Friday, December 26, 2014

பிசாசு - சினமா பற்றி...


அதீதக்கற்பனையின் அழகியல்


ஒரு பேயை சினிமாவில் பார்த்து நான் நெகிழ்ந்து கண்ணீர் விட்டது என் வாழ்விலேயே இதுதான் முதன்முறை. படம் துவங்கியதிலிருந்து இறுதிக்காட்சிவரை எந்த ஒரு ஃபிரேமிலிருந்தும் கண்களையோ கருத்தையோ வேறுதிசைக்குத் திருப்ப இயலாதபடி கச்சிதமாகக் கட்டப்பட்ட திரைக்கதை.

இந்தக் கதையை விவரித்துக் கொண்டு செல்ல, உயிரை வருடும் இசையையும் வியக்கவைக்கும் ஒளிப்பதிவையும் மிஷ்கின் துல்லியமாகப் பயன்படுத்தியுள்ளார். பச்சைநிற ஆப்பிள், மஞ்சள் நிறப்புடவையில் முறைக்கும் பாட்டி, இடது கண் தலைமுடியால் மறைக்கப்பட்ட நாயகன் என்று, தான் சொல்ல விரும்பும் கதையின் அடிநாதத்தைக் காட்சிப்படிமங்களாலும் குறியீட்டுச் சட்டகங்களாலும் விரவவிட்டிருக்கிறார். அன்பு, கருணை, நெகிழ்ச்சி, பாசம், நட்பு, தியாகம், மன்னிப்பு, மதித்தல், பெருந்தன்மை போன்ற மனிதத்தின் அத்தனை உயர்வுகளையும் ஒரு பிசாசை மையப்படுத்தி அற்புதமாகக் கலையாக்கியுள்ளார். 

ஒரு நல்ல சினிமாவைக் கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து முயல்பவர் மிஷ்கின். அந்த முயற்சியில் பல தவறுகளையும் அபத்தங்களையும் செய்துகொண்டு வந்தவர். அதிலிருந்து பாடங்கள் கற்றுக் கொண்டு பக்குவம் அடைந்து தான் விரும்பிய சினிமாவை இப்போது கொடுத்துள்ளார். வாழ்த்துகள்.


ஒரு வேண்டுகோள் : 

இந்தப் படத்தை விமர்சனம் செய்கிறேன் பேர்வழி என்று படத்தின் கதையைப் புட்டுப்புட்டு வைக்கும் இணைய நண்பர்களே, விமர்சனம் என்பது மீண்டும் கதையைச் சொல்வதல்ல. பாவம் படைப்பாளிகள். அவர்களின் படைப்புகளைத் துகிலுரியாதீர்கள். பிளீஸ்..!!


ஒரு பிராத்தனை : 

வழக்கம் போல் இந்த மிஷ்கின் படமும் ஏதாவது ஒரு உலக சினிமாவிலிருந்து சுடப்பட்டது என்ற செய்தி வராமல் இருக்கக் கர்த்தரைப் பிராத்திக்கிறேன்..!!

ப்ரியமுடன்
-வீரா



Thursday, August 7, 2014

மீசை - குறும்படம் பற்றி

கலையின் கடமை


நம் இணையத்தின் புண்ணியத்தில் ஏராளமான குறும்படங்கள் பல ரகங்களில் பல குணங்களில் காணக்கிடைக்கின்றன. அப்படிப் பார்க்கும் எல்லா படங்களும் மனதை பாதிப்பதில்லை. அப்படிப் பாதிக்கும் எல்லா படங்களைப் பற்றியும் எழுதத் தோன்றுவதுமில்லை. ஆனால் சில படங்கள் நம்மை பாதிப்பது மட்டுமல்லாமல் அதையாருடனாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலையும் துாண்டுகிறது. அப்படிப்பட்ட ஒரு குறும்படம் தான் ‘மீசை’

பொதுவாகவே ஒரு படைப்பைப் பற்றி எழுதும் போது அதன் மறைபொருளை வெளிப்படுத்தக் கூடாது என்பது ஒரு விதி. நான் முடிந்தவரை அதைக் கடைபிடிப்பவன். இந்தக் குறும்படம் ஒரு பெண் புகைப்பழக்கத்துக்கு ஆட்படுவது பற்றியது என்று ஒற்றை வரியில் சொல்லிவிடலாம். அதில் மறைபொருள் ஏதும் இல்லை. ஆனால் அந்தக் குறும்படம் தன் திரைக்கதையின் வழியே சொல்லும் செய்தியில் நம் கோணல் மனதைக் கொஞ்சம் நிமிர்த்த முயல்கிறது.

திருமணம் முடிந்து பத்து பதினைந்து நாட்கள் ஆன ஒரு இளம் தம்பதிகளின் ஒரு காலைப் பொழுதில் திரைக்கதை துவங்குகிறது. மிடில்கிளாஸ் வகுப்பைச் சார்ந்த அவர்கள் தனிக்குடித்தனம் நடத்துகிறார்கள். கணவனுக்கு முன் எழுந்து அவனுக்குப் பணிவிடைகளைச் செய்யக் கடமைப்பட்ட இளம் மனைவி திரையில் காட்டப்படுகிறாள். சற்றுத் தாமதமாகத் துாக்கம் கலைத்துக் கண்விழிக்கும் கணவன், சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு புகையை ஆழ்ந்து இழுத்துவிட்டு அன்றைய நாளை ஆரம்பிக்கிறான். அன்று திருமண விடுமுறை முடிந்து அந்தக் கணவன் வேலைக்குச் செல்லும் முதல் நாள்.

புதுக்காதலும் புன்னகையுமாக அவனை வழியனுப்பிவிட்டு அவள் வீட்டுக் கதவை உட்புறமாகத் தாழ்பாள் போடுகிறாள் (தாழ்பாள் சரியாகப் போடப்படுவதில்லை). வீட்டை விட்டு வெளியே சென்ற கணவன் மறந்துவிட்ட கார் சாவியை எடுக்க உடனே வீட்டுக்குள் மீண்டும் நுழைகிறான். அப்போது அவனுடைய இளம் மனைவி சிகரெட் புகைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறான்.

ஒரு மிடிள்கிளாஸ் பெண் சிகரெட் புகைப்பதை நம் சமூகம் பொறுத்துக் கொள்ளுமா..? அவள் கணவன் நாம் எதிர்பார்த்ததைப் போலவே பொங்கியெழுகிறான். அவளின் தந்தையும் அண்ணனும் வரவழைக்கப்பட்டு இந்த ஒழுக்கக்கேடு விவாதிக்கப்படுகிறது. அவளின் தந்தை இதை வன்மையாகவும் அண்ணன் கொஞ்சம் மென்மையாகவும் கண்டிக்கிறார்கள். அதற்கு அந்த பெண் என்ன மாதிரியான எதிர்வினையாற்றுகிறாள் என்பதை அறைந்து சொல்லியிருக்கிறது ‘மீசை’ குறும்படம்.

