Wednesday, August 14, 2013

வா.மு.கோமு விழா - அங்கீகாரத்தின் தொடர்ச்சி...


புத்தக வெளியீட்டு விழா
 
 
கடந்த ஞாயிறு (11.08.2013) மாலை ஈரோட்டில் எழுத்தாளர் வா.மு.கோமுவினுடைய இரண்டு புத்தகங்களின் (தவளைகள் குதிக்கும் வயிறு ...மற்றும் பிலோமி டீச்சர்) வெளியீட்டு விழா நடந்தது. அதில் நானும் வாழ்த்துரை வழங்க முடிவாகியிருந்தது. கடந்த மாதம் அவருடைய எழுத்துகளை அங்கீகரித்து நான் எழுதிய கட்டுரையை படித்த நண்பர்கள் என்னையும் தேர்ந்தேடுத்தார்கள் என்று நினைக்கிறேன். நன்று.

இலக்கியக் கூட்டத்துக்கே உரிய அளவான கூட்டமும் எளிமையான மேடைச் சம்பிரதாயங்களுமாக விழா துவங்கியது. வா.மு.கோமுவின் எழுத்தை இதுநாள் வரை ‘பாலியல் எழுத்து’ என்று நிராகரித்துக் கொண்டிருந்த சில நண்பர்களும் விழாவுக்கு வந்திருந்தார்கள். புத்தகங்கள் வெளியிடப்பட்டன. அது குறித்துப் பேசப்பட்டது. வா.முவைப் பற்றி நான் ஏற்கனவே எழுதி வெளியிட்ட பதிவைக் கட்டுரையாக வாசித்தேன். இறுதியில் அவர் ஏற்புரை நிகழ்த்தினார். எல்லாம் சுபம்.

இந்தக் கூட்டம், வா.மு.கோமு பற்றிய பல முன்முடிவுகளைத் தகர்த்து அவருடைய எழுத்துகளை நிராகரித்த நண்பர்கள் மத்தியில் ஒரு மனமாற்றத்தை உருவாக்கியிருந்ததை உணரமுடிந்தது. அவரை நிராகரித்த நண்பர்கள், தங்கள் கருத்துக்களை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருப்பவர்களல்ல. நல்லதெனப்படும் பட்சத்தில் தங்கள் நிலைகளை எப்பொழுதுமே மறுபரிசீலனைக்கு உட்படுத்திக் கொள்ளக்கூடியவர்கள். கருத்துக்களை எளிதில் மக்களிடம் கொண்டு சேர்க்கக்கூடிய வல்லமை பெற்றவர்கள். அவர்கள் வா.மு.கோமுவின் எழுத்துகளைப் படித்து அதை அங்கீகரிக்கும் நிலை ஏற்படுமேயானால் வா.மு.கோமுவின் எழுத்து இன்னும் பல வாசகர்களைச் சென்றடையும்.

எனக்குப் பின்னால் வாழ்த்துரை வழங்க வந்த மோகனரங்கன் இப்படிச் சொன்னார் :

“நல்ல படைப்பாளிகளை முதலில் நாம் அலட்சியப்படுத்துகிறோம். பிறகு மெல்ல கவனிக்கிறோம். பிறகு அவர்களுடன் முரண்படுகிறோம். இறுதியாக அவர்களை ஏற்றுக் கொண்டு அங்கீகரிக்கிறோம்.”
 
*
வாசித்த கட்டுரையின் சுட்டி : http://veerawritings.blogspot.com/2013/07/blog-post_22.html
 
 
 
 
 
 

Tuesday, August 6, 2013

ஒரு முதல்சந்திப்பு

யாழி. என் முகநுால் நண்பர். நல்ல கவிதைக்காரர். இன்று கோவை சென்றிருந்தபோது ஏற்கனவே திட்டமிட்டபடி சந்திக்க எண்ணி போன் செய்தேன். ஒரு இலக்கியக் கூட்டத்தில் இருப்பதாகவும் இன்னும் சற்று நேரத்தில் முடிந்துவிடும் என்றும் சொல்லி வரச்சொன்னார். போனேன்.

அது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பாக நடந்து கொண்டிருந்த ஒரு கவிதை வாச...ிப்புக் கூட்டம். வாசலில் யாழி கரம் குலுக்கி உள்ளே அழைத்துச் சென்றார். அரங்கத்தில் சுமார் ஐம்பது தலைகள் இருந்தன. அதில் ஐம்பது சதவிகிதம் ஐம்பதைத்தாண்டியவர்கள். நடுத்தரம் கொஞ்சம். இளைஞர்கள் கொஞ்சம். நான்கு இளம் பெண்கள். நடுவயதை நெருங்கிய ஒரு திருநங்கை.

