்வந்தி குனிந்து படலில் மாட்டியிருந்த வார்ச்செருப்பை எடுத்தாள். எந்தச் செருப்பும் இவளுடைய கோணல்கால்களுக்கு ஒத்துவருவதேயில்லை. ஏதோ இந்தச் செருப்பு மட்டும் கொஞ்சம் சுமாராக வாய்த்தது. அதுவும் கூட இவள் காலிழுப்புக்குத் தாங்க முடியாமல் ஒரு பக்கமாகத் தேய்ந்து பல்லிளித்துக் கொண்டுதானிருக்கிறது. அதை இரண்டு தட்டுத்தட்டி குனிந்து காலில் சிக்கவைத்து வாரை மாட்டிக் கொண்டாள். தடியை ஊன்றி கால்களை மெல்ல அடியெடுத்து வைத்தாள்.

படலைத் தாண்டி வீட்டின் பக்கவாட்டிலிருந்த கிணற்றை ஒட்டிய பாதை வழியாகத் தப்படிகள் போட்டாள். சரசரவென்று நான்கைந்து தப்படிகள். சிறிது இளைப்பாறல். மீண்டும் தப்படிகள். கிணற்றுப் பாதை தாண்டி இட்டேரிக்கு வந்து கிழக்குப் பக்கம் திரும்பி நகர்ந்தாள். இட்டேரியை ஒட்டி வலப்பக்கமாக பழனிச்சாமிக் கவுண்டரின் தொண்டுப்பட்டி இருந்தது. அதைத் தாண்டி வேகமாக முன்னேறினாள். இட்டேரித்தடம் முடிந்து வாய்க்கால் மேட்டில் நின்று  பார்த்தபோதுதான் செவ்வந்திக்குத் திக்கென்றது. நொச்சிமரச்செடிகளை சில ஆட்கள் வெட்டிக் கொண்டிருந்தார்கள்.

செவ்வந்தி வெளிக்குப் போவதற்கு அதைவிட்டால் வேறு தோதான இடம் கிடையாது. நன்கு நடக்க முடிந்தவர்கள் கிணற்றுமேடு தாண்டி மேற்குப் பக்கம் சென்று நேராகத் துண்டுக்காட்டுத் தென்னந்தோப்புக்குப் போய்விடுவார்கள். அங்கே செல்ல துாரம் அதிகம். இந்த நொச்சிமரச்செடி மறைவுதான் வீட்டிலிருந்து எட்டிக் கொடுத்தது போல் இருக்கும் ஒரே இடம். சின்னப்புள்ளயா இருக்கும் போது வீட்டுக்குப் பக்கத்திலேயே போய் விடுவாள். இப்போது செவ்வந்திக்குப் பதிமூன்று வயதாகிறது. கடந்த பத்து வருடங்களாய் அந்த நொச்சிமரச்செடியை ஒட்டித்தான் வெளிக்குப் போய்க்கொண்டிருக்கிறாள். அந்த இடத்தில் அவளுக்குச் சில வசதிகள் இருந்தன. மற்றவர்களைப் போல் உட்கார்ந்து கொண்டெல்லாம் அவளால் போக முடியாது. நொச்சிச் செடிகள் விளாறுவிளாறாக அடர்ந்து ஓங்கி வளர்ந்து தடிமனாக மரம் போலக் கெட்டிப்பட்டிருக்கும். அதை ஒரு கையில் ஆதரவாகப் பிடித்துக் கொண்டு இடுப்பை வளைத்து பாதி நின்ற நிலையிலும் பாதி உட்கார்ந்த நிலையிலுமே போக வேண்டும். சில நேரங்களில் வயிறு சரியில்லாமல் தண்ணி தண்ணியாகப் பீய்ச்சியடிக்கும் சமயங்களில் காலெல்லாம் அடித்துக் கொண்டு வழியும். அப்படிப்பட்ட நாட்களில் செவ்வந்திக்குத் தன் மேலேயே கோபம் கோபமாக வரும்.

அங்கேயும் கூட வெடியக்காலமே போய்விட்டு வந்துவிடவேண்டும். பொழுது விடிந்து சூரியன் மெலெழும்பி விட்டால், நொச்சிமரச்செடிகளுக்குப் பக்கத்தில் மலம் கழிக்க முடியாது. நொச்சிமரங்கள் இருக்கும் பங்கு பழனிச்சாமிக் கவுண்டரின் தம்பியுடையது. அதை ஓட்டியே பழனிச்சாமிக் கவுண்டரின் தோட்டம் உள்ளது. அவர் தன் பங்கில் எப்போதுமே ஏதாவது ஒரு வெள்ளாமை வைத்திருப்பார். தினமும் அதிகாலையில் பால் கறந்து, அதைக் கொண்டு போய்ப் பால்சொசைட்டியில் ஊற்றிவிட்டு, காலையில் வீட்டில் சாப்பிட்டுவிட்டு வந்தாரென்றால் பொழுதுசாயும் வரை தோட்டத்திலேயே வேலைகள் செய்து கொண்டிருப்பார். அவர் இல்லாத சமயங்களில் அவர் பொண்டாட்டியோ அல்லது கூலியாட்களோ வேலை செய்து கொண்டிருப்பார்கள்.