குறும்படம் என்பது அடிப்படையில் ஒரு சினிமாதான். அதுவும் காட்சி ஊடகமே. அதன்படி இதிலும் காட்சிகளாலேயே முடிந்தவரை கதையை நகர்த்தும்படி திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. நல்ல திரைக்கதையில் அதற்குள் நிகழும் சப்தங்களுக்கும் பெரும் பங்குண்டு. இந்தப்படத்திலும் அது நேர்த்தியாகக் கையாளப்பட்டிருக்கிறது. காலை நேரத்துப் பண்பலை வானோலியின் விளம்பரங்களும் பாடல்களும் படத்துக்குப் பின்புலமாக அமைந்து அழகுசேர்க்கின்றன.

படத்தின் உச்சம் என்று குறிப்பிட்டே ஆக வேண்டிய இரண்டு விஷயங்களில் ஒன்று, அந்தப் பெண் முதன் முதலில் புகைப்பதைப் பழகும் ஷாட்களின் அற்புத வடிவாக்கம். புகைப்பழக்கம் ஒருவரை எவ்விதம் முதலில் வசீகரிக்கிறது பின் எப்படிப் பரவசப்படுத்துகிறது என்பதை மிகச்சில ஷாட்களில் நேர்த்தியாகக் காட்டியிருக்கிறார்கள். சிகரெட்டை யாராக இருந்தாலும் முதலில் முகர்ந்துதான் பார்ப்பார்கள். அடுத்து மெல்ல உதட்டில் பொருத்தி பிறகு அதைப் பற்ற வைக்கும் முறையற்ற முயற்சிகள். அதன்பின் முதல் புகையை இழுத்தவுடன் ஒவ்வாமையில் வரும் இருமல் என்று புகைப்பதன் பரிணாமவளர்ச்சியை மிக அழகாகப் பதிவுசெய்திருக்கிறார்கள். ஒவ்வொரு படிநிலைக்கும் அந்தப் பெண் வெவ்வேறு உடையணிந்திருப்பதைக் காட்டுவதன் மூலம் அந்தப் பழக்கம் ஒரே நாளில் அல்லாது சில நாட்களின் தொடர்ச்சி என்பதை மிக நுட்பமாகச் சொல்லியிருக்கிறார்கள். இன்னொன்று, அவள் புகைப்பதைப் பழக்கமாக்கிக் கொண்ட பின் அவளைப் பெண்பார்க்க வந்திருப்பார்கள். இது ஒரே ஷாட்டில் விளக்கப்படும் காட்சி. அவள் கண்ணாடி முன் நின்று ஒப்பனை செய்து கொண்டிருப்பாள். அது ஒரு குளோசப் ஷாட். வாய்ஸ் ஓவரில் ஒரு திருமண மத்தியஸ்தரின் குரல் பேசும். அதை அவள் கவனித்துக் கொண்டே அலங்காரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது போன்ற பாவனையில் காட்சி தொடரும்.

“பையன் ரொம்ப நல்ல பையங்க. MCA படிச்சிருக்காப்ல. ஏகப்பட்ட வரன் வந்திச்சு. ஆனா ஊர் சைடுதான் பெண் எடுக்கணும்னு ஆசைப்பட்டாங்க. அதான் நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தேன். ஒரு சின்ன விஷயம்…... பையன் சிகரெட் குடிப்பாரு. மத்தபடி பையன் ரொம்ப நல்ல பையன்ங்க.” என்பார்.
அதுவரை அவர் பேசுவதை சாதாரணமாகக் கவனித்துக் கொண்டு வந்த அவள் ‘ஒரு சின்ன விஷயம்’ என்றதும் சட்டென்று துணுக்குற்று, ‘பையன் சிகரெட் பிடிப்பாரு’ என்றதும் ஒரு புன்னகை செய்வாள் பாருங்கள். காட்சிப்படுத்துதலின் அழகியல் அற்புதம் அது.

இதில் குறைகள் இல்லாமல் இல்லை. புகை பிடிப்பவர்களின் கையில் சிகரெட் பொருந்தியிருக்கும் விதமும், புகையை வெளியே ஊதும் உதட்டின் முனைப்புமே புகைப்பவர்களின் அனுபவத்தைச் சொல்லிவிடும். அந்த வகையில் இதில் கொஞ்சம் கவனம் எடுத்திருக்க வேண்டும். அதேபோல் எடிட்டிங் சார்ந்த தொடர்ச்சிகளிலும் சிற்சில குறைகள் இருப்பினும் அவையெல்லாம் இந்தப் படம் பேசக்கூடிய விஷயத்தின் நேர்மைக்கு முன் பெரிய விஷயங்களே இல்லை.

கண்டிப்பாகப் படத்தைப் பாருங்கள். இந்தப் படம் இந்தியப் பெண்கள் சிகரெட் குடிப்பதை ஆதரிக்கவோ எதிர்க்கவோ செய்யும் கலாச்சாரப் பிரச்சாரம் அல்ல. புகைப்பதை முன் வைத்து, ஒழுக்கநெறியில் பெண்களைப் பாகுபடுத்திப் பார்ப்பதைச் சுட்டிக் காட்டும் ஒரு கலையின் கடமை.

ப்ரியமுடன்
-வீரா

படத்தின் சுட்டி : http://www.youtube.com/watch?v=LxmMybxkmK0



பிறந்த நாள் வாழ்த்து - எனக்கு...!!

அருமையான எழுத்தாளர் ..எளிமையான தோழர். சீரிய சிந்தனை, சிறப்பான நகைச்சுவை ...இதான் வீராவிடம் நான் உணர்ந்த விஷயங்கள்.. சில சமயங்களில் குருவாக சில சமயங்களில் சிஷ்யராக, ஆரம்ப காலம் முதல் இன்றுவரை அதே மரியாதையுடன் நட்பு பாராட்டும் தோழர் வீராவிற்கும் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்


-செல்லி ஸ்ரீனிவாசன், பெங்களூரு




தேர்ந்த விமர்சகன்.... ஈர்க்கும் எழுத்துநடைக்கு சொந்தக்காரன்....
அன்பை வெளிப்படுத்துவைப்போலவே அவன் விமர்சனமும் இருக்கும்....
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வீரா

-யாழி கிரிதரன்.

.