நாற்பது மதிக்கத்தக்க ஒடிசலான தேகன் ஒருவர் சில காகிதங்களைக் கையில் வைத்துக்கொண்டு கவிதை வாசித்துக் கொண்டிருந்தார். பள்ளி ஆண்டுவிழாக் கூட்டத்தில் எட்டாம் வகுப்புப் பிள்ளைகள் வாசிக்கும் கவிதைக்குச் சமமானதொரு ஆக்கம்தான். ஆனாலும் வாசிப்பவரிடம் ஒரு உத்வேகம் இருந்தது. அங்கு தொடர்ந்து இருக்க வேண்டிய அவசியம் எனக்கு இருப்பதாய்ப் படவில்லை.

நான் யாழியைத் திரும்பிப் பார்த்தேன். அவர் கற்பூரம். புரிந்துகொண்டார். போகலாம் என்றார். நாங்கள் எழுந்து வெளியெற எத்தனித்தவுடன் எங்களுக்கு முன் அமர்ந்திருந்த திருநங்கை எழுந்து வெளியேறினார். அவரைச் சிலர் பின் தொடர்ந்தனர். நாங்களும் வெளியே வந்தோம். வாசலில் அந்தத் திருநங்கையை மையப்படுத்தி ஒரு சிறுகூட்டம் கூடியது. கூடவந்த சிலர் உடனடிச் சிரிப்புகளைப் பொருத்திக்கொண்டு அவருடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். அவர் யார் என்று யாழியிடம் கேட்டேன். “அவர் ஒரு செக்ஸ்ஒர்க்கராக இருந்திருக்கிறார். ஒரு திருநங்கையாக தான் பட்ட வேதனைகளைப் பதிவு செய்ய எண்ணி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அவர்தான் இன்றைய கூட்டத்தின் சிறப்பு விருந்தினர். அவர் பேசி முடிக்க நீங்கள் வந்து சேர்ந்தீர்கள். பிறகுதான் கவிதை வாசிப்பு ஆரம்பித்தது” என்றார்.

பேசிக்கொண்டே அரங்கத்தை விட்டு கொஞ்சதுாரம் வந்துவிட்டோம். யாழியின் சில முகநுால் நண்பர்கள் வந்திருந்தனர். அவர்களிடம் அறிமுகம் முடித்து இருவரும் கிளம்பினோம். கொஞ்சம் புறநகர் வந்து ஒரு தேனீர்க் கடையில் நுழைந்து அமர்ந்தோம். யாழி தன் இரண்டு கவிதைத் தொகுப்புகளை எனக்கு அன்பளித்தார். பரஸ்பர தகவல் பரிமாற்றம், எங்களுக்குத் தெரிந்த அளவிலான கவிதைகுறித்த நுட்பங்கள், பொதுவான இலக்கிச்சூழல், முட்டைபப்ஸ் மற்றும் தேனீருடன் எங்கள் முதல்சந்திப்பு இனிதே முடிந்தது. விடைபெற்றுக்கொண்டு திரும்பும் போது இருவருமே சந்தோஷமாக இருந்ததாக உணர்ந்தோம்.
 
 
-2013 ம் ஆண்டு நண்பர்கள் தினத்தன்று எழுதப்பட்டது.
 
 
 

Sunday, August 4, 2013

கார்த்தி என்றொரு நண்பன்......

 
என்னால் ‘சகலை’ என்று அன்புடன் அழைக்கப்படும் கார்த்தி எனற நண்பனைப்பற்றிக் கொஞ்சம் எழுதவிரும்புகிறேன். முகநுாலில் என் ஃபிரண்ட் லிஸ்ட்டில் இருக்கும் பல பேருக்கு அவரிடம் முகநுாலின் மூலமாக அறிமுகம் ஏற்பட்டிருக்கும். சிலருக்கு நேரடியாகவும் அவரைத் தெரிந்திருக்கலாம்.
என்னைவிட அதிகமாக வலைப்பூவிலும் முகநுாலிலும் தொடர்புகொண்டிருக்கும் அவரைப்பற்றி நான் சொல்ல வேண்டியவை சில உண்டு.

