Friday, May 17, 2013

பச்சைநீர்

எங்கிருந்தோ வந்தமர்ந்த
பறவை நான்
என் அலகு உனக்குள்
இறங்கிய மறுகணமே
தெரிந்துவிட்டது
பச்சயம் வற்றிப்போன
பட்ட மரம் நீ என்று

வெந்நீர் உற்றப்பட்ட
உன் வேர்களுக்கு
துளிர்க்கும் ஆசை
துளியளவு இருப்பினும்
எங்கிருந்தேனும் வந்துசேரும்
உனக்கான பச்சைநீர்

Sunday, May 12, 2013

அந்திநேரம்

ஒளிக்குள்
நிகழ்ந்த
கலப்படம்

அம்மா என்னும் வார்த்தை

பித்துக்குப் பிறந்து
தத்துக்கு வளர்ந்து
கத்துக்குப் பால் குடித்து
கவனிப்பாரற்றுக்
கிடந்த எனக்கு
அம்மா என்பது
வெறும் வார்த்தைதான்



-அன்னையர் தினத்தன்று எழுதியது

நேசம்

உனக்கு நானும்
எனக்கு நீயும்
ஊட்டிய சோற்றில்
எச்சில் போலக்
கலந்திருக்கிறது
உனக்கும்
எனக்குமான
நேசம்

பாதை

உன்
நெற்றியில் திரண்டு
காதருகே வழிந்து
கழுத்தில் இறங்கும்
வியர்வைத்துளி்
உருவாக்கிச் சென்றது
எனக்கான ஒரு
ஒற்றையடிப்பாதையை

Thursday, May 9, 2013

வெளிச்சம்

அந்திநேரத்து
வெளிச்சத்தைச் சிறகுகளால்
வழித்துக் கொண்டு
கூடுதிரும்பும் பறவைக்குத் தெரியும்

மீண்டும் அதிகாலை
தானே அதைக் கொண்டுவந்து
இந்த வெளியில்
விசிறியடித்துவிட்டுச்
செல்வோம் என்று.

சுத்தம்

வெட்டப்படாத சிகை
சற்றே அழுக்கேறிய நகஇடுக்கு
துவைக்கப்படா ஜீன்ஸ் குர்தா
ஒழுங்குபடுத்தப்படா அறை
ஆனாலும் சுத்தமாகத்தான் நீ !!

வலி

வார்த்தைகளுக்கு இடையில்
இட்டு நிரப்பிய
மௌனத்திற்குள் மறைந்திருந்தது
வாழ்க்கையின் வலி.