Saturday, December 7, 2013

ஜெயமோகனின் 'காடு' - நாவல் பற்றி...

 காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின்
முதைச்சுவர் கலித்த முற்றா இளம்புல்
மூதாதை வந்தாங்கு
விருந்தே காமம் பெருந்தோளாயே

-மிளைப் பெருங்கந்தன்
குறுந்தொகை 204
திணை : குறிஞ்சி
 

'காடு' நாவல் படித்து முடித்தேன். ‘முடித்தேன்’ என்பது கூட தவறான சொல் பிரயோகம். ‘காடு’ வாசிப்பை என்னளவில் இன்னும் முடியாத ஒரு தொடர்ச்சியாகவே கருதுகிறேன். சில படைப்புகள் என்னை இவ்வகை இடைநிலைத் தன்மையில் நிறுத்திவிடுகிறது. அதில் ‘காடு’ம் ஒன்று.
 
வாசிப்பின் போது மனஓர்மை தவறுவதோ, படைப்பில் நிகழும் சாத்தியங்களுக்கு எதிராக ஒவ்வாமை நிகழ்வதோ அல்லது வாழ்க்கை பற்றிய இதுவரையான முன்முடிவுகளோ படைப்பின் அனுபவத்தை முழுமையாக எனக்குள் இறங்க விடாமல் செய்து விடுகின்றன. எனக்கு எது நேர்ந்ததோ தெரியவில்லை. ‘காடு’ வாசிப்பு எனக்கு ஒரு வகையான மாயஉணர்வைத் தந்துவிட்டுச் சற்றுத் தள்ளியே நின்று என்னைப் பார்த்துச் சிரிக்கிறது.
 
ஆணியில் அறையப்பட்ட நீலியைப் போன்றே இந்த நாவலின் வாசிப்பனுபவமும் என் மனதுக்குள் பெருவியப்பாய் அறையப்பட்டுவிட்டது. நானும் அந்தக் கிரிதரனைப் போலவே ஒரு விடுதலைத் திறப்பை நிகழ்த்த ஏங்கித் தவிக்கிறேன் என்றே படுகிறது.
 
கிரிதரன் மனதில் நீலி அமானுஷ்ய வனதேவதையாகவும் துால வடிவக் காட்டுப்பெண்ணாகவும் முயங்கிச் செயல்படும் நிலையை எழுத்தில் வடித்துள்ள லாவகம் இதுவரை என் வாசிப்பனுபவத்தில் நான் காணாதது. இரண்டு துண்டுகளான காட்சிப் படிமங்களை ஒன்றாக இணைக்கும் மாயவிளையாட்டை வாசகன் உணராத வண்ணம் எழுத்தில் நிகழ்த்துவதென்பது ஒரு படைப்பிலக்கிய அற்புதம்.
 
‘காடு’ நெடுகிலும் மனிதர்கள் வந்துலவுகிறார்கள். காமம் அவர்களுடைய உடல் தேவையாக, ஏக்கமாக, ஏகாந்தமாக, ரசனையாக, மனநோயாக மற்றும் காதலாக ஒரு பின்தொடரும் நிழலாய் வந்துகொண்டேயிருக்கிறது. காமம் தொடருவதாக மட்டுமல்லாமல் முடிவின்றி தொடரப்படுவதாகவும் இருக்கிறது.
 
மனிதக்காமத்திற்கு ஈடுகொடுத்தோ மறுதலித்தோ நிற்கும் குறியீடுகளாக நாவல் நெடுகிலும் நானாவிதக் காட்டுவிலங்குகளும் பயணிக்கின்றன. காமத்தின் துாதுவர்களாக மலைச்சிகரங்களும் நீரோடைகளும் மரங்களும் செடிகளும் பூக்களும் மட்டுமல்லாது சமயத்தில் மூண்டு நிற்கும் கருமேகங்களும் ஆர்ப்பரித்துக்கொட்டும் மழையும் கூடச் செயல்புரிகின்றன. சங்கப்பாடல்களும் பேரிலக்கியங்களும் மறைநுால்களும் காமத்தின் ஆன்மீக வேர்களைத்தேடிச் சென்று நீர் சொரிகின்றன.
 