தன் எண்ணம், சொல், செயல் இவற்றில் எப்பொழுதுமே ஒரு எளிமையைக் கடைபிடித்துவரும் கார்த்தி, தன்னைப்பற்றிக் கூறிக்கொள்ளும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத இயல்பும் அடக்கமும் கொண்டவர். அவரிடம் நான் கண்டு வியந்த ஒரு முக்கியமான விஷயம் அவருடைய துறவு மனம். எதிர்காலம் பற்றிய எந்த ஒரு அச்சமோ எதிர்மறை எண்ணமோ இன்றி வாழ்க்கையை அதன் போக்கில் மிக இயல்பாக எதிர்கொள்ளும் பாங்கும், தனக்கான எந்தவொரு தனித்துவத்தையும் ஏற்படுத்திக்கொள்ள விரும்பாமல் ஒரு பார்வையாளனாய்த் தன் சக நண்பர்களின் நடவடிக்கைகளை அணுகும் பக்குவமும் அவருக்கு வாய்க்கப்பட்டிருக்கும் ஒரு வரம்.

கார்த்தியுடனான உரையாடல்களின் போது நாம் எங்காவது தவறு செய்துவிட்டால் அல்லது அவருக்கு நம் கருத்து பிடிக்காவிட்டால் உடனடியாக தாட்சண்யம் ஏதுமின்றி முகத்துக்கு நேராக தன் மறுப்பைச் சொல்லிவிடுபவர். பிடிக்காத விஷயத்திலிருந்து எப்படித் தன்னை விடுவித்துக்கொள்வதென்று தெரியாமலேயே நம்மில் பலர் பிரச்சனைகளில் சிக்கிக் கொள்வதுண்டு. அந்த விஷயத்தில் கார்த்தி ஒரு தேர்ந்த வல்லுநர் என்றே சொல்லலாம். மிக நாசூக்காகத் தன்னை சிக்கல்களின் பிடியிலிருந்து விடுபடுத்திக் கொள்ளக்கூடியவர்.

கார்த்திக்கென்று ஒரு தனிச் சிறப்பு உண்டு. அது அவருடைய அபாரமான சினிமா ஞானம். உள்ளூர் சினிமா தவிர வேறு எதுவுமே அறியாத என்னை முதன் முதலில் உலக சினிமாவின் மாபெரும் கோட்டைக்குள் கைபிடித்து அழைத்துச்சென்று நடக்கவிட்டவர் கார்த்தி. சினிமாவை நாடு, மொழி, இயக்குநர் என்ற வகைப்பாடுகளின் கீழ் கொண்டுவந்து என் ரசிப்புத்தன்மையைக் கூர்மைப்படுத்தியவர் உலகசினிமாவில் கார்த்திக்கு உள்ள பரிச்சயம் அபாரமானது. ரகளையான ரசனை கொண்டது. அனேகமாக நாம் ஒரு படத்தின் பெயரைச் சொன்னாலே அது எந்த நாட்டின் சினிமா, அதன் இயக்குநர் யார் அதில் நடித்த நடிகர் நடிகையர் பெயர், அது வெளிவந்த ஆண்டு போன்ற விபரங்களைத் துல்லியத்துக்கு மிக நெருக்கமாகச் சொல்லிவிடக்கூடியவர். இவையெல்லாம் இணையத்திலேயே கிடைக்கக்கூடிய செய்திகள்தான். ஆனால் படங்களைப்பற்றிய தகவலோடு நிற்காமல் அந்தப் படத்தைப்பற்றிய தன் கூர்மையான விமர்சனத்தை மூன்று நான்கு வார்த்தைகளுக்குள் மிக அலாதியானதொரு உடல்மொழியின் துணைகொண்டு அற்புதமாகப் பகிரக்கூடியவர். அந்தப்படத்தின் மேலான ஆழந்த ரசனையின் பொருட்டு உருவாகிவந்த மனஉடல் ஒத்திசைவாகத்தான் அதை நான் காண்டு வருகிறேன். அனேகமாக அவர் அறிமுகம் செய்யும் படங்களைப் பிறகு நான் பார்க்க நேரிடும் போது அவருடைய நான்கு வரி விமர்சனம், அந்தப்படத்தின் மூலமாக நான் அடைந்த அனுபவத்துக்கு மிக நெருக்கமாகப் பொருந்துவதை உணர்ந்திருக்கிறேன்.

இனி வரும் எல்லா காலத்திலும் சினிமாவின் ரசனைக்குள்ளும் அதன் அறிவார்ந்த நுட்பத்துக்குள்ளும் நான் செயல்படும் பட்சத்தில் அது அத்தனையும் கார்த்திக்கே சமர்ப்பணம். ஆனால் கார்த்தி எப்போதும் தன்னைப்பற்றிச் சொல்லிக் கொள்வது, ”நான் ஒரு நுனிப்புல் மேய்பவன்” என்றுதான்.