பழனிச்சாமிக்கவுண்டருக்கும் அவர் தம்பிக்கும் பங்கு பிரிப்பதில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டு அதனால் அவர் தம்பி அந்த நொச்சிக் காட்டில் எந்த வெள்ளாமையும் வைக்காமல் சும்மா போட்டுவிட்டு ஈரோட்டிற்குப் போய்விட்டார். மஞ்சள்மண்டி வைத்திருக்கிறார். அங்கேயே வீடு கட்டிக் குடும்பத்துடன் குடியேறிவிட்டார்.

“நொச்சிக்காட்டுத் தோட்டத்தையு பழனிச்சாமிக்கவுண்டரே வாங்கிட்டாராமா. அவரு தம்பி எல்லாத் தோட்டத்தையு அண்ணனுக்கே வித்துப் போட்டாராமா..!!” என்று பெரியம்மா ஒரு வாரத்துக்கு முன்னாடி சொன்னப்பக்கூட செவ்வந்திக்கு அது பெரிதாக உறைக்கவில்லை. நொச்சிமரச்செடிகளை வெட்டிவிடுவார்கள் என்று அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இப்போது அவள் கண்முன்னாலேயே வெட்டிக்கொண்டிந்தார்கள்.

சற்று நேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்தாள். தனக்குச் சொந்தமான ஒன்று தன்னிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்கப்படுவது போல அவளுக்குத் தோன்றியது. மனம் கசிந்து கண்களில் நீர் கோர்த்தது. அதற்கு மேல் அவளால் அங்கு நிற்க முடியவில்லை. கண்களைத் துடைத்துக் கொண்டு வந்த வழியே திரும்பினாள். வழியில் பழினிச்சாமிக்கவுண்டர் எதிர்பட்டார். இவள் அருகில் வந்து “ஏய், இனிமே நொச்சிக்காட்ட நாத்தம் பண்ணமுடியாதுண்ணு, தொண்டுப்பட்டிக்குப் பக்கத்துல எங்காவது பேண்டு வச்சேன்னு வெய்யி, கால வெட்டிருவேன் ஜாக்கிரதை” என்று நரநரத்துவிட்டு வெட்டப்பட்டுக் கொண்டிருக்கும் நொச்சிமரச் செடிகளை நோக்கி நடந்தார். செவ்வந்திக்கு ஆத்திரம் பீறிட்டது. மமட்டைக் கடித்துக் கொண்டு வேகமாகக் காலை இழுத்து இழுத்து நடந்தாள். காலில் மீண்டும் கட்டுகள் தளர்வுற்றன.

தட்டுத் தடுமாறி வீட்டுக்குள் நுழைந்து அவளுடைய இடத்துக்கு வந்து பாயில் அப்படியே மடிந்து உட்கார்ந்தாள். கண்களில் கோர்த்த நீர் மேலும் அங்கு நிற்க முடியாமல் வழிந்து ஒழுகத் தயாராக இருந்தது. அடி வயிற்றில் மலத்தின் உந்துதல் அதிகரிக்க ஆரம்பித்தது.

சண்முகம் இன்னும் படுத்துக்கிடந்தான். பொழுது விடிந்து சன்னல் வழியாக வெய்யில் நுழைந்து அவன் மேல் விழுந்துகொண்டிருந்தது. நேரம் ஆகஆக வெய்யிலின் சூடு உறைக்கவே, திடீரென்று சொரனை வந்தவன் போல எழுந்து உட்கார்ந்தான். “ஆஆஆ....ய்ய்ய்...” என்று ஒரு கொட்டாவி போட்டான். தலையைச் சொரிந்து கொண்டே படுத்திருந்த இடத்தைச் சுற்றி ஒரு நோட்டம் விட்டான். தலையணைக்குப் பக்கத்தில் கிடந்த பீடிக்கட்டை எடுத்து ஒரு பீடியை உருவி வாயில் வைத்து அதன் நுணியைக் கடித்துக் கொண்டே திரும்பி செவ்வந்தியைப் பார்த்தான்.

ஏலே..? இஞ்சி தின்ன கொரங்காட்டமா உக்காந்திருக்கறே.?” என்று கேட்டுக் கொண்டே பீடியைப் பற்றவைத்தான். செவ்வந்தி எதுவும் பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். பீடியை இரண்டு இழுப்பு இழுத்துவிட்டுக் கையை ஊன்றி எழுந்திருக்க முயலும் போது வேட்டி இடுப்பில் இருந்து நழுவியது. சட்டென்று அதைப் பிடித்துத் துாக்கிக்கட்டிக் கொண்டு செவ்வந்தியின் அருகே வந்து குனிந்து அவள் பாதத்தைப் பார்த்தான்.

“என்னலே.. இன்னிக்கு மறுவடியு வீங்கி இருக்குது. சீப்புடுச்சுக்கிச்சாட்ட தெரியுது.?” என்றான்.