அறைக்கு வெளியே அலைபாய்ந்தபடி படபடக்க உலவிக் கொண்டிருக்கும் நீலியின் நிலையிலேயே நானும் இருக்கிறேன் காட்டைச் சென்றடைய.
காட்டை முழுமையாக உள்வாங்கிவிட்டதாய் எவர் கருதினாலும் அது அகங்காரம் அழியாததற்கான அடையாளமே. ‘காடு’ என்னுடைய அகங்காரத்தை அடையாளம் காட்டியிருக்கிறது. மீண்டும் மறுவாசிப்பிற்கான ஒரு அழைப்பாக அதை எடுத்துக்கொள்கிறேன்.
------
 

இந்தக் பதிவு இடம் பெற்ற ஜெயமோகனின் வலைப்பூ சுட்டி : http://www.jeyamohan.in/?p=38982


புத்தகம் : காடு
ஆசிரியர் : ஜெயமோகன்
வெளியீடு : தமிழினி பதிப்பகம்.



நட்பால் மீண்ட நட்பு...


 
இன்று ஈரோட்டு நண்பர் முகமது இப்ராஹீம் ஜெய்லானியை முதன்முதலாகச் சந்தித்தேன். சந்திப்பு என்னமோ சாதாரணமானதுதான். ஆனால் சில சாதாரணச் சந்திப்புகள் முக்கியமான சந்திப்பாக மாறிவிடுகின்றன. எதிர்பாராத சந்தோஷங்களுக்குக் காரணமாகிவிடுகின்றன. இப்ராஹீமை அவர் அலுவலகத்தில் சந்திப்பதாக ஏற்பாடு. முகவரி கேட்டுப் போய் நின்றேன். இன்முகத்துடன் வரவேற்றார்.. என்ன பேசுவது என்று இருவருக்குமே தெரியாமல் சிறிது தடுமாற்றம். குடும்பம், குழந்தைகள், ஜீவனமார்க்கம் என்பது பேன்ற வழமையான விசாரணைகளும் எளிமையான பேச்சுகளுமாகச் சந்திப்பு தொடந்தது. ஒரு விஷயத்தை உணர்ந்தேன். கனிவு என்பது இப்ராஹீம் பாய்க்கு உடல் பொருள் ஆவி யாவற்றிலும் நிறைந்திருந்தது. இனம் புரியாத ஒரு நிறைவு அவரிடம் அமர்ந்திருந்த போது ஏற்பட்டது. ஏதோ ஒரு சந்தர்பத்தில் நான் என் கல்லுாரித் தோழன் அபுதாகீர் பற்றிக் கேட்க, அவரை நீங்கள் இப்போதே பார்க்கலாம் என்றார்.
இருபது வருடமாக பார்க்காமல் விடுபட்ட நட்பு ‘அபுதாகீர்’. கல்லுாரிக்காலம் எல்லோருக்கும் கானாக்காலம். அதில் அபுதாகீர் மறக்க முடியா தோழன். மிக மிக மெலிந்த உடல். மாநிறம். அடக்கமான கூர்ந்த முகம். தீர்க்கமான வெள்ளைவெளேர் விழிகள். பாகுபாடு பார்க்காமல் எல்லோருக்கும் பொதுவாக வழங்கும் புன்னகை. துாய வெள்ளைத் தொப்பி. தாடைக்குக் கீழ்மட்டும் நீண்டு வளர்ந்த குறுந்தாடி என்று இஸ்லாத்தின் சகல அடையாளங்களும் கொண்டு அன்பே வடிவமாய் ஒரு வெள்ளைப்பூ தென்றல் காற்றில் நகர்ந்து வருவது போல் அபுதாகீர் மெல்ல நடந்து வரும் காட்சி உடனே மனதில் விரிந்தது.
 
இப்ராஹீம் பாய் அலைபேசியில் அபுதாகீரை அழைத்து,”உங்களைப் பார்க்க ஒருவர் வந்திருக்கிறார்“ என்று கூற, சற்று நேரத்தில் எங்கள் சந்திப்பு நிகழ்ந்தது. அபுவை நான் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏதும் இல்லை. அதே கண்கள், அதே புன்னகை, ஒரு கிராம் கூட அதிகமாகாத அதே மெல்லிய உடல், தாடி மட்டும் சற்றே நிறம் மாறியிருந்தது.
என்னை அபுவுக்குத் தெரியவில்லை. சில விளையாட்டுகளுக்குப் பின் என்னைக் கண்டுபிடித்த அபு மகிழ்ச்சியைக் கண்களிலேயே காட்டிய படி மெல்லப் புன்னகைத்து என் கைகளைப் பற்றி, ”எப்படியிருக்கீங்க“ என்ற போது நிறைய நினைவுகள் எனக்குள் மீண்டது. இருபது வருடங்கள் கழித்து ஒரு நல்ல நண்பனை எனக்குக் காட்டக் காரணமான முகமது இப்ராஹீம் ஜெய்லானிக்கு அல்லாஹ் அருள்புரிவாராக.
 
