Wednesday, March 11, 2026

'செந்நாய்' - திரைப்பட விமர்சனம்

 

உரையாடலின் போதாமை




சாதியம் ஏற்படுத்தும் துயரத்தின் அதிர்வுகள் இறுதியில் பெண்களின் மீதே குவிகின்றன என்பதை மையப்பொருளாக்கிப் பேசுகிறது இந்தத் திரைப்படம். ஆற்காடு மாவட்ட கிராமம் ஒன்றில் மயானப்பணிகளைச் செய்துவரும் விளிம்புநிலைக் குடும்பத்தின் கணவன் மனைவி இருவருக்கும் நடக்கும் சாதிய ரீதியான அழுத்தங்களுக்கு அந்தப் பெண்ணின் வாழ்வு பலியாவதும் அதே காலத்தில் அதே ஊரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளைஞனைத் திருமணம் செய்து கொண்ட ஒரு பெண் ஆணவப்படுகொலை செய்யப்படுவதுமான இரண்டு சம்பவங்களை இணைத்து, காடு மான்கள் செந்நாய்கள் என்ற வாய்வழிக் கதையின் ஊடாக நேரியலற்ற திரைக்கதையமைப்பு (NON-LINEAR) முறையில் இந்தக் கதை சொல்லப்படுகிறது. 

ஜெய்குமார்  சேதுராமன் சுயாதீனமாக இந்தப் படத்தை முதன்முறையாக எழுதி இயக்கி, தயாரித்தும் இருக்கிறார். இந்தக் கதையில் சாத்தியப்படும் அனைத்து இடங்களிலும் சமகாலச் சாதியப் பிரச்சனைகளை கவனப்படுத்திச் செல்கிறார் சாதியம் மீதான அவரின் விமர்சனமும் சாதி ஒழிந்துவிடவேண்டும் என்ற அவரின் தீவிரமான நோக்கமும் சந்தேகத்துக்கு இடமின்றிப் போற்றப்படவேண்டியதே. மிக வலிமையாகத் தன் வேர்களை இந்திய உளவியலில் ஊன்றி, அரசியல், பொருளாதாரம், கலை, இலக்கியம் பண்பாடு போன்ற சகல இண்டுஇடுக்குகளிலும் நுழைந்து பரவியுள்ளது சாதியம். ஆனால் அதன் கொடும் கிளைகளை ஒரே திரைப்படத்தின் வழி பதிவுசெய்ய முனைந்ததுதான் கதையின் ஓர்மையைச் சிதறடித்து, பார்வையாளரருக்கு உணர்வுபூர்வமான இணைப்பை ஏற்படுத்த முடியாமல் வெறுமனே பிரச்சாரத் தன்மையுடன் இத்திரைப்படம் அமைந்துவிடுகிறது.

ஆர்வமூட்டும் கதைசொல்லும் முறையான நேரியலற்ற திரைக்கதையமைப்புக்கென்று (NON-LINEAR) சில பிரத்யேகமான தேவைகளும் குணாம்சங்களும் உள்ளன. நேரியலற்ற திரைக்கதையின் ஒவ்வொரு பகுதியும் தத்தமது அளவில் தனித்துவமான அனுபவத்தையும் இணைப்பின் போது புதுவிதமான அனுபவத்தையும் தருதல் வேண்டும். கதாபாத்திரங்களின் தனித்துவமான குணாம்சங்களை வெளிப்படுத்தவும் அந்தக் கதாபாத்திரங்களின் செயல்பாடுகளை பிரமிப்புக்கு உள்ளாக்குவதும் சமபலம் பொருந்திய ஆண்டாகனிஸ்ட் புரொட்டாகனிஸ்ட்களின் பார்வை வழியே நிகழ்தகவுச் சாத்தியங்களைப் பன்மைப்படுத்துவதும் காலத்தை வேண்டியபடி கையாள்வதற்கும் இதன் மூலமாக பார்வையாளர்களையும் படைப்பில் பங்குபெறச்செய்வதுமாக அதன் தேவைகள் விரிகின்றன. இவ்வகை நேரியலற்ற திரைக்கதையமைப்பை இந்தக் கதைக்குத் தேர்வு செய்த இயக்குநர், பாத்திரங்களின் தனித்தன்மையை உறுதிசெய்வதிலும் குணாதிசயங்களை வடிவமைப்பதிலும் அகஉணர்வுகளை வெளிப்படுத்துவதிலும் இன்னும் கூடுதல் கவனம் எடுத்திருக்க வேண்டும்.