செவ்வந்தி மூச்சியைத் தொங்கவிட்டவாறே “ஆமா“ என்றாள்.

“உன்னோட பெரிய ரொதனையா போச்சுலே...போன வாரந்தேன போயி கட்டுக்கட்டி கூட்டியாந்தேன். அதுக்குள்ள கசாமுசான்னு நடந்து புண்ணப் பெருசாக்கிட்டியா.? நாலுநாளைக்கொருக்கா உனக்கு இதே பொளப்பாப்போச்சுலே. பேசாம நீயுங்கொம்மா கோடவே போயித்தொலஞ்சிருந்தீனா எனக்கு நிம்மதியா இருந்திருக்கு” என்று எரிந்துவிழுந்தவாறே கதவைத்திறந்து படாரென்று சாத்திவிட்டு வெளியேறினான்.

அம்மா…’ மங்கலாக மட்டுமே செவ்வந்திக்குத் தெரிந்த உருவம். செவ்வந்தி மூன்று வயதாக இருக்கும் போதே சீக்கு வந்து அவள் அம்மா செத்துப்போய் விட்டதாகப் பாட்டி மூலம் அறிந்திருக்கிறாள். வளர்ந்ததெல்லாம் பாட்டியிடம் தான். சின்னக் குழந்தையிலேயே இளம்பிள்ளைவாதத்தில் கால்கள் இரண்டும் சூப்பிக் கொண்டுவிட்டன. கால்களை இழுத்திழுத்து நடக்க வேண்டியிருந்ததால் பாதங்களில் அடிக்கடி புண்கள் ஏற்பட்டு ஆறாத ரணமாக ஆகியிருந்தது. படிப்பும் சரியாக வரவில்லை. பாட்டி இருந்தவரை பள்ளிக்கூடத்துக்குத் துாக்கிக் கொண்டு சென்று அவளே திரும்பக்கூட்டி வருவாள். அவளும் போய்ச் சேர்ந்த பிறகு மூன்றாம் வகுப்புடன் படிப்பு நின்று போனது.
இருக்கும் ஒரே துணை அப்பாதான். துணை என்ன துணை.!. சாப்பாடு மட்டும் செய்து வைப்பான். எப்போதாவது ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போவான். பெரும் குடியன். இருந்த ஒரு ஏக்கரா நிலத்தையும் குடித்தே அழித்துவிட்டு இப்போது கூலி வேலைக்குப் போய்க் கொண்டிருக்கிறான். சொந்த பந்தங்களுக்குள் எந்த மதிப்பும் மரியாதையும் கிடையாது. சமயத்தில் நல்லதுகெட்டதுக்குக் கூடச் சொல்லி அனுப்ப மாட்டார்கள்.

காசு இல்லைங்கறதுனால ஒரு நாயும் மதிக்க மாட்டேங்கறானுங்க’ என்று அவன் சொல்லித் திரிந்தாலும் உண்மை அதுவல்ல. பொம்பளை விசயத்தில் அவன் குணம் சரியில்லை என்று ஊருக்குள் ஒரு பேச்சிருக்கு. தண்ணீயைப் போட்டுவிட்டு எந்த வீட்டுக்குள்ளும் எந்த நேரமும் நுழைவான். யார் மீது வேண்டுமானாலும் கை வைப்பான். அதனால் அவன் மீதும் எல்லோரும் ‘கை’ வைத்தார்கள்.

முன்பெல்லாம் செவ்வந்தியின் பெரியம்மா அடிக்கடி வீட்டுக்கு வந்து அவளுக்குச் சில உதவிகள் செய்து கொண்டிருக்கும். சண்முகம் அதனிடமும் ஏதோ தப்பாக நடந்துகொண்டதால் பெரிய தகராறு ஏற்பட்டு இப்போது அதுவும் வீட்டுக்குள் வருவதில்லை. எப்போதாவது வாசலில் நின்று இரண்டொரு வார்த்தை இவளிடம் பேசிச் செல்வதோடு சரி.