கலைஞனுக்கு என் அஞ்சலி

பாலுமகேந்திரா – நிற்க விரும்பிய இடம்



‘பாலுமகேந்திராவுக்கு ஒருவனுக்கு ஒருத்தி என்ற நம் திருமண பந்தத்தில் உடன்பாடு கிடையாது. குறிப்பாக ஆண்கள் தங்கள் மனைவிமார்களைத் தாண்டி வேறு பெண்களைத் துணைவியாக்கிக் கொண்டு வாழ்வதை தன் படங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால் பெண் பாத்திரங்களுக்கு அவர் அந்த சுதந்திரத்தைத் தரத்தயாராக இல்லை. தன் தனிப்பட்ட வாழ்வையும் அவர் அவ்வாறே அணுகினார்.’


பாலுமகேந்திராவின் படங்கள் குறித்து ஒரு நண்பர் தன் விமர்சனத்தை இப்படி என்முன் வைத்தார்.. அவருடைய இந்தக் கூற்றை இந்தக் கட்டுரையின் பின் பகுதியில் விவாதிக்கலாம். அதற்கு முன், கடந்த வாரம் தோழர் செல்லிசீனிவாசன் அவர்கள், தான் சார்ந்த பண்பலை வானோலியான www.masala.fm ல் பாலுமகேந்திரா பற்றிய நினைவஞ்சலி நிகழ்ச்சிக்காக அவர் பற்றிய அனுபவங்களை பல நண்பர்களிடம் கேட்டுப் பதிவுசெய்தார். அதில் நானும் பங்கேற்று என் கருத்தைப் பதிவுசெய்தேன். . அதில் நான் பகிர்ந்து கொண்ட ஒரு செய்தியை இப்போது உங்களுக்குச் சொல்கிறேன்.

பண்டொருநாள் இலக்கிய நிகழ்ச்சி ஒன்றுக்காக பாலுமகேந்திரா சேலம் வந்திருந்தார். அந்த நிகழ்ச்சி நிரலில் ‘சந்தியாராகம்’ திரையிடலும் இருந்தது. நம் தமிழ்நாட்டின் இலக்கியக் கூட்டத்துக்கே உரிய மிகச்சிறிய மனிதக் கூட்டம். அதில் நானும் ஒருவனாக அன்று இருந்தேன். நிகழ்ச்சி ஆரம்பமாகும் வரை அந்தக் கூட்டம் பாலுமகேந்திராவைச் சற்றி அமர்ந்து கொண்டு, அறியாமையால் எழும் குழந்தைக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தது. பல நேரங்களில் குழந்தைகளின் கேள்விகள் கூட மிக மதிப்புமிக்கவையாக அமைந்துவிடும் தானே. அதற்கெல்லாம் ஒரு தந்தையின் பெருமிதத்தோடு பதில்களைச் சொல்லிக் கொண்டிருந்தார் பாலுமகேந்திரா.

நிகழ்ச்சி தொடங்கியது. ‘சந்தியாராகம்’ படத்தை நிகழ்ச்சி அமைப்பாளர்கள் திரையில் ஓடவிட்டார்கள். சடாரென்று எழுந்த பாலுமகேந்திரா படத்தை நிறுத்துமாறு கூறிக்கொண்டே ஒளிபரப்புக்கருவிக்கு அருகில் சென்று அதன் ஆப்ரேட்டருடன் விவாதத்தில் ஈடுபட்டார். அப்போதுதான் எல்லோருக்கும் மெல்ல அந்த விஷயம் புரிந்தது. ‘சந்தியாராகம்’ கருப்பு வெள்ளையில் வெளியிடப்பட்ட திரைப்படம். ஒளிபரப்பு இயந்திரத்தில் எற்பட்ட ஏதோ தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அன்று அது வண்ணத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. உடனே திரையிடல் நிறுத்தப்பட்டது. ஆப்ரேட்டருடன் பாலுமகேந்திரா இணைந்து அந்தக் கோளாறை சரிசெய்ய முயல்கிறார்கள். நேரம் ஆகிக்கொண்டே போகிறது. முக்கால் மணி நேரத்திற்கும் மேலாக அந்த இயந்திரத்தின் தொழில்நுட்பத்துடன் போராடுகிறார் பாலுமகேந்திரா. நாங்களெல்லாம் பொறுமை இழந்து போய், ‘அன்று மட்டும் அது வண்ணத்திலேயே ஒளிபரப்பாகி விட்டுப் போகட்டுமே’ என்ற நிலைக்கு வந்துவிட்டோம். பாலுமகேந்திராவின் விடாப்பிடியில் ஒரு வழியாக கோளாறு சரிசெய்யப்பட்டு கருப்பு வெள்ளையில் படம் ஓடத்துவங்குகிறது. அப்போது பாலுமகேந்திராவின் அருகில் இருந்து அவரின் முகத்தைக் காணும் ஒரு அரிய வாய்ப்பு எனக்குக் கிடைக்கிறது. அவர் முகத்தில் எறியிருந்த நிறைவையும் மகிழ்ச்சியையும் பற்றி வர்ணிக்க உண்மையிலேயே வார்த்தைகள் கிடையாது.

படம் முடிவடைந்தவுடன் அதுபற்றிப் பேசிய பாலுமகேந்திரா, ஏன் அது கருப்பு வெள்ளையிலேயே அனுபவிக்க வேண்டிய படம் என்பது பற்றி விளக்கினார். கருப்பு வெள்ளை காட்சிகளுக்கு சில அபரிதமான உணர்வுகளை துல்லியப்படுத்தும் வல்லமை உண்டென்றும், ‘சந்தியாராகம்’ அவ்வகை உணர்வுகளைத் தேக்கிவைத்திருக்கும் திரைக்கதையெனவும், அதற்குத் தக்கவாறே அதற்கு ஒளியமைப்பையும் உடைஅலங்காரத்தையும் தான் நெறிப்படுத்தியிருந்ததைச் சுட்டிக்காண்பித்து அதன் அவசியத்தைப் புரியவைத்தார். 

நாங்கள் பிரமித்துப் போய் மௌனமாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தோம். சிறுமழையின் துாரல்களுக்காகவும் சூரியனின் மெல்லிய கீற்றுக்களுக்காகவும் மணிக்கணக்காகத் தவமிருக்கும் அந்த ஒளிவித்தைக்காரனின் முகம் அந்தக் கணம் பரிபூரணமாக மலர்ந்திருந்ததைக் கண்டோம். அன்று அதை உணர்ந்த அனைவரும் பூண்ணிய ஆத்மாக்களே. இருளையும் ஒளியையும் பக்குவமாகப் பயன்படுத்தி, தான் நிர்ணயித்துக் கொண்ட சட்டகங்களுக்குள் உணர்வுகளை சரிவிகித அளவில் நிரப்பிய அந்தக் கலைஞன் தொடர்பான பண்பலை நிகழ்ச்சியில் நான் பங்குபெற்றதைப் பற்றி நண்பர் ராமமூர்த்தியிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் மேலே குறிப்பிட்ட பாலுமகேந்திரா பற்றிய அந்த ஒற்றைப் பார்வையை ஐயா என்முன் வைத்தார். மேலே சொன்ன கருத்தில் கொஞ்சம் உண்மையிருப்பது போல் தோன்றுவதால் அது பற்றிய ஒரு சிறு புரிதலை நாம் ஏற்படுத்திக் கொள்வது அவசியம் என்று பட்டது.