பிராமணியம் குறித்தான தவறான கண்ணோட்டம், பிராமண சமூக உட்பிரிவுகளின் நடைமுறைகள் பற்றிய போதிய புரிதல் இல்லாமை, சாதி ஒழிப்பில் புரட்சிக்கும் சீர்திருத்தவாதத்துக்கும் இடையில் உள்ள வேறுபாடுகள் மற்றும் அவற்றின் பங்களிப்புகள் பற்றிய அறியாமை ஆகியவை இந்தக் கதையின் கருத்தியல் பின்புலத்துக்கு வலிமை சேர்க்காமல் செய்துவிட்டன. வலிந்து திணிக்கப்பட்ட இந்து முஸ்லீம் கிறித்துவர்கள் பற்றிய சித்தரிப்புகளும், மனநலம் பாதிக்கப்பட்ட அந்த மனிதரின் இரைச்சல் மிகுந்த பாடலும், இயல்புதவறிய செயற்கைத்தனமான இடுகாட்டுப்பகுதிகளும், துாக்கிச் சுமக்கும் பிணத்தின் எடையற்ற தன்மையும் வடிவமற்ற உருவும் நம்பகத்தன்மையைக் குழைத்து இத்திரைப்படத்துடன் நம்மை ஒன்றச் செய்யாமல் துாரத்தள்ளி நிறுத்திவிடுகின்றன.

ஆணவப்படுகொலைக்கு ஆளாகும் பெண் புதைக்கப்டும் போதும் அவள் உடலில் உயிர் இன்னும் இருந்தது என்பதே இந்தக் கதையின் மிக முக்கியமான உணர்வுப்பகுதியாகும். ஆனால் அப்பகுதி கார்டூன் சித்திரமாகக் காட்டப்பட்டு அவள் உயிருடன் புதைக்கப்பட்டாள் என்பதை வசனத்தின் மூலமாக மட்டும் வெளிப்படுத்தியதில் இந்தப்படத்தின் உயிர்ப்பான அடிப்படை சிதைவுக்குள்ளாகிவிட்டது. இந்தப் பகுதி காட்சிவடிவத்தில் திரைமொழியின் மூலமாகச் சொல்லப்பட்டிருக்குமாயின் பார்வையாளர்களின் உணர்வுநிலைகளுடன் மிகத்தீவிரமாக மோதி இப்படைப்பின் சாரத்தை மேலான தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கும் அதே போல் சர்ரியலிசக் கூறுகளை திரைக்கதையின் ஆரம்பம் முதலே வெளிப்படுத்தாமல் இறுதியில் இடுகாட்டில் அண்ணம்  கதறுவதாகக் காட்டி வெளிப்டுத்தியதும் ஒரு தவறான திரைக்கதை அமைப்பேயாகும்.

இந்தப்படத்தின் சிறப்பான சில அம்சங்கள் உள்ளன. பெண்ணை மையப்படுத்திச் சொல்லப்படும் கதை என்பதால் செம்மலர் அண்ணம் தன் மிகையற்ற யதார்த்தமான உடல் மற்றும் முக பாவங்களால் இத்திரைப்படத்தின் அடிநாதத்தை அபாரமாக முன்னெடுத்துச் செல்கிறார். இடுகாட்டில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை மீண்டும் பிரேதப்பரிசோதனைக்காகத் தோண்டியெடுக்கும் போது மருத்துவமனையின் துப்புரவுப்பணியாளர் ஒருவர் அந்தப்பெண்ணின் செயலைக் கண்டிக்கும் விதமாக, “எல்லா இஸ்துக்குனு ஓடறதுக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கனும். இந்தா புடி” என்று சாடியபடியே ஒரு துணியை அண்ணத்திடம் தருவார். அந்தக் காட்சியில் அண்ணம் தன் கண்கள் மட்டுமே தெரியும்படி மூக்கையும் வாயையும் தன் முந்தானையால் மூடிக் கட்டியிருப்பார். பாதிமுகம் மறைக்கப்பட்ட அந்த நிலையில், அந்தத் துணியை அவரிடமிருந்து வாங்கும் வேகத்திலும் அந்த மனிதரை ‘கணப்பொழுதில் மேல்கீழ் விழியசைவின் வழியே பார்க்கும் பார்வையில் பல செய்திகளை வெளிப்படுத்தியிருப்பார் செம்மலர் அண்ணம்.