 

தினேஷ் பழனிசாமி - வளர வாழ்த்துகள்


தினேஷ் பழனிசாமி, நம் பலராலும் அறிந்திந்திருக்கும்  நண்பன். எனக்கு ஈரோட்டில் ஒரு கூட்டத்தில் வைத்து அறிமுகம் ஆனவர். அவர் முகம் சற்று பரிச்சயம் ஆகும் முன் மீண்டும் இரண்டாவது முறை அவரைச் சந்திந்த நிகழ்வு சற்று சுவாரஸ்யமான நினைவு.
 
ஒரு நாள் காங்கயம் சாலையில் நான் என் மோட்டார் பைக்கில் வழக்கமாகத் தலையில் ஹெல்மெட்டுடன் சென்று கொண்டிருந்தேன். எனக்கு முன்னால் தினேஷ் தன் தாயை அவருடைய மோட்டார் பைக்கில் பின்புறம் அமர வைத்துச் சென்று கொண்டிருந்தார். அவசர வேலை காரணமாகவும் அது தினேஷ் தானா என்ற சந்தேகத்துடனும் நான் அவர் வண்டியை முந்திக் கொண்டு செல்ல எத்தனித்தேன். என்னைத் திரும்பித் திரும்பிப் பார்த்த அவருடைய தாய் தினேஷிடம் ஏதோ சொல்ல, தினேஷ் தன் வண்டியின் வேகத்தைக் கூட்டி முன்னோக்கிச் சென்று கொண்டேயிருந்தார். நானும் தினேஷின் உருவத்தை உறுதிபடுத்திக் கொள்ள என் வண்டியின் வேகத்தைக் கூட்டி அவரைப் பின் தொடர்ந்தேன். அதற்குள் நான் திரும்ப வேண்டிய திருப்பம் வந்தபடியால் நான் பிரிந்து வேறு திசையில் சென்று விட்டேன். இந்தச் சம்பவத்தைப் பற்றி வேறு ஒருநாள் தினேஷிடம் போனில் பேசிய போது,
 
“ ஓ…அது நீங்க தானா அண்ணா…எனக்குத் தெரியவில்லை” என்றார்.
 
“சரி ஏன் அவ்வளவு வேகமாக வண்டியை ஓட்டினீர்கள்.?” என்று கேட்டேன்.
 
“அம்மா சொன்னாங்க. எவனோ பின்னாடி கூடவே வர்றான். வழிப்பறித் திருடன் போல இருக்கு.
 கொஞ்சம் வேகமா போன்னு. அதான் கொஞ்சம் வேகமா போனேன். நீங்க ஹெல்மெட் போட்டிருந்ததால அது நீங்க தான்னு தெரியாம போச்சு” ன்னு சிரித்துக் கொண்டே சொன்னார்.
 
எப்படியிருக்கு பாருங்க. சரி அதை விடுங்கள். கொஞ்ச காலமாகவே தினேஷை கவனித்து வரும் அனைவருக்கும் தெரியும் அவரின் பதிவுகள் மிக அற்புதமான வெளிப்பாடுகளாக வருவதை.
 
அவற்றில் சில...
 
“தொலைத்ததையே தேடிக்கொண்டிருந்தால் கொலம்பஸ் போல் எப்படி ஆவது?”
 
“கடந்து வந்துவிட்டதால் அனைத்தையும் வென்று வந்ததாக அர்த்தம் இல்லை.”.
 
“தேடல் தொடங்கினாலும் தொலைவது குறைவதில்லை...“
 
“ஏற்றி விட ஏணிகள் தேவையில்லை, எண்ணங்கள் சரியாக இருந்தால் போதும்“
 
“ஐயமின்றி விளையாடும் அணில்களின் அழகை ரசிக்கவாவது மரங்கள் சூழ்ந்த கோயிலுக்கு மாதம் ஒரு முறையேனும் செல்ல வேண்டும்...“
 
“உளவியலோடு தொடர்புகொண்டது போல்தான் தெரிகிறது இந்த லைக்கியலும்..”.
 