செவ்வந்திக்கு சந்தோசமான உலகம் ஒன்று உண்டென்றால் அது சன்னல் வழியாக வெளியே தெரியும் கிணறுதான். பெஞ்சியை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து மணிக்கணக்காகக் கிணற்றையே பார்த்துக் கொண்டிருப்பாள். நீளமான பெரிய கிணறு. கடும் வேடையைத் தவிர வேறெப்போதும் வற்றாத கிணறு. இவள் சோட்டுப் பிள்ளைகள் சுற்று வட்டாரங்களில் இருந்து வந்து இந்தக் கிணற்றில்தான் நீச்சல் பழுகுவார்கள். பெரியவர்கள் சிறிவர்கள் என்று வருடத்தில் வெயில் காலங்களில் கிணற்றில் ஒரே களோபரமாகத்தான் இருக்கும். சில நேரங்களில் இவளுக்கே கூடப் போய் நீச்சல் அடிக்கலாம் என்று தோன்றும். ஆர்வம் மிகுதியில் சில நேரங்களில் வீட்டுக்கு வெளியில் வந்து மெல்ல நடந்து கிணற்றின் அருகில் கவனமாகச் சென்று நீந்துபவர்களை அருகில் இருந்து பார்ப்பது இவளுக்குப் பெருமகிழ்ச்சி. அப்படிக் கொண்டாட்டமாக இருக்கும் கிணறு யாருமில்லாத சமயங்களில் நிசப்தமாக இருக்கம். கிணற்றின் நிசப்தத்தையே செவ்வந்தி அதிகமாக நேசித்தாள். வீட்டுக்குள் அவளும் வெளியே கிணறும் தனிமையாக இருக்கும் தருணங்களில் தண்ணீரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பாள். அந்த அடர் பச்சை வண்ணம் அவளுக்குள் ஒரு மோன நிலையை உருவாக்கும். தன்னை மறந்த நிலையில் தானும் அந்தத் தண்ணீராகவே மாறிவிட்டதைப் போல் உணர்வாள். மனம் முழுவதும் பச்சை வண்ணமே வியாபித்து நிரம்பும். அவ்வப்போது அவள் நினைவைக் கலைப்பது துாக்கணாங்குருவிக் கூட்டங்களே. கிணற்றின் பக்க வாட்டு மதில்சுவரின் சாய்வில் உள்ள கோணப்புளியங்காய் மரத்தில் துாக்கணாங்குருவிகள் கூடுகட்டி வாழ்ந்து வந்தன.

குருவிகள் வருவதையும் போவதையும் வந்த குருவிகள் அந்தக் கூட்டின் மீது அமர்ந்து பின் மெல்லத் தலையை நுழைத்து கூடுகளுக்குள் செல்வதையும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டேயிருப்பாள். மீண்டும் குருவி எப்போது வெயியே வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பாள். சட்டென்று குருவி தலையை நீட்டி வெளியே வந்து மீண்டும் உள்ளே போய்விடும். அந்தக் கணம் செவ்வந்தியின் மனம் மகிழ்ந்துதிகழும். தன் விழிவிரித்து முகம் மலர்வாள்.

வெயியே போன சண்முகம் சற்று நேரம் கழித்து உள்ளே வந்தான். அடுப்பங்கரைக்குப் போய் குண்டாக்களை உருட்டினான். ஒவ்வொன்றாக திறந்து பார்த்தான். “ராத்திரி சோத்துல தண்ணியூத்தி வெச்சிருக்கறேன். இப்ப அதப்போட்டு தின்னுக்க. மத்தியானத்துக்கு சோறாக்கிக்கலா” என்று இவளைப் பார்க்காமலேயே சொல்லிவிட்டு மீண்டும் விரிந்து கிடந்த பாயில் படுத்துக் கொண்டான்.

திடீரென்று அடிவயிற்றில் கனம் அதிகமானது. வயிற்றுக்குக் கீழே வலி எடுத்தது. ஆசன வாயில் அழுத்தம் கூடியது. கன்னத்து ரோமங்கள் சில்லிட்டன. உடல் முழுவதும் ஒரு ரோமாஞ்சனம் பரவியது. செவ்வந்தி கைகளால் பாயை இறுகப்பற்றினாள். உதட்டைக் கடித்துக் கொண்டு மூச்சை உள்ளிழுத்துப் பிடித்தாள். மலவாயை இறுக்கிக்கொண்டாள். மலம் உள்ளுக்குள் புரண்டு மடங்கி மேலெழுந்தது. உந்துதல் சற்றுக் குறைந்தது போல் இருந்தது. வேறு எங்காவது போக முடியுமா என்று எல்லா இடங்களுக்கும் மனம் பதைபதைத்து ஓடியது. இந்த நேரத்தில் எங்குமே போக முடியாதே என்றுணர்ந்து குறுகி அழுதது. மீண்டும் ஆசன வாயில் மலம் ஆவேசமாக உந்த ஆரம்பித்தது. அதுவரை புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்த சண்முகத்தை எது விரட்டியது என்று தெரியவில்லை சட்டென்று எழுந்தான். சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டெ வெயியே கிளம்பினான்.

அவன் வெளியே போனவுடன் செவ்வந்தி தடாலென்று பக்கத்தில் சாய்ந்து அங்கு பொரிகடலை கட்டி வைத்திருந்த சவ்வுக்காகிதத்தை எடுத்துப் பிரித்து பொரியைக் கீழே கொட்டினாள். காகிதத்தை உதறிக்கொண்டே கையை நீட்டி ஒரு குண்டாவை எடுத்தாள். சவ்வுக் காகிதத்தை அதன் மேலாகப் போட்டு, சற்று குழியாகச் செய்து தன் பாவாடையைத் துாக்கி குண்டாவை தன் இடுப்புக்கு அடியில் நகர்த்தினாள். ஆசன வாய்க்குத் தகுந்தவாறு அதைப் பொருத்தினாள். சமுக்காளத்தை எடுத்துத் தன்னை முழுவதுமாகப் போர்த்திக்கொண்டாள். இப்போது மலம் அவளிடமிருந்து சவ்வுக்காதிதம் மூடிய குண்டாவுக்குள் இறங்கியது.