அதேபோல் இதில் ஒளிப்பதிவாளரின் பங்களிப்பும் குறிப்பிடப்படவேண்டியதே. அண்ணமும் டேவிட்டும் பிணங்களை வண்டியில் வைத்துத் தள்ளிச் செல்லும் நகர்வுகள், பின் தொடரும் நாயின் வண்ணங்களற்ற பார்வைக்கோணம், கணவன் தன் மனைவியின் பிணத்தைத் துாக்கிச் சுமந்து கொண்டு வரும் கானக வழி நடைபயணம், அவர் இடுகாட்டுக்குள் நுழையும் போது பயன்படுத்தப்பட்ட பறவைக்கோணம் போன்ற காட்சிகளின் சிறப்பான சட்டகத் தேர்வுகளில்  ஒளிப்பதிவாளர் இயக்குநரின் கதை சொல்லலுக்குத் துணைநிற்க முயற்சித்திருக்கிறார்.

காடு என்பது பல்லுயிர்களின் வாழ்விடம். அதன் உயிர்சுழற்சிக்கு ஏற்ற வகையில் அனைத்து உயிர்களின் பங்களிப்பும் அவசியம் என்பது பற்றிய கதையாடல் பலராலும் வாய்வழியாகப் பகிரப்படுவது மிகச்சிறப்பான நுட்பம். அண்ணத்துக்கும் டேவிட்டுக்கும் இடையிலான உரையாடல்கள் அனைத்துமே வட்டார மொழியின் அழகியலுடன் யதார்த்தமானவையென்றால், கிராமத்திலிருந்து நகரத்துக்குச் சென்றாலும் சாதி விடாது தொடரும் என்பதை வெளிப்படுத்தும் உரையாடல் கூர்மையானது கூட. அதே போல் அண்ணம் ஓரிடத்தில் ”ஏன்டா வவுத்து நெருப்பவிடவாடா இந்த மசானநெருப்பு ஒனக்கு கந்தலா கெடக்குது, ஒன்னு இந்த பசிக்கு பழகிக்கினு இல்ல இந்த கவுதிக்கு பழகிக்கினு” என்பார்.” விளிம்பின் விளிம்பில் இருப்பவர்களது வாழ்வியலை துலக்கமாக வெளிப்படுத்தும் உரையாடல் அது. மற்றோரு இடத்தில் தன் தாயின் பிணத்தை துமந்து கொண்டுவரும் தந்தையிடம் மகள் கேட்பாள், ” ஏம்பா அந்த சார் உன்ன அட்சிது” என்று. அதற்கு அந்தத் தந்தை, ”அந்த சாருக்கு அப்பாவோட சட்டைய புடிக்கலையாம்மா” என்பார். சாதிய வன்மத்தின் வலிகடத்தும் உரையாடல் அது.

 இயக்குநரின் குறியீட்டுப் பிரயோகம் பல இடங்களில் மிக அழகாகப் பொருந்திப் போகிறது. ஒரு நுழைவாசலின் இரண்டு பக்கத் தடுப்புச் சுவர்கள் இணையாகக் காட்டப்படுகின்றன. அதிலொன்றில் அம்பேத்கர் உருவம் வரையப்பட்டிருக்கும் மற்றொன்றில் லெனின் உருவம் வரையப்பட்டிருக்கும் இரண்டுக்கும் நடுவில் உள்ள வாசலின் மரக்கதவு பூட்டப்பட்டிருக்கும் இரண்டு தத்துவங்களின் ஊடாகவும் துணையுடனும் தான் சாதியம் என்னும் பூட்டு உடைபட்டு சமூகநீதி என்ற வழி திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் இவற்றை இயக்குநர் குறியீடாக வைத்திருக்கக் கூடும். இயக்குநரின் நல்ல நோக்கம் மற்றும் சாதி ஒழிப்பின் மீதான புரிதலின் அடிப்படையில் இந்தக் குறியீடு மிகச் சரியானதும் அழகானதும் கூட. ஆனால் தத்துவார்த்த நடைமுறையில் இது மிகப்பிழையானதும் தவறானதும் ஆகும். சாதியக் கட்டுமானங்களைத் தகர்ப்பதில் கம்யூனிசத்தின் நடைமுறையென்பது அம்பேத்கரிய நம்பிக்கைகளுக்கு நேர் எதிரானது என்பதே தெளிவும் துணிபுமாகும்.

இந்த சுயாதீனத் திரைப்பட முயற்சியில் இயக்குநர் தன் வாழ்க்கை அனுபவத்தின் மூலம் பெற்றுக் கொண்ட பார்வையை சினிமாவின் மூலம் சொல்ல முயற்சித்திருக்கிறார். அதன் வழியே பார்வையாளர்களை ஒரு திறந்த உரையாடலுக்கு அழைக்கிறார். மிக அவசியமான இந்த உரையாடலுக்கான தேவை சமூகத்தில் இருந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால் உரையாடலுக்கு அழைக்கும் திரைமொழியில் இன்னும் தெளிவு வேண்டும்.

*

காலச்சுவடு

நவம்பர் 2021 இதழ்

No comments:

Post a Comment