பகடியும் அழகியலும் கூர்ந்த ஞானமும் கொண்டு தன் பதிவுகள் மூலம் தன்னை வெளிப்படுத்திவரும் தினேஷ் மேலும் மேலும் முகநுாலில் மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் உயர வேண்டும் என்று உங்களில் ஒருவனாய் வாழ்த்துகிறேன்.
 
 

சமரசமில்லா கலைஞனின் இறுதி வார்த்தை



அனேகமாக எனக்குத் தெரிந்து தமிழில் எக்ஸிஸ்டென்ஷியலிச நாவல் வடிவங்களைத் துலங்கவைத்த எழுத்தாளர் ஜி.நாகராஜன். அவர் கடும் நோய்வாய்ப்பட்டு மதுரை பொதுமருத்துவமனையில் மிக சிரமமான முறையில் தன் இறுதிநாட்களைக் கழித்தவர். இறப்பதற்கு முந்தைய இரவு கடும்குளிர் அவரை வாட்டியிருக்கிறது. அவர் தன் இலக்கிய மாணவன் ஒருவரிடம்,
 
“ரொம்ப குளிருது.....சிதையில் போய் படுத்துக்கொண்டால்தான் இனி என் குளிர் அடங்கும்” என்று கூறியிருக்கிறார்.
 
மறுநாள் காலையில் அவர் உயிர் பிரிந்தது. தன் முழு வாழ்க்கையையும் இலக்கியத்தையே சாட்சியாக வைத்து நகர்த்திய ஒரு கலைஞன் தன் இறுதிவார்தையைக் கூட ஓர் உன்னதமான இலக்கியப் பிரதியாக்கிவிட்டு மறைந்திருக்கிறார்.

அவரின் இரண்டு நாவல்கள்:
---------------------------------
-குறத்தி முடுக்கு
-நாளை மற்றுமொரு நாளே



 

யாழியின் கவிதை பற்றி....

நம் கவிதை நண்பன் யாழி அவருடைய கவிதைத் தொகுதி ஒன்றை எனக்கு (என் கைரேகை படிந்த கல்) அன்பளிப்பாகக் கொடுத்தார் என்று முந்தைய பதிவில் சொல்லியிருந்தேன். அதைச் சமீபத்தில் படித்தேன். படிப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவத்தைத் தர வல்ல நவீனக் கவிதைவகை அல்ல அவருடை கவிதைகள். நேரடியான பொருள் கொடுக்கக் கூடிய எளிய வகைக் கவிதைகள்தான். ஆனால் அற்புதமான கவிதைகள். நம்முடைய அன்றாட எண்ணங்களையே கவிதைச் சுவை கூட்டி நமக்குத் திருப்பிக் காட்டுபவை. மிக நுண்ணிய விஷயங்களைக் கூட தம் மொழியின் ஒளி கொண்டு வெளிச்சமிட்டுக் காட்டுபவை. அவருடைய பானையின் ஒரு சோறு இதோ உங்களுக்காக :
 

சந்தர்ப்பவாதம்
----------------------
சாக்கடையின் துார்களுக்காக
 வீட்டின் உட்பூச்சுக்காக
 புடைத்தெடுக்கப்படும் அரிசிக்காக
 மழிக்கப்படும் முகங்களுக்காக
 சில நேரங்களில்
 தள்ளி வைக்கப்படுகிறது
தீண்டாமையும்



-யாழி
 

ஒரு முதல் சந்திப்பு......




யாழி, நல்ல கவிதைக்காரர். இன்று கோவை சென்றிருந்தபோது ஏற்கனவே திட்டமிட்டபடி சந்திக்க எண்ணி போன் செய்தேன். ஒரு இலக்கியக் கூட்டத்தில் இருப்பதாகவும் இன்னும் சற்று நேரத்தில் முடிந்துவிடும் என்றும் சொல்லி வரச்சொன்னார். போனேன்.
அது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பாக நடந்து கொண்டிருந்த ஒரு கவிதை வாசிப்புக் கூட்டம். வாசலில் யாழி கரம் குலுக்கி உள்ளே அழைத்துச் சென்றார். அரங்கத்தில் சுமார் ஐம்பது தலைகள் இருந்தன. அதில் ஐம்பது சதவிகிதம் ஐம்பதைத்தாண்டியவர்கள். நடுத்தரம் கொஞ்சம். இளைஞர்கள் கொஞ்சம். நான்கு இளம் பெண்கள். நடுவயதை நெருங்கிய ஒரு திருநங்கை.
 