அதனால் நண்பர் ராமமூர்த்திக்கு நான் சொல்கிறேன் :

பாலுமகேந்திராவின் படங்களை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்குச் சில விஷயங்கள் புரிந்திருக்க வேண்டும். அவர் தன்னுடைய பெரும்பான்மையான படங்களில் ஒரு ஆணுக்கு இரண்டு பெண்கள் மீது ஈர்ப்பு வருவதைப் போன்ற கதைகளையே கையாண்டிருப்பார். அது அவருடைய ஆழ்மனவிருப்பம் என்றுதான் நாம் முடிவுக்கு வரவேண்டியுள்ளது. காரணம், அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவ்வகையான வாழ்க்கை முறையே செயலுக்கு வந்தது. 

ஆனால் அவர் ஒருபோதும் அப்படிப்பட்ட எல்லை மீறல்களை நியாயப்படுத்தியதில்லை என்பதை அவருடைய படங்களை உணர்ந்தவர்களுக்குத் தெரியும். ‘மூன்றாம்பிறை’ தொடங்கி ‘இரட்டைவால்குருவி’, ‘மறுபடியும்’, ‘சதிலீலாவதி’ என்று தன் எல்லா படங்களிலும் மனைவியைத் தவிர பிற பெண்கள் மீது வைக்கும் ஈடுபாடு குறித்த தன் அக உணர்வுகளைப் பிரதிபலித்து வந்திருக்கும் அவர், அதில் அவ்வித மனிதர்களின் மன உலைச்சல்களையும் அவர்கள் அதிலிருந்து மீண்டு வருவது பற்றியுமே தன் கதையாடல்களை நிகழ்த்தினார். தன் படைப்பின் இறுதியில் அவர்களைத் தமிழ்ச் சமூகம் சார்ந்த கருத்தியல்களின் பக்கத்திலேயே கொண்டு வந்து நிறுத்தினார். தான் நின்றுகொண்டிருக்கும் இடத்திலிருந்து கொண்டு, நிற்க வேண்டிய இடம் பற்றியே தன் படைப்பின் வழியாகப் பேசினார். ‘மறுபடியும்’ நிழல்கள் ரவி மற்றும் ‘சதலீலாவதி’ ரமேஷ்அரவிந்த் கதாபாத்திரங்களின் கையாடல்களில் அவற்றை நம்மால் கண்டுகொள்ள முடியும்.

எல்லை மீறல்களில் ஆண்களின் நிலை பற்றிய அவரின் முடிவை ‘மறுபடியும்’ அரவிந்தசாமியின் பாத்திரப்படைப்பு வழியாகத் தீர்க்கமாக நிறுவுகிறார். நிழல்கள்ரவியின் செயல்களால் விரக்தியின் உச்சத்தில் இருப்பார் ரேவதி. மாற்றான் மனைவியான அவரின் மனதுக்குள் ஊடுருவும் அரவிந்த்சாமி, தன் எல்லைகளை எப்படி கண்ணியமாக வரையறுத்துக் கொண்டார் என்ற மானுடத்தின் உச்சத்தை, பாலுமகேந்திரா எவ்விதம் கலையாக்கினார் என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.

ஆண்களுக்கு இருக்கும் எல்லை மீறல் உணர்வுகளை தொடர்ந்து வெளிப்படுத்திய பாலுமகேந்திரா பெண்களின் அவ்வித எண்ணங்களை தவிர்த்தே வந்திருக்கிறார். அதற்குக் காரணம் பெண் பாத்திரங்களுக்கு அவர் அந்தச் சுதந்திரத்தைக் கொடுக்கவில்லை என்பது அர்த்தமல்லை. பெண்களைப் பற்றிய அவருடைய மிக மேலான மதிப்பே அப்படியொரு இடத்தில் அவர்களை வைத்துப் பார்க்க அவரைத் துாண்டவில்லையென்று படுகிறது. ‘மறுபடியும்’ ரேவதியையும் ‘இரட்டைவால் குருவி’ அர்ச்சனாவையும் ‘சதிலீலாவதி’ கல்பனாவையும் ஆண்களின் சலனப்புயலுக்கு ஈடுகொடுத்து நம்முடைய குடும்ப அமைப்பைத் தாங்கிநிற்கும் ஆணிவேர்களாகவே சித்தரித்திருப்பார். மூன்றாம்பிறையின் சில்க்ஸ்மித்தா பாத்திரம் கூடத் தான் எடுக்கப் போகும் நிலைப்பாட்டுக்கு மிக நியாயமான காரணங்கள் கொண்ட பெண்ணாகவே சித்தரிக்கப்பட்டிருக்கும். ஆண்களின் எல்லைமீறல்களுக்குப் பழியாகும் அவரின் பெண்பாத்திரங்கள் கூட அந்த ஆண்களின் வற்புறுத்தலாலும் துாண்டுதல்களாலுமே தங்களை வழிதவற விட்டிருப்பார்கள். இவையெல்லாம் பெண்கள் கூட்டத்தை திரையரங்குக்குள் வரவழைக்கும் ஒரு வியாபாரியின் தந்திரமாக நாம் பார்க்க முடியாது. பாலுமகேந்திரா அப்படியெல்லாம் சமரசம் செய்து கொள்ளும் ஒரு கமர்சியல் வியாபாரியில்லை என்பதை நாம் உறுதியாக நம்பலாம். அப்படியிருந்தால் அவர் இன்னும் பல ‘நீங்கள் கேட்டவை’ களைத் தொடர்ந்து இயக்கியிருப்பார்.

படைப்பாளிகள் இந்த சமூகத்தின் வழிகாட்டிகளல்ல. அவர்கள் சமூகத்தைப் பிரதிபலிப்பவர்கள் மட்டுமே. தன் அந்தராத்மாவை மட்டுமே அவர்கள் படைப்பாக்க முடியும். அவ்வகையில் ஒரு நல்ல படைப்பாளி யாதொரு சமரசமும் செய்து கொள்ளாமல் தன் வாழ்வின் மூலம் பெற்ற அனுபவங்களை, உன்னதமான படைப்பின் வழியே இந்த சமூகத்தின் முன் வைப்பதன் மூலம் அதன் பெருந்திரளோடு ஒரு பொதுப்புள்ளியில் கலந்து, அதன் ஆன்மாவோடு பிரத்யேகமான உரையாடல்களை நிகழ்த்துகிறார். அவ்விதம் நடத்தப்படும் உரையாடல்களில் நம் மனம் விழிப்புக்கொள்வதும் அல்லது மேலும் தன்னை இறுக்கிக் கொள்வதும் நம் அறிவுன் பொறுப்பே ஒழிய, படைப்பாளியின் பொறுப்பல்ல. அவ்வகையில் பாலுமகேந்திரா நம் ஆன்மாவுக்குள் ஊடுருவிய ஒரு அற்புதமான படைப்பாளி. அவனிலிருந்து நாம் எதைக் கண்டடைகிறோம் என்பது நம்முடைய மனத்தின் பக்குவம் சார்ந்ததே.