செவ்வந்தி கிணற்றையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் முகம் இருண்டிருந்தது. கிணறும் தீவிரமாதொரு மௌனத்தில் இருந்தது. திடீரென்று ஆங்காரமாக, சுருட்டி வைத்திருந்த ஒரு சிறு துணி மூட்டையை கிணற்றை நோக்கித் துாக்கி எறிந்தாள். துணிமூட்டை கிணற்றுப்பாதையில் விழுந்து உருண்டது. துணி கொண்டு சுற்றப்பட்டிருந்த சவ்வுக்காகிதம் தனியாகப் பிரிந்தது. பிரிந்த சவ்வுக்காகிதம் மண்மேட்டில் சரிந்து கிணற்றுக்குள் விழுந்தது. சவ்வுக்காகிதத்தில் இருந்த மலம் வெளியே வந்து தண்ணீருக்குள் மிதந்தது. கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்தது. செவ்வந்தி அதையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தாள்.


                                       ***

Tuesday, February 15, 2011

வாடை - ( சிறுகதை )

ழனி பேருந்து நிலையத்தில் வழக்கம் போல நசநசப்புக்குக் குறைவில்லை. காவிகளும் காவடிகளுமாக எங்கு பார்த்தாலும் கூட்டம். ஊருக்குத் திரும்பும் அவசரம். எல்லாப் பேருந்துகளும் பக்தர்களை அள்ளி அடைத்தபடி மெதுவாக நகர்ந்து வெளியேறிக்கொண்டிருந்தன. இன்று காலையில் என் கல்லூரித் தோழனின் திருமணம் திருஆவினன்குடி கோவிலில் நடந்தது. முந்தைய நாள் இரவே வந்துவிட்டேன். தீபம் லாட்ஜில் ரூம் போட்டாயிற்று. என்னைத் தவிர இன்னும் மூன்று நண்பர்கள். ஒருவரை ஒருவர் பார்த்து ஐந்து வருடங்களாகி விட்டபடியால் இரவு வெகுநேரம் வரை அரட்டையடித்துக் கொண்டிருந்தோம். காலையில் திருமணம் முடிந்தவுடன் நண்பர்கள் கிளம்பி விடவே நான் மட்டும் களைப்புத் தீர சிறிது நேரம் தூங்கிவிட்டுச் செல்லலாம் என்று படுத்தேன். விழித்துப் பார்த்த போது மணி சாயங்காலம் நாலு ஆகியிருந்தது. அவசர அவசரமாக விடுதி அறையைக் காலி செய்து விட்டுப் பேருந்து நிலையம் வந்து நின்றுகொண்டிருந்தேன்.

சிறிது நேரத்தில் ஈரோடு வண்டி வந்து நின்றது. அதுவரை அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறியிருந்த மக்கள் பேருந்தைச் சுற்றி மொய்க்க ஆரம்பித்து விட்டார்கள். படிக்கட்டில் முட்டிமோதி நுழைந்தேறிய கூட்டத்துடன் சோ்ந்து நானும் ஒருவனாக ஏறிக்கொண்டேன். அதற்கு முன்பாகவே பல புத்திசாலிப் பயணிகள் ஜன்னல் வழியாக கைக்குட்டைகளாலும் வாட்டர் பாட்டில்களாலும் ஒயர் கூடைகளாலும் இருக்கைகளை முன்பதிவு செய்துவிட்டார்கள். ஆனாலும் கூட எனக்கு ஒரு இடம் கிடைத்தது அதிர்ஷ்டமே! ஜன்னல் ஓரத்தில் ஒரு நடுத்தர வயதுப் பெண் அமர்ந்திருந்தாள். அவளுக்குப் பக்கத்தில் அவள் கணவன். கடைசியாக நான். பின்னால் ஏறியவர்கள் நசுங்கிக் கொண்டு மூச்சுத் திணறி நின்றார்கள். அதைப் பார்த்த எனக்கு சற்று நிம்மதியாக இருந்தது.
   
சிறிது நேரத்தில் வண்டி கிளம்பியது. நகர எல்லையை விட்டு ரயில்வே லைன் தாண்டியது. செவண்த் பட்டேலியன் கடந்து தாராபுரம் சாலையில் மெல்ல வேகமெடுத்தது. நடத்துனர் முண்டியடித்துக் கொண்டு டிக்கெட் கொடுக்க ஆரம்பித்தார். வண்டிக்குள் எங்கு திரும்பினாலும் சந்தனம் அப்பிய மொட்டைத் தலைகள். குழந்தை குட்டிகளோடு நீக்கமற நிறைந்திருந்தன. பெரிய மொட்டைகள் கொய்யாப்பழம் கடித்துக் கொண்டும் வெள்ளரிப் பிஞ்சுகள் மென்று கொண்டும், சிறிய மொட்டைகள் பலூன், ரப்பர் பந்து, மயிலிறகு போன்றவற்றை வைத்து விளையாடிக் கொண்டும், சிலர் களைத்துப் போய் அரைத்தூக்கித்திலும் சிலர் வாயில் எச்சில் வழிந்தபடி முழுத் தூக்கத்திலும், மொத்தத்தில் பேருந்து முழுவதும் மொட்டைகள் ராஜ்யம். ஆனால் எனக்கு அருகில் வாய்த்தவன் மொட்டையல்ல. முடியுடை மன்னன்.