நாற்பது மதிக்கத்தக்க ஒடிசலான தேகன் ஒருவர் சில காகிதங்களைக் கையில் வைத்துக்கொண்டு கவிதை வாசித்துக் கொண்டிருந்தார். பள்ளி ஆண்டுவிழாக் கூட்டத்தில் எட்டாம் வகுப்புப் பிள்ளைகள் வாசிக்கும் கவிதைக்குச் சமமானதொரு ஆக்கம்தான். ஆனாலும் வாசிப்பவரிடம் ஒரு உத்வேகம் இருந்தது. அங்கு தொடர்ந்து இருக்க வேண்டிய அவசியம் எனக்கு இருப்பதாகப்படவில்லை.
 
நான் யாழியைத் திரும்பிப் பார்த்தேன். அவர் கற்பூரம். புரிந்துகொண்டார். போகலாம் என்றார். நாங்கள் எழுந்து வெளியெற எத்தனித்தவுடன் எங்களுக்கு முன் அமர்ந்திருந்த திருநங்கை எழுந்து வெளியேறினார். அவரைச் சிலர் பின் தொடர்ந்தனர். நாங்களும் வெளியே வந்தோம். வாசலில் அந்தத் திருநங்கையை மையப்படுத்தி ஒரு சிறுகூட்டம் கூடியது. கூடவந்த சிலர் உடனடிச் சிரிப்புகளைப் பொருத்திக்கொண்டு அவருடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். அவர் யார் என்று யாழியிடம் கேட்டேன். “அவர் ஒரு செக்ஸ்ஒர்க்கராக இருந்திருக்கிறார். ஒரு திருநங்கையாக தான் பட்ட வேதனைகளைப் பதிவு செய்ய எண்ணி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அவர்தான் இன்றைய கூட்டத்தின் சிறப்பு விருந்தினர். அவர் பேசி முடிக்க நீங்கள் வந்து சேர்ந்தீர்கள். பிறகுதான் கவிதை வாசிப்பு ஆரம்பித்தது என்றார்.
 
பேசிக்கொண்டே அரங்கத்தை விட்டு கொஞ்சதுாரம் வந்துவிட்டோம். யாழியின் சில முகநுால் நண்பர்கள் வந்திருந்தனர். அவர்களிடம் அறிமுகம் முடித்து இருவரும் கிளம்பினோம். கொஞ்சம் புறநகர் வந்து ஒரு தேனீர்க் கடையில் நுழைந்து அமர்ந்தோம். யாழி தன் இரண்டு கவிதைத் தொகுப்புகளை எனக்கு அன்பளித்தார். பரஸ்பர தகவல் பரிமாற்றம், எங்களுக்குத் தெரிந்த அளவிலான கவிதைகுறித்த நுட்பங்கள், பொதுவான இலக்கிச்சூழல், முட்டைபப்ஸ் மற்றும் தேனீருடன் எங்கள் முதல்சந்திப்பு இனிதே முடிந்தது. விடைபெற்றுக்கொண்டு திரும்பும் போது இருவருமே சந்தோஷமாக இருந்ததாக உணர்ந்தோம்.
 
 

கார்த்தி என்றொரு நண்பன்....

 