கை கிரிக்கெட் - ஒரு புதிய விளையாட்டு

ஒரு புதிய விளையாட்டு - கை கிரிக்கெட்..!!!!



'தி இந்து' நாளிதழிலில் தான் எழுதிய கட்டுரையில் எழுத்தாளர் பெருமாள்முருகன் 'கை கிரிக்கெட்' எனும் ஒரு புதிய விளையாட்டைப் பற்றி அறிமுகம் செய்துள்ளார். நாமக்கல் மாவட்டங்களில் பரவலாக மாணவர்களிடையே அறிமுகமாகி வளர்ந்து வரும் இந்த புதிய விளையாட்டு, அவர்களின் படைப்பூக்கத்துக்கும் மூளைத்திறனுக்கும் எவ்வகையில் துணைநிற்கிறது என்பதை அழகாக விளக்கியுள்ளார். செய்தி சிறியதாகத் தெரிந்தாலும் அதற்குள் இருக்கும் விஷயம் பெரியதாகவே படுகிறது. இன்று உலகைக் கலக்கும் எல்லா பெரிய விளையாட்டுக்களும் என்றோ எங்கோ யாரோ ஒரு சிறிய குழுவால் தானே கண்டுபிடிக்கப்பட்டு விளையாடப்பட்டு வளர்ந்து வந்துள்ளன. அந்த வகையில் நம் மண்ணின் புதிய ஒரு விளையாட்டைக் கவனப்படுத்திய பெருமாள்முருகனுக்கு நன்றிகள் பல. 



செ.சுஜாதாவின் 'தேவஸ்வரம்' - சிறுகதை பற்றி...

ஒரு உரிமையான வேண்டுகோள்



இன்று செ.சுஜாதாவின் ‘தேவஸ்வரம்’ என்ற சிறுகதையைப் படித்தேன். அதைப்பற்றிக் கொஞ்சமேனும் எழுதவில்லையென்றால் இன்று இரவு சாப்பிட முடியாது என்பதும் துாங்க முடியாது என்பதும் உறுதியாகிவிட்டது. 


உலகத்தரமான சிறுகதைகள் என்று நம் இலக்கிய ஆசான்கள் வியந்தோதிய பல சிறுகதைகளைப் படித்தவன் என்ற சிறிய தகுதியில் சொல்கிறேன், இதுவரை என் வாசிப்பனுபவத்தில் நான் உணர்ந்தேயிராத ஒரு உச்சம் இந்த ‘தேவஸ்வரம்’ எனும் படைப்பு. 

செ.சுஜாதா ஒரு ஆத்மார்த்தமான கவிஞர் என்பதை நான் அறிவேன். போதுவாகவே கவிஞர்களின் உரைநடையில் கவிதைக்கான கூறுகளே நிரம்பி, உரைநடையின் இயல்பையும் வீரியத்தையும் சற்று சிதைத்து அந்தப் படைப்பை ஒரு இரண்டும் கெட்டான் நிலையில் நிறுத்திவிடும். ஆனால் செ.சுஜாதாவின் கவிதை மனம் உரைநடையில் செம்மையாகப் பயணித்திருக்கிறது. 

ஒரு வனத்தைத் தன் இருப்பிடமாகக் கொண்டு வாழ்ந்த, இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய ஏதொ ஒரு வனதேவதை, தனக்குள் இடையறாது மிகுந்து கொண்டேயிருக்கும் தன் ரசனையான காதலையும், காமத்தையும் இதற்கு மேல் தேக்கிவைத்துக் கொள்ள முடியாத அழுத்தத்தில், அதை வெளிக்கொண்டுவர சுஜாதாவின் கவிஅடர்த்தி மிக்க எழுத்தை ஊடகமாகப் பயன்படுத்தியிருக்கும் என்றே உறுதிபட நம்புகிறேன். காரணம், இந்தப் படைப்பைச் செழுமைப்படுத்தக் கூடிய சாத்தியம் ஒரு கவிதை மனத்துக்கு மட்டுமே உண்டு என்பதை ‘அது’ உணர்ந்தே இப்படி ஒரு தேர்வைச் செய்திருக்கும் என்பது என் அனுமானம். அப்படி ஒரு தேர்ந்தெடுப்புக்கு ஆட்படவேண்டுமெனில் செ.சுஜாதா எவ்வளவு உயர்தரமான கலை ஆளுமையாக இருக்கவேண்டும் என்று எண்ணிப்பாருங்கள். 

உயிர்த்துகளின் ஒவ்வொரு நடுமையமும் வனதேவதையின் ஆன்மாவுக்கு இசைவாக இருந்தால் ஒழிய வனத்தின் இயல்பையும் அங்கு நிகழும் இரு உயிர்களின் கலப்பையும் இவ்வளவு துள்ளலாக எழுத்தில் வடித்துவிட முடியாது. 

வரிக்குவரி நம்மை ஒரு மோகனமான நிலைக்குக் கொண்டு சென்றுவிடும் இந்தக் கொண்டாட்டமான படைப்புக்கு நிச்சயம் நாம் மரியாதை செய்ய வேண்டும். உங்கள் உயிரை ஒரு தென்றலின் மென்மையோடு வருடிச்செல்லும் இதை எவ்வளவு வேலை, எவ்வளவு சிரமம் இருந்தாலும் சூழ்நிலையை அமைதியாக்கிக் கொண்டு ஒரு முறையெனும் வாசித்து உள்வாங்கிவிடுங்கள். அது உங்கள் உயிரையும் மனதையும் நிச்சயம் மேன்மையான கதிக்குத் திருப்பிவிடும் வல்லமை படைத்தது.

அதன் சுட்டி : http://malaigal.com/?p=4243



பாலுமகேந்திரா பற்றி ஒரு ரேடியோ நிகழ்ச்சியில் நானும்....

MASALA FM ல் தோழர் செல்லிஸ்ரீநிவாசனுடன் ஒரு நிகழ்ச்சியில்



நிகழ்ச்சியின் ஒலி வடிவச் சுட்டி:

Wednesday, February 26, 2014

கவிஞர் மகுடேஸ்வரனின் 'தன்வெறியாடல்' நுால் பற்றி...