உண்மையிலேயே மன்னன் ஓய்வெடுப்பது போன்ற பாவனையிலேயே அமர்ந்திருந்தான். நெஞ்சை நிமிர்த்தி தலையை மேல் நோக்கி வைத்து வாயைப்பிளந்து கொண்டு கண்களை மூடி ஏகாந்தமாய்ச் சாய்ந்திருந்தான். ஆனால் அவனிடமிருந்து ஒரு கெட்ட வாடை வீசியது. கண்டுபிடித்துவிட்டேன். குடிகாரன் பாம்பின் கால் பாம்பறியுமே. நானும் குடித்துக் கொண்டிருந்தவன்தான். சமீபகாலமாகத்தான் குடியை விட்டேன்.

எட்டாம் வகுப்பு முழுப் பரிட்சை லீவுக்கு அப்பிச்சியின் ஊருக்குப் போனபோது ஆரம்பித்த பழக்கம்.

    “பய எலச்சி எலும்பா திரியறானே, ஒரு மரத்துக் கள்ளுக் குடிச்சா ஒடம்பு கிண்ணுன்னு ஏறும்ல” என்று கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு துண்டுக்காட்டுத் தென்னந்தோப்புக்குக் அப்பிச்சி கூட்டிச் செல்வார். ‘கள் என்பது உடல் நலத்துக்கு உகந்தது’ என்ற கருத்தாக்கம் கொண்டவர். சின்ன வயதில் தோள் மேல் தூக்கிப் போட்டுக் கொண்டு நடந்த, கிணற்றில் இறக்கி நீச்சல் கற்றுக் கொடுத்த, நுங்கு சீவிக் கொடுத்த, இளநீர் பொத்துக் கொடுத்த அப்பிச்சியை மிகவும் பிடித்துப் போனதால் அவர் சொல்வது எல்லாம் எனக்கு வேதவாக்கு.

சுரக்குடுவையில் வெள்ளை வெளேரென நுரைத்துக் கொண்டிருக்கும் கள்ளை முதன்முறையாக முகர்ந்த அந்த நிமிடமே அதன் மணம் என் மூளையில் சென்று பதிய வேண்டிய இடத்தில் பதிந்து கொண்டது. ஒரு மரத்துக் கள்ளும், அதற்கு நக்கிக்கொள்ள நாரத்தங்காய் ஊறுகாயுமாக அந்த முழுப் பரிட்சை லீவில் என் குடியைத் தொடங்கினேன்.

கள்ளில் ஆரம்பித்த குடி கல்லூரிக்குள் நுழைந்ததும்  பீருக்கு மாறியது.  பிறகு வேலைக்குச் சென்ற பின் பீரின் இடத்தை விஸ்கி பிடித்துக் கொண்டது. மிகவும் சந்தோஷமாய் இருந்தாலும் குடிப்பேன். தாங்க முடியாத மனச்சோர்வில் இருந்தாலும் குடிப்பேன்.

என்னுடைய குடியுரிமைக்கு கல்யாணம் ஆகும்வரை எந்த பங்கமும் ஏற்படவில்லை. ஆனால் வந்து வாய்த்தவளுக்கோ குடியென்றாலே வெறுப்பு. அதற்குக் காரணம், குடித்துக் குடித்தே குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்திய அவளுடைய அப்பா. குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து சர்வகாலமும் அவள் அம்மாவை அடித்துத் துன்பப்படுத்திக் கொண்டிருந்திருக்கிறார். பிறகு ஒருநாள் குண்டாமணி வெடித்துச் செத்துப் போய்விட்டார். அம்மாவின் அரவணைப்பில் கஷ்டப்பட்டு படித்து வங்கியில் வேலை பெற்று தெரிந்த குடும்ப நண்பர் மூலமாக எங்கள் குடும்பத்துக்கு அறிமுகமாகி பிறகு ஒரு சுபயோக சுபதினத்தில் சுற்றமும் நட்பும் சூழ என் கையால் தழையத் தழையத் தாலி கட்டிக் கொண்டு முதலிரவன்று அவள் கேட்ட முதல் கேள்வியே “நீங்க குடிப்பீங்களா?” என்று தான். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சற்றுக் குழம்பிய பின், “இல்லை” என்று சொல்லிவிட்டு அப்போதைக்கு ஆகவேண்டிய காரியத்தில் கண்ணாய் இருந்து விட்டேன். அன்று ஆரம்பித்தது எனக்குச் சனி. பேசாமல் உண்மையைச் சொல்லியிருந்தாலாவது அப்போதே ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம். இல்லையென்று பொய் சொல்லிவிட்டதால் எனக்கும் சௌகரியமாகப் போய்விட்டது. அவளுக்குத் தெரியாமல் குடிக்க ஆரம்பித்தேன். இரவில் குடிக்கும் சூழ்நிலை வந்தால் வீட்டுக்கு வருவதைத் தவிர்த்தேன். காலையில் வந்து சில பொருத்தமான பொய்களைக் கூறிக்கொண்டேன்.
   