என்னால் ‘சகலை என்று அன்புடன் அழைக்கப்படும் நண்பன் கார்த்தியை உங்களில் சிலர் அறிந்திருப்பீர்கள். அவரைப்பற்றி நான் சொல்ல வேண்டியவை சில உண்டு.
தன் எண்ணம், சொல், செயல் இவற்றில் எப்பொழுதுமே ஒரு எளிமையைக் கடைபிடித்துவரும் கார்த்தி, தன்னைப்பற்றிக் கூறிக்கொள்ளும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத இயல்பும் அடக்கமும் கொண்டவர். அவரிடம் நான் கண்டு வியந்த ஒரு முக்கியமான விஷயம் அவருடைய துறவு மனம். எதிர்காலம் பற்றிய எந்த ஒரு அச்சமோ எதிர்மறை எண்ணமோ இன்றி வாழ்க்கையை அதன் போக்கில் மிக இயல்பாக எதிர்கொள்ளும் பாங்கும், தனக்கான எந்தவொரு தனித்துவத்தையும் ஏற்படுத்திக்கொள்ள விரும்பாமல் ஒரு பார்வையாளனாய்த் தன் சக நண்பர்களின் நடவடிக்கைகளை அணுகும் பக்குவமும் அவருக்கு வாய்க்கப்பட்டிருக்கும் ஒரு வரம்.
கார்த்தியுடனான உரையாடல்களின் போது நாம் எங்காவது தவறு செய்துவிட்டால் அல்லது அவருக்கு நம் கருத்து பிடிக்காவிட்டால் உடனடியாக தாட்சண்யம் ஏதுமின்றி முகத்துக்கு நேராக தன் மறுப்பைச் சொல்லிவிடுபவர். பிடிக்காத விஷயத்திலிருந்து எப்படித் தன்னை விடுவித்துக்கொள்வதென்று தெரியாமலேயே நம்மில் பலர் பிரச்சனைகளில் சிக்கிக் கொள்வதுண்டு. அந்த விஷயத்தில் கார்த்தி ஒரு தேர்ந்த வல்லுநர் என்றே சொல்லலாம். மிக நாசூக்காகத் தன்னை சிக்கல்களின் பிடியிலிருந்து விடுபடுத்திக் கொள்ளக்கூடியவர்.
கார்த்திக்கென்று ஒரு தனிச் சிறப்பு உண்டு. அது அவருடைய அபாரமான சினிமா ஞானம். உள்ளூர் சினிமா தவிர வேறு எதுவுமே அறியாத என்னை முதன் முதலில் உலக சினிமாவின் மாபெரும் கோட்டைக்குள் கைபிடித்து அழைத்துச்சென்று நடக்கவிட்டவர் கார்த்தி. சினிமாவை நாடு, மொழி, இயக்குநர் என்ற வகைப்பாடுகளின் கீழ் கொண்டுவந்து என் ரசிப்புத்தன்மையைக் கூர்மைப்படுத்தியவர் உலகசினிமாவில் கார்த்திக்கு உள்ள பரிச்சயம் அபாரமானது. ரகளையான ரசனை கொண்டது. அனேகமாக நாம் ஒரு படத்தின் பெயரைச் சொன்னாலே அது எந்த நாட்டின் சினிமா, அதன் இயக்குநர் யார் அதில் நடித்த நடிகர் நடிகையர் பெயர், அது வெளிவந்த ஆண்டு போன்ற விபரங்களைத் துல்லியத்துக்கு மிக நெருக்கமாகச் சொல்லிவிடக்கூடியவர். இவையெல்லாம் இணையத்திலேயே கிடைக்கக்கூடிய செய்திகள்தான். ஆனால் படங்களைப்பற்றிய தகவலோடு நிற்காமல் அந்தப் படத்தைப்பற்றிய தன் கூர்மையான விமர்சனத்தை மூன்று நான்கு வார்த்தைகளுக்குள் மிக அலாதியானதொரு உடல்மொழியின் துணைகொண்டு அற்புதமாகப் பகிரக்கூடியவர். அந்தப்படத்தின் மேலான ஆழந்த ரசனையின் பொருட்டு உருவாகிவந்த மனஉடல் ஒத்திசைவாகத்தான் அதை நான் காண்டு வருகிறேன். அனேகமாக அவர் அறிமுகம் செய்யும் படங்களைப் பிறகு நான் பார்க்க நேரிடும் போது அவருடைய நான்கு வரி விமர்சனம், அந்தப்படத்தின் மூலமாக நான் அடைந்த அனுபவத்துக்கு மிக நெருக்கமாகப் பொருந்துவதை உணர்ந்திருக்கிறேன்.
இனி வரும் எல்லா காலத்திலும் சினிமாவின் ரசனைக்குள்ளும் அதன் அறிவார்ந்த நுட்பத்துக்குள்ளும் நான் செயல்படும் பட்சத்தில் அது அத்தனையும் கார்த்திக்கே சமர்ப்பணம். ஆனால் கார்த்தி எப்போதும் தன்னைப்பற்றிச் சொல்லிக் கொள்வது, ”நான் ஒரு நுனிப்புல் மேய்பவன் என்றுதான்.