பிப்ரவரி 22, 2014 அன்று ஈரோடு வாசிப்பு இயக்கம் நடத்திய 'பனுவல் போற்றுதும்' நிகழ்ச்சியில் கவிஞர் மகுடேஸ்வரன் எழுதிய ‘தன்வெறியாடல்’ நுால் பற்றிய என் உரை...


கவிஞர் மகுடேஸ்வரனை அவரின் கவிதைகள் மூலமாக நம்மில் பலர் அறிந்திருப்போம். ‘தன்வெறியாடல்’ புத்தகத்தை படிப்பதற்காக என்னிடம் கொண்டு சேர்த்தபோது முதலில் இதுகூட ஒரு ‘கவிதைத் தொகுப்பு’ என்றுதான் நினைத்தேன். ஒரு நாள் இரவு புத்தகத்தைப் புரட்ட ஆரம்பித்தேன். முதல் அத்தயாயத்திலேயே தான் ஒரு பிசாசை நேரில் சந்தித்ததாகச் சொல்லி ஒரு சம்பவத்தை விவரித்திருந்தார். அதைப் படித்தவுடன் எனக்கு ஒருவித ஒவ்வாமை ஏற்பட்டது. காரணம் உடல்விட்ட உயிர்களின் பிரசன்னங்களில் எனக்கு வேறு விதமான நம்பிக்கைகள் இருக்கின்றன. அதனால் புத்தகத்தைச் சட்டென்று மூடிவைத்து விட்டேன். 

படுக்கையில் என் அருகிலேயே புத்தகம் கிடந்தது. சற்று நேரம் கழித்து எதேச்சையாகப் புத்தகத்தின் பின் அட்டை மீது என் கவனம் குவிய அதில் எழுதப்பட்டிருந்த வாசகம் என்னைத் துணுக்குறச் செய்தது.

’மழை பொழிந்து ஓய்ந்தபின்,
இலைநுனியில் உதிரத் துடிக்கும்
ஒரு நீர்த்துளி போல்,
சொல்வதற்கும் ஏதோவொன்று
எஞ்சுகிறது.’

- என்ற அற்புதமான அந்த வரிகள் என்னைப் புத்தகத்துக்குள் மீண்டும் இழுத்துச் சென்றன. ஒரு பாறைக்கல் மண்டபம், அதைச் சுற்றிய பச்சைப் புல்வெளி, அருகே ஒரு பசுமையான மரம் கொண்ட ஓர் இடத்தை அட்டைப்படமாக்கி, அதனுள் நுாற்று இருபத்தெட்டு பக்கங்களில் நம்மிடம் தன் அனுபவங்கைளைப் பகிர்ந்து கொள்ள முன் அட்டையின் ஓரத்தில் முகம் மலர்ந்து சிரித்துக் கொண்டிருந்தார் கவிஞர் மகுடேஸ்வரன்.


நாள் ஒன்றுக்கு முப்பது அத்தியாயங்கள் வீதம் நான்கு நாட்களில் படித்துவிட வேண்டும் என்ற முன்தீர்மானத்துடன் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் புத்தகத்தின் விஷய சாமர்த்தியம் என்னை ஒரே மூச்சில் வாசிக்கக் கோரியது. நுாற்றாறு அத்தியாயங்களையும் படிக்க படிக்கத் தெரிந்து போயிற்று ‘இந்தப் புத்தகம் பற்றிய அறிமுக உரை என் தலையில் ஏற்றப்பட்ட பனங்காய்’ என்று. 

ஒரு புத்தகத்தை அறிமுகம் செய்யும் நோக்கம், அதை எல்லோரையும் படிக்கத் துாண்டுவதே. இன்றைக்கு இணையம் நமக்குக் கொடுத்திருக்கக்கூடிய வாசிப்பு சாத்தியங்களாலும், நெருக்கடி மிகுந்த வாழ்க்கையின் நேரப் பற்றாக்குறையாலும், ஒரு புத்தகத்தைப் படித்துத்தான் ஆக வேண்டுமா ? என்ற கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது. அதன் அடிப்படையில் இந்தப் புத்தகத்தின் அவசியம் பற்றி நான் உணர்ந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தவுடன் அவர் எழுத்தில் மெலிதான தற்புகழ்ச்சி வாசம் அடிக்கத் தொடங்கியது. தான், தனது என்ற சுயபதங்கள் கொண்ட அவருடைய நடை அவரைப்பற்றிய ஒரு எதிர்மறை எண்ணத்தையே முதலில் எனக்குத் தோற்றுவித்தது. பக்கங்கள் புரளப்புரள அது வெறும் தற்புகழ்ச்சியல்ல, 

மன்னுடை மன்றத்து ஓலை தூக்கினும், 
தன்னை மருதலை பழித்தகாலையும்,
மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதிலும், 
தம்மைத்தாம் புகழ்தலும் தகும் புலவோர்க்கே

- என்னும் நன்னூல் நெறியின்படி ஒரு கவிஞன் தன் இருப்பை உறுதிசெய்யும் கட்டாயத்தின் வெளிப்பாடு என்பது மெல்லப் புரிந்ததெனக்கு.

இந்தப் புத்தகம் கட்டுரைகள் மற்றும் குறும்பத்திகள் கொண்ட தொகுப்பு. பத்தி எழுத்துகள் பொதுவாகவே மையநோக்கு அற்றவை. வரையறுக்கப்பட்ட அனுபவங்களை வழங்குவதற்குப் பதிலாக குறுக்கும் நெடுக்குமான இயக்கத்தில் நம் வாசிப்பு அனுபத்தைப் பரவலாக்க வல்லவை. அந்த வகையில் இந்தப் புத்தகம் மிக சுவாரஸ்யமான விஷயங்களை அலசுகிறது. வாணவேடிக்கையின் பட்டாசுச் சிதறலைப் போல் திசைகள் அற்றுத் தெறித்து நம் சித்தனைத்தளத்தில் ஒரு பரவசத்தை நிகழ்த்துகிறது.

இதில் அலசப்படும் விஷயங்களை முக்கியத்துவத்தின் அடிப்படையில் தொகுதி பிரித்தால் முதலில் வருவது தமிழ் மொழியும் தமிழ் சமூகம் சார்ந்த அவருடைய கூற்றுகளும்தாம். சொல்அறிமுகம், சொல் உருவாக்கம், வட்டார வழக்குகள், இலக்கணக் குறிப்புகள் மற்றும் மொழியின் சிறப்புகள் பற்றி ஒரு நண்பனுக்கே உரித்தான மனநெருக்கத்துடன் வாசகனிடம் உரையாடுகிறார்.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு தமிழ்ச் சொற்களுக்கான பொருள் மாறுபாடுகளை அதன் இடப்பயன்பாட்டு அடிப்படையிலும் வார்த்தைகளுக்குள் இருக்கும் நுட்பமான வேறுபாடுகளின் அடிப்படையிலும் எளிமையாக விளக்குகிறார்.