கொழுத்த நண்டு எத்தனை நாள்தான் வலையில் தங்க முடியும். ஒருநாள் வெளியில் வந்தது. குடித்த ஓர் இரவு வீட்டுக்கு வரவேண்டியதாயிற்று. அன்றைக்குப் பார்த்து அவள் என்னை அணைய முற்பட வாடை காட்டிக் கொடுத்துவிட்டது. அன்றைக்குத்தான் அவளுடைய விஷ்வரூபதரிசனத்தைக் கண்டேன். பத்ரகாளி கோலம் கொண்டு நிலமதிரக் குதித்தாள். கையில் கிடைத்ததையெல்லாம் விட்டெறிந்தாள். கண்ணில் கண்டதையெல்லாம் போட்டுடைத்தாள். மண்ணெண்ணையைத் தலையில் ஊற்றிக்கொண்டு தீக்குச்சி கொளுத்தினாள்.

    “ஏய் பைத்தியமாடி உனக்கு? வயத்தில மூணுமாசக் குழந்தைய வச்சிட்டு இப்படிக் குதிக்கறே.”

    “பைத்தியமா? ஏண்டா சொல்லமாட்டே நாயே. குடிக்கறதுமில்லாம அத எங்கிட்ட இத்தன நாளா மறைச்சு பொய் சொல்லிட்டு இருந்திருக்கறே.”

    “இங்கபாரு இத ஒரு பிரச்சனையாக்காத...பிளீஸ்...”

    “இது உனக்குவேனா சாதாரணமா இருக்கலா. எனக்கு அப்பிடியில்லன்னு ஏற்கனவே உங்கிட்ட சொல்லியிருக்கறன்லடா?”

இனி ஒருபோதும் குடிப்பதில்லை என்று அவளிடம் நூறு சத்தியங்கள் செய்தேன். மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டேன். அன்று அவளைச் சமாதானப்படுத்தியதே இன்றுவரை என் வாழ்நாள் சாதனையாக இருக்கிறது.

வண்டி கிளம்பியபோது எந்தச் சலனமும் இல்லாதிருந்த பக்கத்து இருக்கைக்காரன் மெல்ல வேலையைக் காட்ட ஆரம்பித்தான். கொள்ளளவுக்கு மேல் குடிப்பவன் போலும். இருப்புக் கொள்ளாமல் அங்குமிங்கும் திரும்பினான். எனக்கு சிர்..என்று கோபம் வந்தது. என்ன செய்வது. என் கோபத்தைப் பொருட்படுத்தும் நிலையில் குடிமகன் இல்லை. அந்தப் பெண்ணிடம் கோபத்தைக் காட்டலாமா என்று நினைத்தேன். அவள் அவனைக் கண்டுகொள்வதாகவே தெரியவில்லை. எந்தச் சுரத்தும் இல்லாமல் எதையோ வாயில் போட்டுக் கொறித்துக் கொண்டே ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள். திருமணமாகி குறைந்தது பத்து வருடங்களாவது ஆகியிருக்கலாம். முதிர்வு முகத்திலும் உடலிலும் தெரிந்தது. சந்தோஷமற்ற வெறிப்பு அவள் கண்களில் இருந்தது. மெலிந்த உடலும் வறண்டு போன தோலும் வெளிறி வெடித்திருந்த உதடுகளும் செம்பட்டையேறிய சிகையும் அவள்மேல் ஒரு பரிதாபத்தை உண்டாக்கியது. அவள்மேல் கோபப்பட்டு என்ன பயன் என்று நினைத்துக் கொண்டேன்.

குடிமகன் சற்றுநேரம் இரை விழுங்கிய பாம்பு போல் நெளிந்துவிட்டு என் மடிமேல் சாய்ந்து விழுந்தான். அதற்குள் அவன் பக்கமாகத் திரும்பிய அந்தப் பெண் என் மடிமேல் சாய்ந்தவனைக் கையால் இரண்டு தட்டுத்தட்டி “ந்தா எந்திரீ” என்று சட்டையைப் பிடித்து இழுத்தாள். சட்டென்று சுதாரித்து எழுந்தவன் நல்ல பாம்பைப்போல தலையை வலதும் இடதுமாகத் திருப்பித் திருப்பிப் பார்த்தான். என்னைப் பார்த்து ஒரு இளிப்புக் காட்டினான். இளித்துக்கொண்டே அந்தப் பெண்ணின் மீது விழுந்தான். அவளுடைய தொடைகளின் மீது முகத்தை வைத்து அசிங்கமாகத் தேய்த்தான். அந்தச் செயலால் எரிச்சலடைந்த அவள் அவனுடைய கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டாள். உடனே நிமிர்ந்த அவன் ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரித்துக்கொண்டே உதட்டைக் குவித்து அவளை முத்தமிடப் போனான். அவள் தன் கையால் அவனைத் தடுத்துத் தள்ளிவிட மீண்டும் ஒருவாறு பழைய இருப்புக்கு வந்தான்.   

