இன்று பெங்களூரில் என் தங்கச்சி ஒருத்தியை முதன்முதலாகப் பார்த்தேன். என் சித்தப்பாவின்
மகள். பெயர் நவநிதி. எங்களுடைய குடும்பங்கள் காலச்சூழ்நிலையின் காரணமாகப் பல வருடங்கள்
சந்தித்துக்கொள்ள முடியாமல் போய்விட்டது. இன்றுதான்
அவளைப் பார்த்தேன். ஒன்பது வயது இருக்கும். ஐந்தாம் வகுப்புப் படிக்கிறாள். மிகமிகப்
புத்திசாலிப்பெண். நல்ல வாயாடியும் கூட. சட்டென்று என்னிடம் ஒட்டிக்கொண்டாள். அவளிடம்
பேசிக்கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றுகிறது.
நான் நவநிதியிடம் உன்னை எப்படி அழைப்பது என்று கேட்டேன். ”நவி…..என்று கூப்பிடுங்கள்“ என்று கூறினாள். என்
கதைகளை, கவிதைகளைக் காட்டினேன். படித்துப் பார்த்துவிட்டு (கவனியுங்கள் ஆங்கிலவழிப்பள்ளியில்
படிக்கும் பெண் சரசரவென்று தமிழை வாசிக்கிறாள்.) “அண்ணா நான் ஒரு கவிதை சொல்லட்டுமா?”
என்றாள். ”ஓ சொல்லேன்” என்றதும் ”கழுதைக்குத் தெரியுமா கற்பூரவாசனை ” என்று சொல்லிவிட்டு,
”ஹி...ஹி…ஹி…..எப்படி இருக்கு கவிதை” என்றாள். நான் எழுதுவதை விட இது எவ்வளவோ மேல்
என்று நினைத்துக் கொண்டேன்.