'மொழியறிவு சமான்ய மக்களுக்கு எட்டாக்கனியாக இருக்க வேண்டியதில்லை' என்று கூறும் இவர் அதற்கான சில செயல்திட்டங்களையும் முன்வைக்கிறார். புதிய சொற்களை உருவாக்குதல், மறைந்திருப்பதைக் கண்டடைதல், தொடர்ந்து உபயோகிப்பதன் மூலம், அவற்றைப் பேணிப்பாதுகாத்தல் போன்றவற்றை மொழிச் செயல்பாட்டில் மிக முக்கியமான ஒன்றெனக் கருதுகிறார். மொழியின் வளமையில் வட்டார வழக்குகளின் பங்களிப்பை உறுதிசெய்வதன் மூலம் நம் பகுதியில் உபயோகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் வார்த்தைகளின் வேர்களைத் தேடிச் செல்லுமாறு நம்மைத் துாண்டுகிறார். 

அதே நேரம் இலக்கண அறிவில் நமக்கிருக்கும் போதாமையையும் நாசூக்காக உணர்த்துகிறார். தாய்மொழியின் இலக்கணம்கூட அறியாமல் இருக்கிறோமே என்ற குற்ற உணர்வு சிறிதும் அற்ற நமக்கு, மிக இலகுவான இலக்கணக் குறிப்புகள் மூலம் கொஞ்சம் சொரணையேற்ற முற்படுகிறார். இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகும் நமக்குத் தமிழ் இலக்கணத்தின் மீது நாட்டம் ஏற்படாமல் இருக்குமேயானால் தமிழைக் கொல்லச் சதிசெய்தவர்களின் வரிசையில் காலம் நம்மைக் கட்டாயம் நிறுத்தும்.

அதே போல் வார்த்தைகளின் பயன்பாட்டை மிக விரிவான அறிதல் முறைக்கு உட்படுத்துகிறார். ஒரு உதாரணம் பாருங்கள். ‘விடுதலை’ என்ற சொல் பற்றிய அவரின் விவாதத்தில், விடு + தலை என்பதில், ‘விடு’ என்பது - நீங்குதல், நீக்குதல், ஒழித்தல் என்று பொருள்படக்கூடிய ஒரு வினைச் சொல். இதில் ஒற்றல் ‘ல’கரம் கொண்ட ‘தலை’ என்னும் வார்த்தைக்கு - சிரம், முதல், சிறந்தது, வானம், உயர்ந்தோன், தலைவன், உச்சி, நுனி, முடிவு, எனப் பொருள்கள் உள்ளன. இந்தத் ‘தலை’க்கு முன் ‘விடு’ என்னும் வினையைச் சேர்த்து விடுதலை என்றால் வினைத்தொகையாகி, ‘தலைவனை நீக்கு’ என்ற பொருள்தானே சற்று அருகண்மையில் வரும் என்கிறார். உண்மையில் இந்தச் சொல் உரிய அழகோடு துல்லியமான பொருள்கூட வேண்டுமானால் வருடல் ‘ள’கரம் சேர்க்கப்பட்டு ‘விடுதளை’ என்றே பயன்படுத்தப்பட வேண்டும் என்று நிறுவுகிறார். வருடல் ‘ள’கரம் சேர்க்கப்பட்ட ‘தளை’ என்பதற்கு மட்டுமே, விலங்கு, கட்டு, பிணைப்பு என்ற பொருள்கள் உண்டு என்று கூறுவதன் மூலமாக ஒரு விவாதத்தைத் துாண்டுகிறார்.

சமீபத்தில் எழுத்தாளர் பெருமாள்முருகனிடம் பேசிக்கொண்டிருந்த போது இதுபற்றிக் கேட்டேன். அவர் சொன்னார், ”வேண்டுதல்“ என்பதுடன் ‘ஐ’ விகுதி கூடி எப்படி வழக்குச் சொல்லில் “வேண்டுதலை” ஆனதோ அதே போன்று “விடுதல்” என்பதுடன் ‘ஐ’ விகுதி கூடி “விடுதலை“ ஆகியிருக்கக் கூடும், என்ற தனது கருத்தை வெளிப்படுத்தினார். 

எப்படியிருந்தாலும் ‘விடுதலை’ என்பது நம் மகாகவியே பயன்படுத்திய ஒரு வார்த்தை. அதை விவாதப் பொருளாக்கி பொதுவெளியில் பதிவு செய்ய எவ்வளவு தெளிவு வேண்டும் என்று நினைத்துப் பாருங்கள். மொழி பற்றிய முழு பிரக்ஞை உள்ளோர்க்கே அந்தத் தெளிவு வரும் அப்படிப்பட்ட தெளிவுக்குச் சொந்தக்காரர் நம் மகுடேஸ்வரன்.

நான் மேற்குறிப்பிட்ட விஷயங்களின் அடிப்படையில் ‘தன்வெறியாடல்’ என்ற இந்த நுால் தமிழ் மொழி மற்றும் அதன் இலக்கணங்கள் பற்றியது மட்டுமே என்ற முடிவுக்கு நீங்கள் வந்தால் ஏமாந்து போவீர்கள்.

மொழியின் நுட்பத்தை எந்த அளவுக்கு உள்வாங்குகிறாரோ அதே அளவு தன்னைச் சுற்றிலும் இயங்கும் உலகத்தையும் உள்வாங்குகிறார். இந்த நுாலில் நமக்குச் சில மனிர்களைப் பற்றிய சித்திரத்தைக் காட்டுகிறார். நாம் அன்றாடம் சந்திக்கும் எளிய மனிதர்கள்தாம் அவர்கள். நாம் பார்த்துவிட்டுப் பரிதாபப்பட்டோ அல்லது எள்ளி நகையாடிவிட்டோ நகர்ந்து சென்றுவிடும் அவர்கள்மீது மகுடேஸ்வரனின் கவனிப்பு வேறுவிதமாக விழுகிறது. மனிதர்களை அவர்களுடைய சிந்தனையின் அடிப்படையில் பகுத்துப்பார்த்து துயரங்களுக்குள் உழன்று கொண்டிருக்கும் அவர்களின் மனநிலையில் நிகழும் அபூர்வமான ஆன்ம உற்சாகத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறார். 