சிறிது நேரம் கழித்து உடலைச் சற்று இறக்கி கால்கள் இரண்டையும் மடக்கி முன் இருக்கையில் வைத்து ஒரு உந்து உந்தினான். முன் இருக்கை முழுவதும் குலுங்கியது. அதிலிருந்த மொட்டை ஒன்று திரும்பி முறைத்தது. சற்று நேரம் அப்படியே இருந்துவிட்டு அந்த இருப்பில் திருப்தியில்லாதவனாக மீண்டும் நெளிந்து எழும்பி முன் இருக்கையில் கைகள் இரண்டையும் குறுக்கு வெட்டாக வைத்து தலை கவிழ்ந்து படுத்துக் கொண்டான். அந்தப் பெண் ஏதோ முனகிவிட்டு மீண்டும் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

எனக்கு எழுந்து நின்றுவிடலாம் போல் தோன்றியது. ஆனால் நிற்பவர்களின் நிலை கண்டு என் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். அது மட்டுமல்லாமல் குடிமகனிடமும் அதற்குப் பிறகு எந்தச் சலனமும் இல்லாததால் கொஞ்சம் ஆசுவாசம் அடைந்தேன்.

பேருந்து தாராபுரத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. குடிமகன் மெல்ல தலையைத் தூக்கி என்னைப் பார்த்தான். முகம் இறுக்கமாக இருந்தது. வயிற்றை இரண்டு முறை எக்கினான். “ஓய்” என்று பெருங்குரலெழுப்பினான். குடிகாரன் வாந்தியெடுத்தால் எப்படியிருக்கும் என்று வர்ணித்து எழுத  இன்னும் பயிற்சி வேண்டும் எனக்கு. கெட்டித் தயிருக்குள் முட்டையை விட்டு கலக்கியது போல மஞ்சளும் வெள்ளையுமாக, பாதி செரித்துப் பாதி செரிக்காமல் தரிசு தரிசாக கொளகொளவென்று வெளியே வந்து என் மேலேயே விழுந்தது. சுதாரிப்பதற்குள் மீண்டும் ஒருமுறை கக்கினான். சதசதவென்று என் உடல் முழுவதும் வாந்தியால் நனைந்து நாறிப்போனது. அதிலிருந்து வந்த கெட்ட வாடையால் எனக்கு மயக்கமே வருவதுபோல் ஆகிவிட்டது.

பேருந்து முழுவதும் அந்தக் கெட்ட வாடை பரவியது. எல்லா பயணிகளும் சங்கடத்தில் நெளிந்தனர். புடவைகளாலும் துண்டுகளாலும் மூக்கைப் பொத்திக் கொண்டனர். கூட்டம் வாந்தியெடுத்த பகுதியை விட்டு வட்டமாய் விலகி நின்றது. நடத்துனர் கண்டமேனிக்கு கெட்ட வார்த்தை பேசினார். வசவுகளால் அந்தப் பெண்ணைச் சீண்டினார். அவள் எழுந்து நின்று முந்தானையை உதறி இடுப்பில் செருகிக் கொண்டு குடிமகனை வெறித்துப் பார்த்தாளே தவிர வேறு எதுவும் செய்தாள் இல்லை. அவனுடைய வேட்டிக்கட்டு அவிழ்ந்து விலகியது. அப்படியே சரிந்து இருக்கைகளுக்கு நடுவில் விழுந்தான்.

அதற்குள் தாராபுரம் வந்துவிடவே குடிகாரனும் அந்தப் பெண்ணும் வண்டியிலிருந்து இறக்கிவிடப்பட்டனர். பேருந்தை சுத்தம் செய்து கொடுத்து விட்டுப் போகுமாறு அந்தப் பெண்ணிடம் நடத்துனர் தகராறு செய்து கொண்டிருந்தார். என்னுடைய அசூசையான பரிதாப நிலையைக் கண்டு ஒரு கடையில் தண்ணீர் கொடுத்தார்கள். கிட்டத்தட்ட முக்கால் குளியல் போட்டேன். தொப்பலாக நனைந்தபடியே அடுத்த வண்டி பிடித்து படியில் நின்றுகொண்டே ஈரோடு வந்து சேர்ந்தேன். உடல் சூடும் வெளிக்காற்றும் ஈரத்தைக் காயவைத்திருந்தன.

வீட்டுக் கதவைத் தட்டும்போது இரவு பத்தாகியிருந்தது. தூக்கக் கலக்கத்தில் கதவைத் திறந்த மனைவியிடம் எதுவும் பேசாமல் குளியலறைக்குப் போய் துணிகளைக் கழற்றிப் போட்டுவிட்டு ஒரு குளியல் போட்டேன். நேராக வந்து படுக்கையில் விழுந்தேன்.

சற்றுநேரம் கழித்து அருகில் வந்த மனைவி “பாத்ரூம்ல நீ கழட்டிப் போட்ட டிரஸ்ல  பிராந்தி நாத்தமடிக்குது.... குடிச்சிட்டு வந்தியா?” என்றாள்.