அதே போல், சமூகத்தைப் பற்றிய மகுடேஸ்வரனின் பார்வையும் மிக மதிக்கத் தக்கது. வெற்றியாளர்களைவிட அவர் கரிசனம் வெற்றியைத் தவற விட்டவர்களின் மீதே அதிகம் விழுகிறது. தேர்வுகளில் முதல் மதிப்பெண் எடுக்கும் முன்மாதிரிகளை விட, தோற்றுப் போகிறவர்களே இந்த உலகை ஆக்குவதிலும் அழிப்பதிலும் பாரிய பங்குகொள்கிறார்கள் என்று நம்புகிறார். அவ்வாறே நம்மையும் நம்பச் செய்கிறார்.

பிழைப்பின் பொருட்டும் வாழ்க்கை அமைப்பின் பொருட்டும் தன் படைப்புணர்வை ஆழப்புதைத்தவர்கள் நம்மில் எத்தனையோ பேர். கவிஞனாக எழுத்தாளனாக பேச்சாளனாக ஓவியனாக இசைக்கலைஞனாக பாடகனாக இன்னும் எத்தனையோ நுண்கலைகளைச் சாத்தியப் படுத்திவிடும் வெறியோடு நாம் நம் இளமையில் முனைந்திருப்போம். ஆனால் கருணையே இல்லாமல் நம் ஆசைகளைக் கசக்கிப் போட்ட காலம், நிர்பந்திக்கப்பட்ட வாழ்க்கையை நம்மீது தினித்த போது ஏற்பட்ட அந்த ரணத்தின் வடுக்கள்மீது மகுடேஸ்வரனின் விரல்கள் மெல்ல வருடுகின்றன. 

இந்த நுாலின் வாசிப்பை சுவாரஸ்யப்படுத்தும் வகையில் சில அபூர்வமான உணர்வுத் தருணங்களை நம்முன் விரியவிடுகிறார். அதில் ஒன்று ‘பௌலோ கொய்லோ’வுடைய இரசவாதி நுாலில் இடம் பெற்ற ஒரு கூற்று. 

அந்த வாசகத்தைப் படித்துப் பார்த்த கணத்திலேயே நான் பிரமிப்பில் ஆழ்ந்து போனேன். காரணம், அதனூடாகப் பல்வேறு வாழ்வியல் விஷயங்கள் வந்து, தானாகப் பொருந்திக் கொள்வதை உணரமுடிந்தது. இன்னும் சொல்லப் போனால், வாழ்வின் சகல விஷயங்களையும் அந்தக் கூற்றுடன் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம் போல் தோற்றியது. அந்த வாசகம் இதுதான் :

வாழ்வில் ஒரே ஒருமுறை மட்டுமே வந்தது, இனி எப்போதும் வராமலே போகலாம். ஆனால், வாழ்வில் இரண்டு முறை வந்துவிட்டது என்றால், அது இனி அடிக்கடி வரும் ! 

இன்னும் இந்தப் புத்தகத்தில் மகுடேஸ்வரன் ஏராளமான செய்திகளைத் தொட்டுச் செல்கிறார். பயணஅனுபவங்கள், மதிப்புரைகள், கவிதை மொழிபெயர்ப்பு, காதல் திருமணம், தந்தைக்கும் மகளுக்குமான உறவு, இணையத்தின் இலக்கியப் பயன்பாடு, சமூகவலைத்தளம் பற்றிய மதிப்பீடு என்று நீண்டு கொண்டே செல்லும் இவருடைய உரையாடலின் மிக முக்கியமான உள்நாதம் இவருடைய பகடி.

உடல்மொழியாலும் வாய்வார்த்கைகளாலும் பிறரைச் சிரிக்க வைக்க முடிவது ஒருவகைத் திறமைதான். ஆனால் எழுத்தின் மூலமாக வாசகரை வாய்விட்டுச் சிரிக்க வைக்க எவ்வகைத் திறமை வேண்டும் என்று எழுதி முயன்றவர்களுக்கே தெரியும். பகடி கைகூடப்பட்ட எழுத்துக்குச் சொந்தக்காரர்கள் பாக்யவான்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் வாய்விட்டுச் சிரித்துப் படித்த புத்தகம் இது. நம் கவிஞரின் அப்பாவுக்குக் கோபம் வந்தால் அவர் எப்படித் தன் மனைவியை அதாவது நம் கவிஞரின் அம்மாவைத் திட்டுவார் என்று ஒரு இடத்தில் எழுதுகிறார். வெடித்துச் சிரித்துவிட்டேன் அதைப் படித்தவுடன்.

விஷயங்களின் தன்மைக்கு ஏற்ப மொழியை அடர்த்தியாக்கியும் நெகிழ்த்தியும் அவர் எழுதிச் செல்லும் சிலாக்கியமான நடை இந்தப் புத்தகத்தின் மிகப் பெரிய பலம். எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் தத்துவத் தேடல்களோ நிறுவல் முறைகளோ இல்லாமல் ஒரு கருத்தை வெறுமனே முன் வைத்து அதன் இறுதியில் ஒரு கேள்வியைப் பொருத்தி அதன் மூலம் வாசகனை பதில்களைத் தேடி அலையும் விதமாகச் செய்யும் ஒரு எழுத்துமுறை இவருடையது. அந்த அலைதலில் நம் மனம் பல்வேறு விஷயங்களை சுவீகரித்துக் கொள்கிறது.

எழுதுபவர்கள் பொதுவாக இரண்டு வகை. 

ஒன்று, தங்களை முன்னிறுத்தி எழுதுபவர்கள். அவர்களின் எழுத்தில் கலைத்தன்மையும் பொது நன்மைகளும் பொதிந்திருப்பினும் அவற்றில் தங்கள் புலமைத் துருத்தல்களையே முன்னிறுத்தியிருப்பார்கள். வரிக்கு வரி தங்களைப் பற்றிய வியப்புகளை வாசகன் கண்டடையும் விதமாகத் தங்கள் எழுத்துகளை மிக நுட்பமாக வடிவமைப்பார்கள். 

இரண்டாவது வகை, தங்கள் திறனை உணர்ந்து அதை இந்தச் சமூகம் சார்ந்த பயன்பாட்டுக்குக் கொண்டுவருபவர்கள். போலியான பாவனைகளும் அனாவசியமான அடக்கங்களுமற்றுத் தான் வாழும் இந்த சமூகத்தின் எல்லா அலகுகளிலும் தனக்கும் பங்குள்ளது என்னும் கடமையுணர்வுடன் நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் உடைய சமரசமற்ற தன் எழுத்துத் திறத்தால் அச்சமற்றுத் தம் கருத்தை உரக்கச் சொல்பவர்கள்.

நம் மகாகவி பாரதி இதில் இரண்டாவது வகை.

நம்புங்கள், 
கவிஞர் மகுடேஸ்வரனும் அதே வகை. 

ப்ரியமுடன்
-வீரா